புதுடில்லி: ""இங்கிலாந்துக்கு எதிராக அடுத்தடுத்து இரண்டு இமாலய வெற்றியை பதிவு செய்ததற்கு, இளம் வீரர்களின் எழுச்சியே காரணம்," என, இந்திய கேப்டன் தோனி பாராட்டியுள்ளார்.
இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி, ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கிறது. முதலிரண்டு போட்டிகளில் வென்ற இந்திய அணி 2-0 என முன்னிலை வகிக்கிறது.
இதுகுறித்து இந்திய கேப்டன் தோனி கூறியதாவது:
இங்கிலாந்துக்கு எதிராக இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது மகிழ்ச்சி அளிக்கிறது. கடந்த இரண்டு போட்டிகளில் இளம் வீரர்களின் செயல்பாடு சிறப்பாக இருந்தது. இளம் வீரர்களின் எழுச்சி, அடுத்து வரும் போட்டிகளில் வெற்றிக்கு முக்கிய பங்குவகிக்கும் என நம்புகிறேன்.
டில்லி போட்டியில் விராத் கோஹ்லியின் பேட்டிங் அருமையாக இருந்தது. அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இவர் சதம் அடித்தது பாராட்டுக்குரியது. "டாப்-ஆர்டரில்' இவரை போன்ற இளம் வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதன்மூலம், "மிடில்-ஆர்டரில்' களமிறங்கும் பேட்ஸ்மேன்கள் நெருக்கடி இல்லாமல் ரன் சேர்க்க முடிகிறது. இவரது பேட்டிங் ஸ்டைலில் நல்ல முன்னேற்றம் காணப்படுகிறது. இதேபோல முக்கியமான நேரத்தில் இவர், பவுலிங்கில் சிறப்பாக பந்துவீசுகிறார். இதனால் எதிரணியின் ரன்வேட்டை தடுக்கப்படுகிறது.
காயத்தில் இருந்து மீண்ட காம்பிர், தனது "பார்மை' தக்க வைத்துக் கொண்டது சிறப்பம்சம். மூன்றாவது வீரராக களமிறங்கி, இங்கிலாந்து பந்துவீச்சை சமாளித்த விதம் அருமையாக இருந்தது. தற்போதைய சூழ்நிலையில், இந்திய அணி எந்த ஒரு இலக்கையும் எளிதாக "சேஸ்' செய்யும் என நம்புகிறேன்.
பவுலிங்கில், கடந்த இரண்டு போட்டியில் சிறப்பாக செயல்பட்டதற்கும், இங்கிலாந்து மண்ணில் சோபிக்காததற்கும் தனிப்பட்ட காரணம் எதுவும் கூற முடியாது. ஆனால் இங்கிலாந்து மண்ணில் பந்து ஈரமடைந்ததால், பவுலர்களுக்கு சற்று சிரமமாக இருந்தது.
டங்கன் பிளட்சர், சிறப்பாக பயிற்சி அளித்து வருகிறார். இங்கிலாந்து மண்ணில் வழங்கிய அதே பயிற்சியைதான் தற்போதும் அளிக்கிறார். போட்டியில் வெற்றி பெற சரியாக திட்டமிட்டும், சில நேரங்களில் எடுபடாததால், பயிற்சியாளர் மீது விமர்சனம் எழத்தான் செய்யும். எந்த ஒரு வீரரும், மைதானத்தின் தட்பவெப்பநிலை மற்றும் ஆடுகளத்தின் தன்மைக்கேற்ப ஆட்டத்தை மாற்றிக் கொள்ளாவிட்டால், பயிற்சி மேற்கொள்வதில் பலனில்லை.
யாதவ் அபாரம்:
ஜாகிர் உள்ளிட்ட அனுபவ வேகங்கள் இல்லாத நிலையில், பிரவீண் குமார் நம்பிக்கை அளிப்பது மகிழ்ச்சியாக உள்ளது. இவருக்கு, இளம் வேகப்பந்துவீச்சாளர் உமேஷ் யாதவ் நல்ல முறையில் ஒத்துழைப்பு அளிப்பது பாராட்டுக்குரியது. இவர், தனது உடற்தகுதியில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். அப்போதுதான் காயம் உள்ளிட்ட பிரச்னைகளில் இருந்து தப்ப முடியும். தொடர்ந்து நிறைய போட்டிகளில் விளையாடும் பட்சத்தில் விரைவில் இவர், முன்னணி வேகப்பந்துவீச்சாளராக மாற அதிக வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு தோனி கூறினார்.
இங்கிலாந்துக்கு எதிரான எஞ்சிய மூன்று ஒருநாள் போட்டிக்கான அணியில் அனுபவ சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜனுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. கடந்த இரு போட்டிகளில் அஷ்வின், ரவிந்திர ஜடேஜா உள்ளிட்ட இளம் வீரர்கள் "சுழலில்' அசத்தினர். இதையடுத்து மீதமுள்ள போட்டிகளுக்கான அணியில் அதே வீரர்களே நீடிப்பார்கள் என பி.சி.சி.ஐ., தேர்வுக்குழு அறிவித்தது.
இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஒரே ஒரு "டுவென்டி-20′ போட்டி வரும் 29ம் தேதி கோல்கட்டாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடக்கவுள்ளது. இப்போட்டிக்கான இந்திய அணியில் ராபின் உத்தப்பா, யூசுப் பதான் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். திருமணம் காரணமாக துவக்க வீரர் காம்பிர், "டுவென்டி-20′ போட்டியில் இருந்து விலகியுள்ளார். மற்றபடி ஒருநாள் தொடருக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள வீரர்கள், "டுவென்டி-20′ அணியிலும் இடம் பிடித்துள்ளனர்.
கடந்த இரு போட்டிகளில் வென்ற இந்திய அணி, ரேங்கிங் பட்டியலில் ஐந்தாவது இடத்தில் இருந்து நான்காவது இடத்துக்கு(115 புள்ளி) முன்னேறியது. இங்கிலாந்து ஐந்தாவது இடத்துக்கு(110 புள்ளி) தள்ளப்பட்டது.
இந்திய அணி மூன்றாவது இடம் பிடிக்க வாய்ப்பு உள்ளது. இதற்கு, இங்கிலாந்துக்கு எதிரான எஞ்சிய ஒருநாள் தொடரை 5-0 என கைப்பற்ற வேண்டும். அதேவேளையில், தென் ஆப்ரிக்க அணி, முதலிரண்டு ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வி அடைய வேண்டும். தற்போது, முதல் மூன்று இடங்களில் ஆஸ்திரேலியா (130 புள்ளி), இலங்கை (119 புள்ளி), தென் ஆப்ரிக்கா (116 புள்ளி ) அணிகள் உள்ளன.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?