fire is burning the body is no chance of the child doctors reported
தானாக தீப்பற்றி எரியும் குழந்தையின் பரிசோதனை முடிவுகள் அனைத்தும் வந்து விட்ட நிலையில் குழந்தையின் உடலில் தானாக தீப்பிடித்து எரிவதற்கான வாய்ப்பே இல்லை என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் குழந்தையின் உடலில் தீ பிடித்தது எப்படி என்ற மர்மம் நீடிக்கிறது.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள டி.பரங்குனி கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி கர்ணனின் குழந்தை ராகுலின் உடல் தானாக தீப்பற்றி எரிவதாக குழந்தையின் பெற்றோரால் கூறப்பட்டது. 2½ மாத குழந்தையின் உடலில் 4 முறை தானாக தீப்பற்றி எரிந்துள்ளதாக அதன் பெற்றோர்கள் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தீப்பிடித்ததால் காயம் அடைந்த இந்த குழந்தைக்கு விழுப்புரம், புதுச்சேரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு தற்போது கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
குழந்தையின் சிகிச்சை அளித்து வரும் குழந்தைகள் நலப்பிரிவு தலைவரும், மருத்துவமனை துணை கண்காணிப்பாளருமான டாக்டர் நாராயணபாபு ஏற்கனவே கூறும்போது குழந்தைக்கு ‘ஸ்பொன்டேனியஸ் யூமன் கம்பஸ்டன்’ என்ற உடலில் தானாக தீப்பற்றிக்கொள்ளும் அதிசய நோய் இருப்பதாக கூறி இருந்தார்.
அதற்காக குழந்தையின் உடலில் இருந்து ரத்தம், சிறுநீர், மற்றும் தோல் ஆகியவற்றில் இருந்து சுமார் 30-க்கும் மேற்பட்ட ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த நிலையில் ஆய்வு முடிவுகள் அனைத்தும் நேற்று வந்துவிட்டன. இந்த முடிவுகள் குறித்தும், குழந்தையின் தற்போதைய நிலை குறித்தும் டாக்டர் நாராயணபாபு கூறியதாவது:-
குழந்தை கடந்த 12 நாட்களாக இங்கு சிகிச்சை பெற்று வருகிறது. இதுவரை குழந்தையின் உடலில் தீப்பற்றி எரியவில்லை. குழந்தையின் தோல் ஆராய்ச்சி முடிவு உள்பட அனைத்து பரிசோதனை முடிவுகளும் வந்து விட்டன. எல்லா முடிவுகளுமே சாதாரணமாகத்தான் உள்ளன. அசாதாரண அறிகுறிகள் ஏதும் தென்படவில்லை.
எனவே குழந்தைக்கு ‘ஸ்பொன்டேனியஸ் யூமன் கம்பஸ்டன்’ என்ற உடலில் தானாக தீப்பற்றிக் கொள்ளும் அதிசய நோய் இருப்பதற்கான வாய்ப்பு இல்லை. குழந்தையின் பெற்றோர் தான் அதன் உடலில் தானாக தீப்பற்றி எரிந்ததாக கூறி உள்ளனர். ஆனால் இங்கு இதுவரை அது போன்ற சம்பவம் நிகழவில்லை.
குழந்தை எங்களிடம் சிகிச்சைக்கு வரும்போது, தீப்புண் காயங்களுடன் வந்தது. அதற்கு தகுந்த சிகிச்சை அளித்துள்ளோம். தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். குழந்தையின் ஆய்வு முடிவுகளில் எந்த வித பிரச்சினைகளும் இல்லை.
எனவே அடுத்தகட்ட நடவடிக்கை என்ன என்று மருத்துவமனை டீன் டாக்டர் ராமகிருஷ்ணனுடன் பேசி முடிவு செய்வோம். குழந்தை வீடு திரும்பிய பிறகு, அங்குள்ள தலைமை மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள டாக்டர்கள் மூலம் குழந்தையை 24 மணி நேரமும் கண்காணிக்க ஏற்பாடு செய்வோம். மேலும் மாதம் ஒரு முறை குழந்தையை இங்கு கொண்டுவந்து பரிசோதனை செய்வோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
அவிழ்க்கப்படாத மர்ம முடிச்சு குழந்தையின் உடலில் தானாக தீப்பிடித்து எரிவதற்கு வாய்ப்பே இல்லை என்று டாக்டர்கள் கூறி உள்ள நிலையில் குழந்தையின் உடலில் தீப்பற்றி எரிந்த சம்பவம் அவிழ்க்கப்படாத மர்ம முடிச்சாகவே உள்ளது.
இன்றைய நவீன அறிவியல் உலகத்தில், பில்லி சூனியம், செய்வினை போன்றவற்றை மக்கள் நம்ப தயாராக இல்லை. ஏற்கனவே இந்த குழந்தையை ஒரு கழுகு தூக்கிச் சென்றது என்றும், இதனால் அதிகாலையில் வீட்டின் திண்ணையில் படுத்திருந்த குழந்தை காணாமல் போனதாகவும், பின்னர் வீட்டின் அலமாரி இடுக்கில் குழந்தை இருந்தாகவும் அதன் பெற்றோர் முன்னுக்குப்பின் முரணான தகவல்களை தெரிவித்தனர்.
மேலும் குழந்தையின் உடலில் தீப்பற்றி எரிந்ததால், தங்களது குடிசை எரிந்து நாசமாகியது என்றும் தெரிவித்தனர். குழந்தையின் பெற்றோர்கள் தெரிவித்துள்ள இந்த கருத்துகள் அனைத்துமே ஏற்புடையதாக இல்லை. தீப்பற்றி எரிந்த குழந்தையின் உடலில் மண்எண்ணெய் வாசனை அடித்ததாக கூறப்படுகிறது.
எனவே குழந்தையின் உடலில் தீப்பிடித்தது சூனியத்தினாலா? அல்லது சதியினாலா? என்பதை முதலில் கண்டுபிடிக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. எனவே இதுகுறித்து குழந்தையின் பெற்றோர், உறவினர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினரிடம் உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டால் தான் மர்ம முடிச்சு அவிழ்க்கப்பட்டு உண்மை வெளி உலகிற்கு தெரிய வரும்.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?