Img ஜூனியர் ஆசியக் கோப்பை கிரிக்கெட்: இறுதிப்போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா சாம்பியன் Junior Asia Cup Cricket india win
சார்ஜா, ஜன. 4-
19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு எமிரேட்டில் நடந்தது. இதில் சார்ஜாவில் இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதின.
டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச முடிவு செய்தது. இதையடுத்து முதலில் பேட் செய்த இந்திய அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 8 விக்கெட்டுகளை இழந்து 314 ரன்கள் குவித்தது. கேப்டன் விஜய் ஜோல், சஞ்ஜு சாம்சன் ஆகியோர் சதம் அடித்து அணியின் ஸ்கோர் உயர வழிவகுத்தனர். இவர்கள் இருவரும் இணைந்து 3-வது விக்கெட்டுக்கு 180 ரன்கள் சேர்த்தனர். துவக்க வீரர் பெயின்ஸ் 47 ரன்கள் அடித்தார்.
இதையடுத்து 315 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணியில் துவக்க வீரராக களமிறங்கிய சமி அஸ்லம் 87 ரன்கள் குவித்து நம்பிக்கை அளித்தார். டாப் ஆர்டரில் மற்ற வீரர்கள் சோபிக்காத நிலையில், கம்ரான் குலாம் அணியின் ஸ்கோரை உயர்த்த கடும் முயற்சி மேற்கொண்டார். நெருக்கடியான சூழ்நிலையிலும் பொறுப்புடன் ஆடிய கம்ரான் குலாம் சதம் அடித்தார்.
ஆனால் அவருடன் இணைந்த பின்கள வீரர்கள் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்ததால், பாகிஸ்தான் அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 274 ரன்களே சேர்த்தது. கம்ரான் குலாம் 89 பந்துகளில் 102 ரன்கள் குவித்து களத்தில் இருந்தார்.
இந்திய அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது.
கடந்த ஆண்டும் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன. ஆனால் போட்டி டையில் முடிந்ததால் சாம்பியன் பட்டத்தை இரு அணிகளும் பகிர்ந்துகொண்டன.
...
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?