Wednesday, 19 October 2011

‘மாத்தி யோசி”: தி.க. வீரமணி ஜெ.வுக்கு திடீர் ஆதரவு- கருணாநிதிக்கு ‘கொட்டு’!

 

சென்னை: காவிரி நதி நீர் விவகாரத்தில் முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அரசு எடுக்கும் நல் முயற்சிகளுக்கு திராவிடர் கழகம் துணை நிற்கும் என்று அந்த அமைப்பின் தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.

அவர் விடுத்துள்ள அறிக்கையில், காவிரி நதி நீர்ப் பங்கீடுபற்றி நாம் போராடிப் பெற்ற உரிமைகளில் ஒன்று காவிரி நடுவர் மன்றம். பல ஆண்டுகளுக்குப் பிறகு இறுதித் தீர்ப்பினை காவிரி நதி நீர் நடுவர் மன்றம் நமக்கு 2007ல் வழங்கியது.

அதன்படி நமக்கு ஆண்டுதோறும் கர்நாடக அரசு வழங்க வேண்டிய நீர்ப் பங்கீடு, சில, பல ஆண்டுகளில் தவறுவதும், கிருஷ்ண சாகர், கபினி போன்ற அணைகள் நிரம்பி வழியும் போது அணைகளைப் பாதுகாக்க, தண்ணீரைத் திறந்து விடுவதும் அதன் காரணமாக மேட்டூர் அணை நிரம்புவதும், அந்த கணக்கினையும் காட்டி, தர வேண்டிய பாக்கி நீரைக் கணக்கிட்டு கர்நாடகம் கூறுவதும் வாடிக்கை ஆகிவிட்டது.

2007ல் வெளியிட்ட காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பினை மத்திய அரசு தனது அரசிதழில் வெளியிடாமல் இருப்பது மிகவும் வியப்பையும், வேதனையையும் நமக்கு அளிக்கிறது. மத்திய அரசு இதில் மெத்தனப் போக்கைக் கடைப்பிடித்து, கடந்த 4 ஆண்டு காலம் காலதாமதம் செய்துவருவது ஏன் என்று புரியவில்லை.

தமிழ்நாட்டிற்கு நாம் சலுகை கேட்கவில்லை. நீதிமன்ற ஆணையை சட்டப்படி அரசிதழில் வெளியிட வேண்டிய கடமையை ஏன் செய்யவில்லை என்றுதான் மத்திய அரசிடம் நமக்குள்ள உரிமையை வற்புறுத்துகிறோம்.

முதல்வர் ஜெயலலிதா இதுபற்றி பிரதமருக்கு கடிதம் எழுதி வற்புறுத்தியிருப்பதற்கு அரசியல் கட்சி கண்ணோட்டமின்றி தமிழ்நாட்டு விவசாயிகளின் ஒட்டுமொத்த நலனைப் பாதுகாக்க அனைத்துக் கட்சிகளும், சமூக அமைப்புகளும் ஒருங்கிணைந்து குரல் கொடுத்து நம் ஒன்றுபட்ட ஒருமித்தகுரலை எழுப்பிடத் தவறக் கூடாது.

கர்நாடக அரசியலில் ஒரு கட்சியை எதிர்த்து மற்றொரு கட்சி நடத்தினாலும், காவிரி நதி நீர்ப் பிரச்சனை போன்ற அவர்களது மாநிலப் பிரச்சனைகளில் ஒரே அணியில் நின்று குரல் கொடுக்கின்றனர். தமிழ்நாட்டில் மாத்திரம், இதுபோன்ற பொது உரிமைப் பிரச்சனைகளில் ஏன் ஒற்றுமை இல்லை?.

அரசியல் பார்வைகளால் ஒருவரை மற்றொருவர் விமர்சிப்பது- வாதங்கள்- எதிர்வாதங்களுக்கே நமது நேரம் செலவழிக்கப்பட்டு, ஒற்றுமையே காணாமற் போய்விடும் வேதனையான நிலை – இனி மேலாவது இருக்கக்கூடாது.

ஆளுங்கட்சியும் முதல்வரும் அனைத்துக் கட்சிகளின் ஆதரவினையும் திரட்ட முயற்சிக்க வேண்டுமே தவிர, கடந்த கால குற்றச்சாட்டுகளைப் புதுப்பித்து, பொது எதிரிகள் மகிழும் வண்ணம் நமது நதிகள் உரிமை பறிபோக இடமளிக்காது சிறப்பாக செயல்பட வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறோம். அரசு எடுக்கும் நல் முயற்சிகளை திராவிடர் கழகம் வரவேற்று, விரைந்து செயலாக்க துணை நிற்கும் என்று கூறியுள்ளார்.

0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger