Friday, 26 July 2013

என்ன கொடுமை சார் இது ? எய்ட்ஸ் நோயால் பெற்றோர் மரணம்: அனாதையான 4 சிறுவர்களை சுடுகாட்டில் குடிவைத்த கிராம மக்கள்

எய்ட்ஸ் நோயால் பெற்றோர் மரணம்: அனாதையான 4 சிறுவர்களை சுடுகாட்டில் குடிவைத்த கிராம மக்கள்


உத்தர பிரதேச மாநிலம் பிரதாப்கர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில், எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட தம்பதியர் இறந்துவிட்டனர். இதனால் அவர்களின் பிள்ளைகளுக்கும் அந்த நோய் இருக்கும் என்று அவர்களின் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் அஞ்சினர். இதுபற்றி ஊர் பெரியவர்கள் கூடி ஆலோசனை நடத்தினர்.

அப்போது எய்ட்ஸ் நோயால் இறந்தவர்களின் மகன்கள் 4 பேரையும், ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் உள்ள சுடுகாட்டில் தங்க வைக்க முடிவு செய்தனர். அதன்படி சிறுவர்கள் 4 பேரும் அவர்களின் பெற்றோரின் கல்லறை அருகில் கூடாரம் அமைத்து 2 மாதமாக வசித்து வருகின்றனர். ஊரில் இருந்து யாராவது உணவு கொடுத்தால் அதை வாங்கி சாப்பிட்டு வேதனையுடன் தங்கள் பொழுதைக் கழிக்கின்றனர்.

இது தொடர்பாக அந்த சிறுவர்களில், 17 வயதான மூத்த சிறுவன் நிருபர்களிடம் கூறுகையில், "என் தந்தை எய்ட்ஸ் நோயால் இறந்தார். இரண்டு ஆண்டுகள் கழித்து தாயும் எய்ட்ஸ் நோயால் இறந்துவிட்டார். அதன்பின்னர் நான், எனது உறவினர்களுடன் கிராமத்திலேயே வசிக்க விரும்பினேன். ஆனால், எங்களுக்கும் எய்ட்ஸ் இருக்கும் என பயந்து வெளியேற்றிவிட்டனர்" என்றான்.

இதுபற்றி தகவல் அறிந்த மாநில சுகாதாரக் குழுவினர் அங்கு சென்று சிறுவர்களுக்கு எய்ட்ஸ் பரிசோதனை செய்ய திட்டமிட்டுள்ளது. எய்ட்ஸ் பரிசோதனையில் அவர்களுக்கு நோய் பாதிப்பு இல்லை என்று தெரிந்தால் மட்டுமே அவர்களை மீண்டும் ஊருக்குள் அழைத்து வருவோம் என்று அவரது உறவினர்கள் கூறுகின்றனர்.

இதற்கிடையே பசி பட்டினியால் சுடுகாட்டிற்கு விரட்டியடிக்கப்பட்ட அந்த சிறுவர்களுக்கு, அரசு இப்போது இலவச வீடு ஒதுக்கீடு செய்துள்ளது. மேலும் அவர்களுக்கு வறுமைக் கோட்டுக்கு கீழ் வசிப்போருக்கான ரேஷன் கார்டு வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் அவர்கள் உணவுப் பொருட்கள் மட்டுமின்றி மற்ற நலத்திட்ட பயன்களையும் பெற முடியும். ஆனால் உறவினர்கள், கிராம மக்களின் ஆதரவு இல்லாமல், அரசின் இத்தகைய உதவிகள் மட்டுமே அந்த சிறுவர்களின் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு உதவுமா? என்பது கேள்விக்குறியாக உள்ளது.

இதுதொடர்பாக தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த முதல்வர் அகிலேஷ் யாதவ், "பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்படும். மேலும் அவர்களை சுடுகாட்டில் இருந்து அரசு விருந்தினர் மாளிகைக்கு உடனடியாக மாற்றும்படி உத்தரவிட்டுள்ளேன்" என்று தெரிவித்தார்.

0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger