Wednesday 22 January 2014

யுவன்சங்கர் ராஜா இசையில் பாடல் எழுதுவது காலத்தின் விருப்பம்: கவிஞர் வைரமுத்து பேட்டி Yuvan Shankar Raja to compose music for the lyrics of the option period Interview with poet Vairamuthu

டைரக்டர் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் தயாரிப்பில், சீனுராமசாமி டைரக்டு செய்யும் இடம் பொருள் ஏவல் என்ற படத்தில், முதல்முறையாக கவிஞர் வைரமுத்துவுடன் இணைகிறார், இசையமைப்பாளர் யுவன்சங்கர்ராஜா.

இளையராஜாவை பிரிந்து வந்த 28 ஆண்டுகளுக்குப்பின், கவிஞர் வைரமுத்து அவரது மகன் யுவன்சங்கர்ராஜாவுடன் இணைந்து பணியாற்றுவது குறிப்பிடத்தக்கது. படத்தில் இடம்பெறும் 5 பாடல்களையும் கவிஞர் வைரமுத்து எழுதுகிறார்.

இதுபற்றி வைரமுத்து அளித்த பேட்டி விவரம் வருமாறு:

கேள்வி:- யுவன்சங்கர்ராஜாவுடன் நீங்கள் இணைவது காலத்தின் கட்டாயமா?

பதில்: இல்லை. காலத்தின் விருப்பம்.

கேள்வி:தந்தையோடு சேராத நீங்கள் மகனோடு எப்படி சேர்கிறீர்கள்?

பதில்: தந்தை என்று சொல்லிப்பாருங்கள். உதடுகள் சேர்வதில்லை. மகன் என்று சொல்லிப்பாருங்கள். முதல் எழுத்திலேயே உதடுகள் சேரும்.

கேள்வி:திடீரென்று எப்படி இந்த முடிவெடுத்தீர்கள்?

பதில்: வைரம் திடீரென்று பிறப்பதில்லை. அது கரியாக கிடந்து கனிந்த காலம் நம் கண்ணுக்கு தெரிவதில்லை. 10 ஆண்டுகளுக்கு முன்பே தம்பி யுவன்சங்கர் ராஜா இரு முறை என்னை தொலைபேசியில் அழைத்து, எனக்கு பாட்டு எழுதுங்கள் அங்கிள் என்று பாசத்தோடு கேட்டார். எனக்கு கண்கலங்கி விட்டது.என்னோடு சேர்வதால் உனக்கு ஒரு பாதிப்பும் வந்து விடக்கூடாது. கட்டாயம் சேர்வோம். காலம் கனியட்டும் என்று சொல்லியிருந்தேன். இப்போது அந்த காலம் கனிந்திருக்கிறது. இடம் பொருள் ஏவல் கூடி வந்திருக்கிறது.

கேள்வி: இளைய தலைமுறையோடு சேர்கிற நீங்கள் இளையராஜாவோடு ஏன் சேரக்கூடாது?

பதில்: இந்த கேள்விக்கு நான் இதுவரை சொன்ன பதிலை நீட்டினால், பூமி உருண்டைக்கு அரைஞாண் கயிறு கட்டலாம். அவ்வளவு சொல்லியாகி விட்டது. இனிமேல் கெட்டிப்பட்ட மவுனத்தைப் பார்த்து இந்த கேள்வியை கேளுங்கள்.

கேள்வி: உங்களுக்கு யுவன்சங்கர் ராஜா தேவைப்படுகிறாரா? யுவன்சங்கர் ராஜாவுக்கு நீங்கள் தேவைப்படுகிறீர்களா?

பதில்: பூமிக்கு தண்ணீர் தேவைப்படுகிறதா? தண்ணீருக்கு பூமி தேவைப்படுகிறதா? ஒன்று, இன்னொன்றுக்கு ஆதாரம். மனித உறவுகளே சார்ந்து இயங்குவதுதானே? எனது மூத்த தமிழோடு இளமையான இசை சேரும்போது, புதிய மின்சாரம் உண்டாகும். இளையராஜா இப்போது என்ன செய்ய வேண்டுமென்றால் தனது மூத்த இசையோடு இளைய தமிழை இணைத்துக்கொள்ள வேண்டும். மதன் கார்க்கி, கபிலன் போன்றவர்களோடு அவர் பணியாற்ற வேண்டும்.

கேள்வி:இந்த புதிய கூட்டணி வெற்றி பெறுமா?

பதில்: ஒருவர் வெற்றிக்காக மற்றவர் உழைக்கும் கூட்டணிதான் வெற்றி பெறும். இது, கலைக்கும் பொருந்தும். கட்சிக்கும் பொருந்தும். சக கலைஞர்களை வெற்றி பெற வைத்து, நாங்கள் வெற்றி பெறுவோம்.

கேள்வி:லிங்குசாமி, சீனுராமசாமி இருவரும் இந்த இணைப்புக்கு காரணமா? பதில்: ஆமாம். சந்தர்ப்பங்கள் சாதிக்க முடியாததை சாமிகள் சாதித்து விட்டார்கள்.தமிழுக்கும், இசைக்கும் லிங்சாமி ஆகிவிட்டார், லிங்குசாமி.

இவ்வாறு கவிஞர் வைரமுத்து கூறினார்.

0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger