வேலை கிடைக்காது என்று தெரிந்த பிறகு வேறு வழியில்லாமல் நஷ்ட ஈட்டை பெற ஒப்புக் கொண்டோம் என்று மூடப்பட்ட நோக்கியா ஆலையின் தொழிலாளர்கள் வேதனையுடன் கூறியுள்ளனர்.
ஸ்ரீபெரும்பூதூரில் 2006-ம் ஆண்டு தொடங்கப்பட்ட நோக்கியா ஆலை, அக்.31-ம் தேதியுடன் மூடப்பட்டது. அதில் கடைசியாக பணிபுரிந்த 851 ஊழியர்களுக்கு நவம்பர் 3-ம் தேதி முதல் 10-ம் தேதிக்குள் நஷ்ட ஈட்டு தொகையை பெற்றுக்கொள்ளுமாறு நோக்கியா நிறுவனம் குறுஞ் செய்தி அனுப்பியுள்ளது.
இதன்படி ஊழியர்களுக்கு ரூ. 6 லட்சம் முதல் 10 லட்சம் வரை நோக்கியா நிறுவனம் நஷ்ட ஈடு வழங்குகிறது. ஆனால் இதில் வருமான வரி, நிறுவனத்திடமிருந்து வாங்கிய தனி நபர் கடன் ஆகிய கட்டணங்கள் கழிக்கப்பட்டு கையில் கிடைக்கும் தொகை மிகவும் குறைவாக இருக்கும் என்று தொழிலாளர்கள் கூறுகின்றனர்.
நோக்கியா நிறுவனத்தில் 9 ஆண்டுகளாக பணி புரிந்த தொழிலாளி ஒருவர், ''நான் தற்போது ரூ.21,000 சம்பாதித்து வந்தேன். ஆனால், தற்போது அங்கு தொடர்ந்து வேலை கிடைப்பதற்கான எந்த அறிகுறியும் தெரிய வில்லை. அதனால் இந்த நஷ்ட ஈட்டுத் தொகைக்கு ஒப்புக்கொண்டோம். இப்போதும், நவம்பர் 10-ம் தேதிக்குள் ஏதாவது அதிசயம் நிகழ்ந்து வேலை கிடைத்து விடாதா என்று தோன்றுகிறது" என்றார்.
பெண் தொழிலாளி சரிதா கூறும்போது, "எனக்கு வேறு எந்த வேலையும் தெரியாது. இந்த வேலையை நம்பி எனது குழந்தையை மெட்ரிக் பள்ளியில் சேர்த்து விட்டேன். எனது கணவருக்கு நிரந்தர வேலை கிடையாது. என்ன செய்வதென்றே தெரியவில்லை" என்றார்.
நோக்கியா இந்தியா தொழிலாளர் சங்கத்தின் பொது செயலாளர் பிரபு கூறும்போது, "நோக்கியாவில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் பணிபுரிகின்றனர். லாபம் ஈட்டும் வெளிநாட்டு நிறுவனங்கள் உள்ளே நுழையும் போது ஒப்பந்தம் போடப்படுவது போல், வெளியே செல்லும் போதும் ஊழியர்களை பாதுகாக்கும் வகையில் சட்டங்கள் இயற்றப்பட வேண்டும். நோக்கியா தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பும் கடனுதவியும் தருமாறு அரசை கேட்டு வருகிறோம்," என்றார்.
Keywords : நஷ்ட ஈடு, நோக்கியா ஆலை, நோக்கியா தொழிலாளர்கள், ஸ்ரீபெரும்பூதூர் ஆலை
Topics : தமிழகம், சர்ச்சை, விவகாரம்
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?