தமிழ் சினிமா ரசிகர்களுக்கு தன் கேமரா மூலம், ஓவியமாய் கண்களுக்கு விருந்து படைத்தவர் பி.சி.ஸ்ரீராம். மீண்டும் ஒரு காதல் கதையில் தொடங்கி மவுன ராகம், நாயகன், அக்னி நட்சத்திரம், தேவர் மகன், குருதி புனல், அலைபாயுதே, பா, என்று அவர் கேமரா தூக்கிய அத்தனை படங்களும் மாபெரும் வெற்றி பெற்றவை. அதிலும் அவர் இயக்கி, ஒளிப்பதிவு செய்த குருதிபுனல் படம் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது குறுப்பிடத்தக்கது. உலக அளவில் தமிழ் சினிமாவை பேச வைத்த பெருமை இவருக்கு உண்டு. இவரிடம் உதவியாளர்களாக இருந்து இப்போது, தமிழ் சினிமாவில் கலக்கி வரும் நீரவ் ஷா, கே.வி.ஆனந்த், கதிர், பாலசுப்ரமணியம், திரு, வேல்ராஜ், பிரபு என்ற பல பிரபலங்களையும் உருவாக்கிய பெருமை இவருக்கு உண்டு.
சாதனைகள் பல படைத்தாலும், பி.சி.யின் வாழ்விலும் ஒரு சோகம் எட்டி பார்த்துள்ளது. சமீபத்தில் இவரது ஒரே ஆசை மகள் இறந்து போனது, அவரை வீட்டுக்குள் முடக்கி வைத்துள்ளது. அதிலிருந்து மீள முடியாமல் ரொம்பவே தவித்து வருகிறார். கற்பனை குதிரை கட்டி, காமிராவை தூக்கி ஓடியவர், இன்று கண் கலங்கி நிற்கிறார். வார்த்தைகள் இல்லாமல் வலிகளோடு வாழும் பி.சி.யை நாம் சந்தித்த போது, நம்மாலும் உணர முடிந்தது. சமீபத்தில் தவிர்க்க முடியாமல் இளையராஜாவை வைத்து, ஒரு விளம்பரம் இவரால் எடுக்கப்பட்டுள்ளது. அழகும், நேர்த்தியும் குறையாமல் அப்படியே ஜொலிக்கிறது அந்த விளம்பரம்.
நாம் அவரிடம் பேசியபோது, வார்த்தைகள் முட்டி, வலிகளோடு பேசினார். நான் நிறைய படங்கள் பண்ணியிருக்கேன், விளம்பரமும் எடுத்திருக்கேன். படங்கள் சிலவற்றை சீக்கிரம் எடுத்து முடிச்சிருக்கேன். பா படத்தை 80 நாளில் எடுத்தேன், ஆனா அதற்கான பேப்பர் வொர்க் கிட்டத்தட்ட நான்கு மாதம் பண்ணிணேன். இப்பெல்லாம் விஞ்ஞானம் ரொம்பவே முன்னேறிடுச்சு. ரெட் ஒன், எஸ்12கே., என்று ஏகப்பட்டது வந்திடுச்சு. என்னதான் லேட்டஸ்ட் வந்தாலும் அதில் தரம் ரொம்ப முக்கியம். மக்கள் இப்ப ரொம்ப தெளிவா இருக்காங்க, நல்லத ரசிக்கிறாங்க, எல்லாத்துக்கும் மேல கற்பனைத்திறன் ரொம்ப முக்கியம்.
நான் ஜோதிகாவை வைத்து காபி விளம்பரத்தை ரெண்டு நாள் சூட் பண்ணிணேன். ஆனா அதற்கான பேப்பர் வொர்க் பல நாள். இப்ப கூட ராஜாவாவை வைத்து ஒரு விளம்பரம் பண்ணிணேன். ஒரு நாள் சூட் தான், ஆனா பேப்பர் வொர்க் நிறைய பண்ணிணேன். எந்த வேலையாக இருந்தாலும் கான்செப்ட் புரிஞ்சு வேலை பார்க்கணும். அப்பன்னாத்தான் ரீச்சாகும். விளம்பரத்தை மக்கள் கிட்ட சேர்க்க போட்டிகள் நிறைய இருக்கு, அதுக்கு தரமும் ரொம்ப முக்கியம் என்றவரிடம் மீண்டும் எப்ப சார் படத்தில வொர்க் பண்ணுவீங்க என்று கேட்டால், ஒரு அமைதி மட்டுமே பதிலாய் வருகிறது.
கலரையும், காட்சிகளையும் கவிதை போல அமைத்த பி.சி.ஸ்ரீராம் மீண்டும் சினிமாவிற்கு வந்தால், தமிழ் சினிமா அடுத்த கட்டம் செல்ல அவர் பேர் உதவியாய் இருப்பார். இன்னும் பலர் அவரை போல, தமிழ் சினிமாவை உலகத்தரத்திற்கு எடுத்து போவர் என்பது எள் அளவும் சந்தேகம் இல்லை.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?