பெட்ரோல் தட்டுப்பாடு காரணமாகச் சாலைகளில் வாகனங்கள் ஓட முடியாத சூழ்நிலை. அப்போது திருச்சியில் இருந்து காரைக்காலுக்கு ஒரு லாரியில் 2,000 லிட்டர் டீசலை நாயகன் சந்துரு (சபீர்) கொண்டுசெல்கிறார். இதன் பின்னணியில் ஒரு பெரிய சூழ்ச்சி வலை பின்னப்பட்டுள்ளது. இதை அறியாத சந்துரு லாரியை ஓட்டிச் செல்கிறார். வழியில் இரண்டு ஜோடிகள் வேறு அவரிடம் அடைக்கலம் கோருகின்றன. அவர்களையும் தன்னுடன் அழைத்துக்கொள்கிறார். தம்பி ராமையாவும் வழியில் ஏறிக்கொள்கிறார்.
பயணத்தின் இடையே ஏற்படும் சம்பவங்களால், தான் ஒரு சூழ்ச்சியில் சிக்கவைக்கப்பட்டுள்ளோம் என்பதை உணர்ந்துகொள்ளும் சந்துரு அதிலிருந்து மீள்கிறாரா, டீசலை எங்கு, எதற்காகக் கொண்டு செல்கிறார், அந்த ஜோடிகள் யார் போன்ற விஷயங்களைத் திடுக்கிடும் காட்சிகளால் சொல்லும் டிராவல் மூவியே 'நெருங்கி வா முத்தமிடாதே'.
ஏ.எல்.அழகப்பன் காளீஸ்வரன் என்னும் அரசியல்வாதியாக நடித்துள்ளார். அவரிடம் லாரி டிரைவராக இருக்கிறார் சந்துரு. ஆனால் சந்துருவின் தந்தை சுப்பிரமணியன் (ஒய்.ஜி.மகேந்திரன்) அதே ஊரில் பெட்ரோல் பங்க் நடத்துகிறார். அவருடைய மனைவி அம்பிகா. பணக்கார வீட்டுப் பையனாக இருந்தும் படிப்பில் ஆர்வம் இன்றி அனைவருக்கும் உதவுபவராகச் சுற்றித் திரிகிறார் அவர்.
நாயகி மாயா (பியா பாஜ்பாய்) அவரது அம்மா (விஜி சந்திரசேகர்) இருவருக்கும் இடையில் அடிக்கடி பிரச்சினை ஏற்படுகிறது. தன் தாயின் நடத்தை மீது மகளுக்குச் சந்தேகம். ஏனெனில், தந்தை யார் என்பது மாயாவுக்குத் தெரியாது. அதனால் ஏற்பட்ட கோபத்தை வெளிப்படுத்திக்கொண்டே இருக்கிறார். மலேசியாவுக்கு ஓர் இசை நிகழ்ச்சிக்காக மாயாவின் அம்மா செல்கிறார். அன்று இரவு நண்பர்களுடன் ஜாலியாகச் செலவிடும் மாயா இடையில் நண்பன் ராகவுடன் வெளியில் கிளம்புகிறார். போன இருவரையும் காணவில்லை.
சமூகத்தின் மேல் அடுக்கில் உள்ள சாதியைச் சேர்ந்த மேகாவுக்கும், ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த பிச்சைக்கும் காதல். இதற்கு எதிர்ப்பு வர இருவரும் ஊரைவிட்டு ஓடுகின்றனர். இதனிடையே தேச விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட ஒருவரைக் காவல்துறையினர் தேடி வருகின்றனர். இந்த அனைத்து அத்தியாயங்களையும் ஒன்றாக இணைத்தபடி செல்லும் லாரி காரைக்கால் சென்று சேரும்போது படம் முடிந்துவிடுகிறது.
தேசத் துரோக நடவடிக்கை, கேங் ரேப், சாதி ஒழிப்பு போன்ற சமூகப் பிரச்சினைகள், தாய்-மகள், தந்தை-மகன் ஆகிய குடும்ப உறவுகளிடையே ஏற்படும் சிக்கல்கள் எனப் பல விஷயங்களை ஒரே படத்தில் பேச முயன்றிருக்கிறார் இயக்குநர் லட்சுமி ராமகிருஷ்ணன். ஆனால், அதற்குத் தேவையான உணர்வுபூர்வமான காட்சிகளை உருவாக்குவதில் மிகவும் பின்தங்கிவிட்டார். பெட்ரோல் தட்டுப்பாட்டின் பாதிப்பைப் புரியவைக்க அழுத்தமான காட்சிகள் இல்லை. வெறும் தொலைக்காட்சிச் செய்திகளை வைத்து அதன் வீரியத்தை உணர்த்தும் முயற்சி வெற்றிபெறவில்லை.
ரோடு மூவி படங்களில் காணப்படும் விறுவிறுப்பு இப்படத்தில் இல்லை. சுவாரஸ்யமான காட்சிகளோ ரசனையான பாடல்களோ, காட்சிக்குத் தேவையான இசையோ இல்லாததால் பெரிய திரையில் சின்னத்திரைத் தொடரைப் பார்ப்பது போன்ற பிரம்மை ஏற்படுவதைத் தவிர்க்க இயலவில்லை. ஒளிப்பதிவாளர் வினோத் பாரதியின் கைவண்ணத்தில் ஒளிப்பதிவு மட்டும் சில காட்சிகளில் கண்ணுக்குக் குளுமையாக உள்ளது.
தம்பி ராமையா, பால சரவணன் ஆகிய இருவரும் நகைச்சுவை என்ற பெயரில் அடிக்கும் லூட்டிகள் சிரிப்புக்குப் பதில் எரிச்சலையே ஊட்டுகின்றன.
Keywords: நெருங்கி வா முத்தமிடாதே, திரை விமர்சனம், பியா, லஷ்மி ராம்கிருஷ்ணன், தம்பி ராமையா
Topics: தமிழ் சினிமா விமர்சனம்
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?