உத்தரபிரதேச மாநிலத்தில், அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாடி கட்சி
மந்திரிசபையில் காதி, கிராமத்தொழில்கள் துறையின் மந்திரியாக பதவி வகிப்பவர்
ராஜாராம் பாண்டே (56 வயது). இவர் அங்கு சுல்தான்பூர் நகரில், கமலா நேரு
தொழில்நுட்ப இன்ஸ்டிடியூட்டில் நடந்த அரசு விழாவில் (வேலையில்லா
இளைஞர்களுக்கான நிதியுதவி வழங்கும் விழா) தலைமை விருந்தினராக கலந்து
கொண்டார்.
விழாவில் மாவட்ட கலெக்டர் தனலட்சுமியும்,
திரளான கட்சித்தொண்டர்களும் கலந்து கொண்டனர். வேலையில்லா இளைஞர்களுக்கு
காசோலைகளை வழங்கி பேசிய மந்திரி ராஜாராம் பாண்டேயின் பேச்சு திடீரென
கலெக்டர் தனலட்சுமியின் மீது சென்றது. அவர், சுல்தான்பூர் மாவட்டத்தின்
பொறுப்பு மந்திரியாக நான் இரண்டாவது தடவையாக ஆகி இருப்பதை தனிச்சிறப்பாக
கருதுகிறேன்.
ஒவ்வொரு முறையும் நான் அழகான
கலெக்டர்களுடன் சேர்ந்து பணியாற்றுகிற நல்வாய்ப்பினை பெறுகிறேன் என
கூறினார். அத்துடன் நிறுத்தவில்லை. மேடையில் அமர்ந்திருந்த கலெக்டர்
தனலட்சுமியை நோக்கி பார்த்தவாறு, இதற்கு முன்பாக இங்கே காமினி சவுகான்
ரத்தன் கலெக்டராக இருந்தார்.
அவரைப் போன்ற ஒரு அழகி
இருக்க முடியாது என்றுதான் நான் எப்போதுமே கருதி வந்தேன். ஆனால் இப்போதைய
கலெக்டர் பதவி ஏற்றபோதே, இவர் அவரை விட அழகானவர் என்பதை உணர்ந்தேன். இவர்
மிகவும் மென்மையாக பேசுகிறார். சிறந்த நிர்வாகியும்கூட என புகழ்ந்து
தள்ளினார்.
இந்த பேச்சை அங்கே கூடி இருந்த கட்சி
தொண்டர்களில் ஒரு பிரிவினர் ரசித்து கை தட்டினாலும்கூட, கலெக்டர்
தனலட்சுமிக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தி விட்டது. மந்திரி அவரது அழகை
வர்ணித்தபோது, முகத்தை கைகளால் மூடிக்கொண்டார்.
தொடர்ந்து,
தனது முகத்தில் தோன்றுகிற உணர்ச்சி கொந்தளிப்பை மற்றவர்கள்
பார்த்துவிடக்கூடாது என்று கருதி முகத்தை பின்பக்கமாக திருப்பிக்கொண்டார்.
அரசு விழாவில் மாவட்ட கலெக்டரின் அழகை நாலாந்தர அளவுக்கு இறங்கி, மந்திரி
ராஜாராம் பாண்டே வர்ணித்து பேசியது, சமாஜ்வாடி கட்சி தொண்டர்களில் ஒரு
பிரிவினரிடையேயும், பொதுமக்களிடையேயும் பெருத்த சர்ச்சையை ஏற்படுத்தி
உள்ளது.
அரசு விழாவில் அநாகரிகமாக நடந்து கொண்ட
மந்திரி ராஜாராம் பாண்டே பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற கோரிக்கை
எழுந்துள்ளது. இதுபற்றி ஆளும் சமாஜ்வாடி கட்சி எம்.எல்.ஏ.வான ரவிதாஸ்
மஹ்ரோத்ரா கருத்து தெரிவிக்கையில், மந்திரி பாண்டே நடந்துகொண்ட விதம்,
கட்சிக்கும், அரசுக்கும் மக்கள் மத்தியில் கெட்ட பெயரை ஏற்படுத்தி விடும்
என கூறினார்.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?