திருச்சி, டிச. 26–
அப்பாவிகளை திசை திருப்பி பணம் பறிக்க புதுப்புது யுக்திகளை ஏமாற்று பேர்வழிகள் ஏராளமானோர் இன்றும் கையாண்டு வருகின்றனர். 'இப்படியுமா' என வியக்கும் வகையில் திருச்சி ரெயில் நிலையத்தில் வாலிபர் ஒருவரிடம் பணம் பறிக்க பெண் ஒருவர் முயன்றுள்ளார்.
திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தின் நுழைவுப் பகுதியில் 'காபி ஷாப்' உள்ளது. இங்கு வரிசையில் நின்று டோக்கன் வாங்கினால் தான் காபி கிடைக்கும். அந்த அளவிற்கு எப்போதும் கூட்டம் இருக்கும்.
இரவு 7 மணிக்கு சுதாகர் (பெயர் மாற்றப்பட்டுள்ளது.) என்ற வாலிபர் காபி டோக்கன் வாங்குவதற்காக வரிசையில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு சுடிதார் அணிந்த பெண் ஒருவர் வந்துள்ளார். 'எனக்கு தலை சுற்றுகிறது, ஒரு டோக்கன் வாங்கி தாருங்கள், என்னால் நிற்க கூட முடியவில்லை' என கூறினார்.
பரிதாபப்பட்ட சுதாகரும் தனது காசிலேயே டோக்கன் வாங்கி, காபியும் வாங்கி அந்த பெண்ணிடம் கொடுத்தார். அப்போது சுதாகரிடம் நைசாக பேசத் துவங்கினார் அந்த பெண். 'உங்கள மாதிரி நல்லவங்கள இப்ப பார்க்கவே முடியலீங்க... உங்க காசிலேயே காபி வாங்கி தந்திட்டீங்களே...' என கூறி விட்டு சுதாகரின் வேலை, குடும்பம் பற்றி விசாரித்துள்ளார்.
பின்னர், 'வாங்களேன் அந்த ரிசர்வேஷன் பகுதிக்கு சென்று உட்கார்ந்து பேசலாம்' என அழைத்துள்ளார், என்ன தான் பேசுவார் பார்க்கலாம் என்ற ஆவலில் சுதாகரும் உடன் சென்றுள்ளார்.
ரிசர்வேசன் பகுதியில் காலியாக இருந்த சேரில் இருவரும் அமர்ந்துள்ளனர். அதன் பின் அந்த பெண் 'நான் பைனான்ஸ் கன்சல்டன்ட் வேலை செய்கிறேன். சொத்தின் பேரில் கடன் வாங்கி கொடுப்பேன். என் கணவர் என்னை விட்டு பிரிந்து சென்று விட்டார். தற்போது திருச்சியில் உறவினர் ஒருவர் வீட்டில் தங்கி இருக்கிறேன். நான் ஒரு நல்ல லைப் பார்ட்னரை தேடிக் கொண்டிருக்கிறேன். உங்கள பார்த்தா 'ரொம்ப நல்லவரா' தெரியுது. நீங்க என் லைப்– பார்ட்னரா வர்றீங்களா?' என்றார்.
சுதாரித்துக் கொண்ட சுதாகர் 'நீங்க சொல்றது சரியா புரியலியே' என தூண்டில் போட்டுள்ளார். 'சார்... எனக்கு இப்போ கொஞ்சம் பைனான்ஸ் பிரச்சினை..., நீங்க எனக்கு பண உதவி செஞ்சா நான் உங்களுக்கு நல்ல பார்ட்னரா இருப்பேன்... வாரம் ஒரு தடவை நீங்க என்னை வெளியில் எங்க வேண்டுமானாலும் கூட்டிட்டு போங்க... புரியுதா...' என்றார்.
'ஐயோ..., எனக்கு நல்ல குடும்பம் ஒன்னு இருக்கு மேடம், ஆள விடுங்க' என்று சொல்லிவிட்டு புறப்பட முயன்றுள்ளார் சுதாகர். 'சார் ஒரு நிமிஷம், அவசரத்துல பர்ஸ்ல பணம் எடுக்காம வந்துட்டேன்... ஒரு 500 ரூபா இருந்தா குடுங்க நாளைக்கு இதே இடத்துல வந்து தந்துடுறேன்...' என்றார் அந்த பெண்.
'500 ரூபாவை பார்த்தே ரெம்ப நாளாச்சு மேடம்... நான் ரொம்ப ஏழை... நீங்க வேற ஆள பாருங்க...' என்று கூறிவிட்டு ஓட்டம் பிடித்துள்ளார் சுதாகர்.
திருச்சியில் சத்திரம் பஸ் நிலையம், மத்திய பஸ் நிலையம், ரெயில் நிலையம் என பல இடங்களில் இப்படிப்பட்ட 'தில்லாலங்கடி' பெண்கள் உலா வருவதாக தெரிகிறது. சிக்கும் சிலரிடம் முடிந்தவரை பணம் பறித்து விடுகின்றனர் அவர்கள்.
மேலும் திருச்சியின் முக்கிய வர்த்தக பகுதியில் கல்லூரி மாணவிகள் என கூறிக் கொண்டு சில மணி நேரங்கள் 'கம்பெனி' கொடுத்து பணம் வசூலிக்கும் 'வசூல் ராணிகளும்' வலம் வருகின்றனர்.
இதனை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய திருச்சி காவல் துறையோ தொடர் கதையாக நடக்கும் கொலை வழக்குகளில் தலையை தேடுவது, குற்றவாளிகைள தேடுவது என பிஸியாக உள்ளது.
திருச்சியில் சமீபத்தில் நடந்துள்ள கொலைகளின் பின்னணியில் இது போன்ற தவறான பாலியல் தொடர்புகள்தான் உள்ளன. எனவே குற்றம் நடந்த பின்பு குற்றவாளிகளை தேடி அலையாமல், குற்றம் நடக்கும் முன்பு தடுக்கும் முயற்சிகளில் ஈடுபட்டால் வரும் காலங்களில் காவல் துறையினர் கொஞ்சம் நிம்மதியாக இருக்கலாம்.
இல்லை எனில் அடிக்கடி முகவரி இல்லா சடலங்களும், தலையில்லா உடல்களும் வரிசைகட்டி பயமுறுத்தும்.
என்ன பாஸ்..., நாங்க சொல்றத சொல்லிட்டோம் இனிமே நீங்கதான் சூதானமா இருக்கனும். இது போலீசுக்கு மட்டும் இல்லீங்க, பொது மக்களுக்கும் தான்.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?