Friday, 30 August 2013

டாப்-20 ஊழல்கள் Top 20 scams

இந்தியாவுக்கு தலைகுனிவை ஏற்படுத்திய டாப் 20 ஊழல்கள் சிறப்பு பார்வை Top 20 scams that made India ashamed

கடுமையான பொருளாதார சிக்கலில் இந்தியா சிக்கித் தவிக்கும்   இவ்வேளையில், நமது நாட்டில் நடைபெற்ற டாப்-20 ஊழல்களை தெரிந்துக் கொள்வது நலமாக இருக்கும்.

1987-போபர்ஸ் ஊழல்


சுவீடன் நாட்டில் இருந்து இந்திய ராணுவத்துக்கு போபர்ஸ் ரக பீரங்கிகள் வாங்குவதற்காக போடப்பட்ட 285 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான ஒப்பந்தத்தில் மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி மற்றும் முன்னாள் அரசியல்வாதிகள் சிலர் கமிஷன் பெற்றதாக குற்றச்சாட்டு. 13-7-2013 அன்று இந்த ஊழலின் மையப்புள்ளியான குவாத்ரோச்சியின் மரணத்துக்கு பின்னர் இந்த ஊழல் வழக்கு கைவிடப்பட்டது.

1990-ஹவாலா ஊழல்

பா.ஜ.க. ஆட்சி காலத்தில் பிரபல ஹவாலா ஏஜெண்ட்கள் ஜெயின் சகோதரர்கள் மூலம் இந்திய அரசியல்வாதிகள் சுமார் 18 மில்லியன் அமெரிக்க டாலர்களை ஹவாலா முறையில் பரிமாற்றம் செய்ததாக குற்றச்சாட்டு. இவ்விவகாரத்தில் முன்னாள் துணை பிரதமர் அத்வானி உள்பட பலர் மீது குற்றம் சாட்டப்பட்டது. போதுமான ஆதாரங்கள் இல்லாததால் இவ்வழக்கில் யாருக்கும் தண்டனை வழங்கப்படவில்லை.

1992-பங்குச்சந்தை ஊழல்

போலி வங்கி ஆவணங்களின் மூலம் பங்குச் சந்தையில் சுமார் 5 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் செய்ததாக குற்றச்சாட்டு.  குற்றம் சாட்டப்பட்ட ஹர்ஷத் மேத்தா மீது அவர் சாகும் 2001 வரை வழக்கு நடைபெற்றது. அவரது மரணத்துக்கு பின்னர் இவ்வழக்கு கைவிடப்பட்டது.

1996-கால்நடை தீவன ஊழல்

பீகார் மாநில முதல் மந்திரியாக லல்லு பிரசாத் யாதவ் பதவி வகித்தபோது கால்நடைகளுக்கு தீவனங்கள் வாங்கியதாக போலி ரசீதுகள் தயாரித்து சுமார் ஆயிரம் கோடி ரூபாய் சுரண்டியதாக குற்றச்சாட்டு.

ஊழல் உறுதி செய்யப்பட்டதால் லல்லு பிரசாத் யாதவ் பதவி விலகல். வழக்கு இன்னும் நடைபெற்று வருகிறது.

2001-பங்குச்சந்தை ஊழல்

போலி ஆவணங்களின் மூலம் பங்குச்சந்தையில் வர்த்தகம் செய்வதாக கூறி கனரா வங்கியில் 48 கோடி ரூபாய் மோசடி செய்த கேத்தன் பரேக்குக்கு 2017 வரை பங்குச் சந்தையில் வர்த்தகம் செய்ய தடை.

2003-தாஜ் காரிடர் ஊழல்

உத்தரபிரதேச மாநிலம், ஆக்ராவில் யமுனை நதிக்கரையோரம் அமைந்துள்ள தாஜ்மஹாலை சுற்றியுள்ள பகுதிகளை சுற்றுலாவாசிகளை கவரும் வண்ணம் மேம்படுத்த மாயாவதியின் ஆட்சிக் காலத்தில் 175 கோடி ரூபாயில் திட்டம் தீட்டப்பட்டது.

இந்த திட்டம் அமல்படுத்தப்பட்ட பின்னர், தனது பதவி காலத்தில் 1.1 கோடி ரூபாய் மட்டுமே சம்பளம் பெற்ற மாயாவதியின் சொத்து மதிப்பு 15 கோடி ரூபாயாக உயர்ந்தது. ஒரேயொரு வங்கி கணக்கில் மட்டும் 2 1/2  கோடி ரூபாய் பிடிபட்டது. இந்த ஊழல் தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது.

2005-நீர் மூழ்கி கப்பல் ஊழல்

பிரான்ஸ் நாட்டை சேர்ந்த நீர்மூழ்கி கப்பல் தயாரிக்கும் நிறுவனமான தாலேஸ் தயாரிப்பில் ஸ்கார்பென் நீர்மூழ்கி போர் கப்பல்களை வாங்க தற்போதைய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நிதி மந்திரியாக இருந்த 2005ம் ஆண்டு 19 ஆயிரம் கோடி ரூபாயில் ஒப்பந்தம் செய்யப்பட்டது.

