Sunday, 2 October 2011

`ராணா' படம் கைவிடப்பட்டதா? தயாரிப்பு நிறுவனம் விளக்கம்

 
 
 
ரஜினிகாந்த் 3 வேடங்களில் நடிக்க, கே.எஸ்.ரவிகுமார் டைரக்ஷனில், `ராணா' என்ற பிரமாண்டமான படத்தை தயாரிக்க ஈராஸ் நிறுவனம் திட்டமிட்டது. இதில், ரஜினிகாந்தின் ஒரு ஜோடியாக தீபிகா படுகோனே ஒப்பந்தம் செய்யப்பட்டார். படப்பிடிப்பு தொடக்க விழா, கடந்த ஏப்ரல் மாதம் 29-ந் தேதி, ஏவி.எம். ஸ்டூடியோவில் நடந்தது.
 
அதில் கலந்துகொண்ட ரஜினிகாந்துக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக மைலாப்பூரில் உள்ள இசபெல்லா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். பின்னர், போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருடைய சிறுநீரகம் பாதிக்கப்பட்டிருப்பதை டாக்டர்கள் கண்டுபிடித்தார்கள்.
 
அவருக்கு, `டயாலிசிஸ்' செய்யப்பட்டது. மேலும் அவருக்கு உயர் சிகிச்சை தேவைப்பட்டதால், சிங்கப்பூர் கொண்டு செல்லப்பட்டு அங்குள்ள மவுன்ட் எலிசபெத் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். சுமார் இரண்டு மாத காலம் அங்கு தங்கியிருந்து சிகிச்சை பெற்றபின், ரஜினிகாந்த் உடல் நிலை தேறியது. அதன்பிறகு அவர் சென்னை திரும்பினார்.
 
இந்த நிலையில், ரஜினிகாந்த் `ராணா' படத்தில் நடிப்பாரா? என்ற கேள்வி எழுந்தது. அதற்கு டைரக்டர் கே.எஸ்.ரவிகுமார், ``ராணா படப்பிடிப்பு மீண்டும் தொடங்கும். அந்த படத்தில் ரஜினிகாந்த் நிச்சயமாக நடிப்பார்'' என்று பதில் அளித்தார். ரஜினிகாந்தின் உடல்நிலையை கருதி, கதையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டிருப்பதாக அவர் கூறினார்.
 
நேற்று, `ராணா' படம் கைவிடப்பட்டு விட்டதாக மீண்டும் ஒரு தகவல் பரவி, பரபரப்பை ஏற்படுத்தியது. `ராணா,' ஒரு வரலாற்று படம். ராஜாக்கள் சம்பந்தப்பட்ட கதை. அதில், ரஜினிகாந்த் குதிரை சவாரி செய்வது போல் பல காட்சிகள் வருகின்றன. ரஜினிகாந்தின் இப்போதைய உடல்நிலை குதிரை சவாரிக்கு இடம் கொடுக்காது என்பதால், `ராணா' கைவிடப்பட்டு விட்டதாகவும், அதற்கு பதில் வேறு ஒரு படம் தொடங்கப்படுவதாகவும் சினிமா வட்டாரத்தில் ஒரு தகவல் பரவியது.
 
ஆனால், இந்த தகவலை `ராணா' படத்தை தயாரிக்கும் ஈராஸ் நிறுவனம் மறுத்தது. ``ரஜினிகாந்தின் உடல்நிலையை கருதி, `ராணா' படத்தின் கதையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டது உண்மை. ரஜினிகாந்த் இப்போது நன்றாக இருக்கிறார். அவருடைய உடல்நிலை ஆரோக்கியமாக இருக்கிறது.
 
தினமும் நடைபயிற்சி செய்கிறார். எங்களுக்கு எந்த அவசரமும் இல்லை. ரஜினிகாந்த் உடல்நிலை இன்னும் வலுவான பிறகு படப்பிடிப்பை வைத்துக் கொள்ளலாம் என்று இருக்கிறோம். எந்த காரணத்தை கொண்டும் `ராணா' படத்தை கைவிட மாட்டோம்'' என்று ஈராஸ் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

 


0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger