மக்களே, என்னை ஒருமுறை ஆட்சியில் அமர்த்திப் பாருங்கள். எனக்கு ஒருமுறை வாய்ப்பு கொடுத்துப் பாருங்கள் என்று தன்னை முதல்வராக்குமாறு மக்களிடம் முதல் முறையாக மறைமுகமாக வேண்டுகோள் விடுத்துள்ளார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்.
இதுவரை எனது கட்சிக்கு வாய்ப்பளியுங்கள் என்றுதான் விஜயகாந்த் பிரசாரம் செய்து வந்தார். இந்த நிலையில் முதல் முறையாக தன்னை ஒருமுறை ஆட்சியில் அமர்த்திப் பாருங்கள் என்று மறைமுகமாக தன்னை முதல்வராக்குமாறு கோரி பிரசாரம் செய்துள்ளார் விஜயகாந்த்.
ராமநாதபுரத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தல் பிரசாரத்தில் கலந்து கொண்டு விஜயகாந்த் பேசுகையில்,
உள்ளாட்சித் தேர்தலில் எனது கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள். எனக்கு வாய்ப்பு தந்தால் லஞ்சத்தை ஒழிப்பேன். வெற்றிபெற்று வரும் என் கட்சி வேட்பாளர்கள் யாரையும் லஞ்சம் வாங்க விடமாட்டேன். லஞ்சம் வாங்கினால் அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுப்பேன்.
நான் கட்சி ஆரம்பித்த புதிதில் என்னை விலைக்கு வாங்கப் பார்த்தார்கள். லஞ்சம் வாங்கியிருந்தால், குறுகிய காலத்தில் எதிர்க்கட்சி வரிசையில் உட்கார்ந்திருக்கலாம். ஆனால், மக்களுக்காக குரல் கொடுக்க முடியாமல் போயிருக்கும். நான் போராட்ட குணம் உடையவன். போராடி, போராடித்தான் இதுவரை வெற்றி பெற்று வந்திருக்கிறேன்.
ஒரே ஒரு முறை என்னை ஆட்சியில் அமர்த்திப் பாருங்கள். எனக்கு சந்தர்ப்பம் தந்து பாருங்கள். ஆட்சியில் இல்லாமல் இருக்கும்போதே எனது சொந்தப் பணத்தில் பல்வேறு நலத் திட்ட உதவிகளை செய்து வருகிறேன்.
என் பிறந்த நாளன்று பிறக்கும் குழந்தைகளுக்கு ரூ.10 ஆயிரம் பரிசாகத் தந்து, அக்குழந்தை திருமண வயதை எட்டும்போது பெரிய தொகை கிடைக்கும் வகையில் செய்திருக்கிறேன். இலவசமாக கணினிக் கல்வியை ஏழை மாணவர்களுக்கு வழங்கி வருகிறேன்.
வேலை இல்லாமல் இருப்பதால்தான் தீவிரவாதம் உருவாகிறது. எனவே, வேலை இல்லாமல் இருக்கும் அனைவருக்கும் வேலைவாய்ப்பு தர வேண்டும்.
நான் ஆட்சிக்கு வந்தால் அனைவருக்கும் வேலைவாய்ப்பு ஏற்படுத்திக் கொடுப்பேன். ரேஷன் பொருள்கள் வீடுதேடி வரும்படி செய்வேன் என்றார் விஜயகாந்த்.
இதுவரை இருந்த பிரசாரப் பேச்சு மாறி, என்னை ஒருமுறை ஆட்சியில் அமர்த்திப் பாருங்கள் என்று விஜயகாந்த் பேசியிருப்பது தேமுதிகவினரிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?