இந்த ஒப்பந்தத்தை பெற தாலேஸ் நிறுவனம் இந்திய அரசியல்வாதிகளுக்கு ரூ.500 கோடி லஞ்சம் தந்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

பின் நாளில், இந்த ஊழலை தூக்கி சாப்பிடும் அளவுக்கு அடுக்கடுக்காக பெருகி வந்த இதர ஊழல்களில், நீர்மூழ்கி கப்பல் ஊழல் விவகாரம் மறக்கடிக்கப்பட்டது.

2008-ஓட்டுபோட எம்.பி.க்களுக்கு லஞ்சம்

22-7-2008 அன்று ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது அரசுக்கு ஆதரவாக வாக்களிக்க பா.ஜ.க. எம்.பி.க்களுக்கு காங்கிரஸ் கட்சி லஞ்சம் கொடுத்ததாக குற்றச்சாட்டு.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசை ஆதரித்து வாக்களிப்பதற்காக ஒரு எம்.பி.க்கு 10 கோடி ரூபாய் வரை காங்கிரஸ் தலைவர் சதீஷ் சர்மா தந்ததாக குற்றம் சாட்டிய பா.ஜ.க. எம்.பி.க்கள் அந்த பணப்பையுடன் வந்து பாராளுமன்றத்தில் புயலை ஏற்படுத்தினர்.

2008-மதுகோடா ஊழல்

2006 முதல் 2008 வரை இரண்டே ஆண்டுகள் ஜார்கண்ட் முதல் மந்திரியாக இருந்த மதுகோடா 2 ஆயிரம் கோடியை கொள்ளையடித்து பல்வேறு வெளிநாடுகளில் சொத்துகளை வாங்கி குவித்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டது. சுமார் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் மீட்கப்பட்டன.

விசாரணை நடைபெற்று வருகிறது. சிறை தண்டனை அனுபவித்து வந்த மதுகோடா சமீபத்தில் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.

2009-சத்யம் நிறுவன ஊழல்

பங்குகளின் மதிப்பை அதிகரிக்கச் செய்வதற்காக உண்மையான வரவு-செலவு அறிக்கையை மாற்றி ரூ.300 கோடி அதிகம் சம்பாதித்தது போல் கணக்கு காட்டியதாக சத்யம் நிறுவனர் ராமலிங்க ராஜு மீது குற்றச்சாட்டு. வழக்கு நடைபெற்று வருகிறது.

2010-பெல்லாரி சுரங்க ஊழல்

கர்நாடக முதல் மந்திரியாக எடியூரப்பா பதவி வகித்த போது ரெட்டி சகோதரர்கள் எனப்படும் கருணாகர ரெட்டி மற்றும் ஜனார்த்தன ரெட்டி ஆகியோருக்கு முறைகேடான வகையில் சுரங்க உரிமம் அளித்த வகையில் மாநில அரசுக்கு 16 ஆயிரத்து 85 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக குற்றச்சாட்டு.

ரெட்டி சகோதரர்கள் கைது செய்யப்பட்டு வழக்கு நடைபெற்று வருகிறது.

2010-காமன்வெல்த் விளையாட்டு ஊழல்

2010-ம் ஆண்டு புதுடெல்லியில் காமன்வெல்த் நாடுகள் பங்கேற்ற விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்ற போது இப்போட்டியின் அமைப்பாளராக செயல்பட்ட சுரேஷ் கல்மாடி பல்வேறு காண்டிராக்ட்களில் ஊழல் செய்து நாட்டுக்கு 100 கோடி ரூபாய்க்கும் மேல் இழப்பு ஏற்படுத்தியதாக குற்றச்சாட்டு. வழக்கு நடைபெற்று வருகிறது.

2010- 2-ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல்

2-ஜி எனப்படும் இரண்டாம் தலைமுறை தொலைத்தொடர்புக்கு அலைக்கற்றை ஒதுக்கீட்டில் அத்துறையின் முன்னாள் மந்திரி ஆ.ராசா இந்திய அரசுக்கு ரூ.30 ஆயிரத்து 984 கோடி இழப்பீடு ஏற்படுத்தியதாக சி.பி.ஐ. குற்றச்சாட்டு.

இந்த இழப்பை சி.ஏ.ஜி. ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி என யூகத்தின் அடிப்படையில் கூறியிருந்தது. இந்த குற்றச்சாட்டையடுத்து ஆ.ராசா பதவி விலக நேரிட்டது. வழக்கு நடைபெற்று வருகிறது.

2011-ஆதர்ஷ் ஊழல்

கார்கில் போரில் வீர மரணமடைந்த ராணுவ வீரர்களின் குடும்பத்தாருக்கு வழங்குவதற்காக கட்டப்பட்ட 31 மாடி ஆதர்ஷ் குடியிருப்பில், சட்டமீறலாக அரசியல்வாதிகளும், உயிருடன் உள்ள ராணுவ உயரதிகாரிகளும் ஒதுக்கீடு பெற்று பலனடைந்ததாக குற்றச்சாட்டு.

இதில், தற்போதைய உள்துறை மந்திரி சுஷில்குமார் ஷிண்டே, அப்போதைய மகாராஷ்டிரா முதல் மந்திரி அசோக் சவான் ஆகியோர் பலன் அடைந்ததை வருமான வரித்துறை, சி.பி.ஐ. ஆகியவை நடத்திய விசாரணையில் உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து, மகாராஷ்டிரா முதல் மந்திரி அசோக் சவான் பதவி விலகினார்.

2011-ஆண்ட்ரிக்ஸ் தேவா ஊழல்

இந்திய விண்வெளி துறையான ஆண்ட்ரிக்ஸ் தேவா மல்டிமீடியா நிறுவனத்துக்கு 70 மெகா ஹெர்ட்ஸ் அலைக்கற்றையை ஜி.சாட் செயற்கைக்கோளில் இருந்து ஒதுக்கீடு செய்து அரசுக்கு 2 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக குற்றச்சாட்டு.

2011-டாட்ரா டிரக் ஊழல்

விதிமுறைகளை மீறிய வகையில் லண்டனை சேர்ந்த ஓர் இடைத்தரகரின் மூலம் ராணுவத்துக்கு 600 டாட்ரா ரக வாகனங்களை வாங்கிய வகையில் கடந்த 14 ஆண்டுகளாக ராணுவ உயரதிகாரிகள் 750 கோடி ரூபாய் வரை கமிஷன் பெற்றதாக குற்றச்சாட்டு.

இந்த குற்றச்சாட்டை மெய்ப்பிக்கும் விதமாக முன்னாள் ராணுவ தளபதி வி.கே.சிங், டாட்ரா நிறுவனம் எனக்கு கூட 14 கோடி ரூபாய் லஞ்சமாக தர சிலர் முன் வந்தனர். நான் அதை மறுத்து விட்டேன் என கூறியிருந்தார்.

இது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடைபெற்று வருகிறது.

2012-நிலக்கரி சுரங்க ஊழல்

2004-2009க்கு இடைப்பட்ட காலத்தில் தனியாருக்கு நிலக்கரி சுரங்கங்களை ஒதுக்கீடு செய்ததில் அரசுக்கு 10 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக சி.ஏ.ஜி. அறிக்கை குற்றம் சாட்டியது. பின்னர் இந்த இழப்பு 1.86 லட்சம் கோடி தான் என சி.ஏ.ஜி. பல்டி அடித்தது.

இது தொடர்பாக, சுப்ரீம் கோர்ட்டின் மேற்பார்வையில் சி.பி.ஐ. விசாரணை நடைபெற்று வருகிறது.

2013-வி.வி.ஐ.பி. ஹெலிகாப்டர் ஊழல்

இந்திய விமானப் படைக்கு இத்தாலியில் உள்ள பின் மெக்கானிக்கா நிறுவனத்திடமிருந்து 12 வி.வி.ஐ.பி. (மிக முக்கியமான தலைவர்களை ஏற்றிச் செல்லும்) ஹெலிகாப்டர்களை வாங்க 3 ஆயிரத்து 600 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்யப்பட்டது.

இதில், இந்திய விமானப் படையின் முன்னாள் தளபதி தியாகி உள்பட பல்வேறு அதிகாரிகள் இந்த ஒப்பந்தத்தை பெற்ற பின் மெக்கானிக்கா நிறுவனத்திடமிருந்து ரூ.370 கோடி லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு.

பாதுகாப்பு மந்திரி அந்தோணியின் உத்தரவின்பேரில் மேலிட விசாரணை நடைபெற்று வருகிறது.

2013-ரெயில்கேட் ஊழல்

ரெயில்வே துறையின் ஒப்பந்தங்களை வழங்குவதாக உறுதியளித்து, ஒப்பந்தகாரர்களான இருவரிடமிருந்து 90 லட்சம் ரூபாயை பவன்குமார் பன்சாலின் மருமகன் லஞ்சமாக பெற்றதாக குற்றச்சாட்டு. பவன்குமார் பன்சால் பதவி விலக நேரிட்டது. விசாரணை நடைபெற்று வருகிறது.

2013-உ.பி. சுகாதார ஊழல்

உத்தரபிரதேச முதல் மந்திரியாக மாயாவதி பொறுப்பேற்றிருந்தபோது, கிராமப்புற சுகாதார நிதியில் இருந்து 10 ஆயிரம் கோடி ரூபாய் சுரண்டப்பட்டதாக குற்றச்சாட்டு. சி.பி.ஐ. விசாரணை நடைபெற்று வருகிறது.

மொத்தத்தில், இந்தியாவில் 1992 முதல் இதுவரை வெளிச்சத்திற்கு வந்த ஊழல்களில் மட்டும் 80 லட்சம் கோடி ரூபாய்க்கும் அரசியல்வாதிகளின் பைகளை சென்றடைந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger