Tuesday 5 February 2013

+2, எஸ்.எஸ்.எல்.சி. பரீட்சை நடக்கும் 2 ஆயிரம் பள்ளிகளில் ஜெனரேட் வசதி

தமிழகம் முழுவதும் அரசு பொதுத்தேர்வுக்கு மாணவ - மாணவிகள் தயாராகி வருகிறார்கள். பிளஸ்-2 தேர்வு மார்ச் 1-ந்தேதி தொடங்கி 27-ந்தேதி வரை நடைபெறுகிறது. இந்த தேர்வை 8 லட்சம் மாணவர்களும், ஒரு லட்சம் தனித் தேர்வர்களும் எழுதுகிறார்கள்.  

இதைத் தொடர்ந்து எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு மார்ச் 27-ந்தேதி தொடங்கி ஏப்ரல் 12-ந்தேதி வரை நடக்கிறது. 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை 10 லட்சம் மாணவர்களும் ஒரு லட்சம் தனித் தேர்வர்களும் என மொத்தம் 11 லட்சம் பேர் எழுத உள்ளனர்.

பொதுத்தேர்விற்கான அனைத்து ஏற்பாடுகளையும் அரசு தேர்வுத்துறை செய்து வருகிறது. தமிழகம் முழு வதும் 2000 தேர்வு மையங்களில் பொதுத்தேர்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. தேர்வு மையங்களில் ஒழுங்கீன செயல்களில் ஈடுபடும் மாணவ-மாணவிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்வுத்துறை எச்சரித்துள்ளது.

துண்டு சீட்டு வைத்து எழுதுதல், விடைத்தாளை மாற்றி எழுதுதல், ஆள்மாறாட்டம் செய்தல் போன்ற முறைகேடுகளில் ஈடுபடும் மாணவர்கள் 2 ஆண்டுகளுக்கு தேர்வு எழுத தடை விதிப்பதோடு கிரிமினல் வழக்குப் பதிவு செய்து சட்ட ரீதியான நடவடிக்கையும் எடுக்கப்படும் என்று தேர்வுத்துறை உயர் அதிகாரி கூறினார்.

தேர்வு கூடங்களில் கண்காணிப்பாளர்கள், மாணவர்களை கண்காணித்தாலும்கூட பறக்கும் படை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொள்வார்கள். மின்சாரத்தடை தமிழகம் முழுவதும் பரவலாக இருந்து வரும் நிலையில், அதனால் மாணவர்களின் தேர்வு பாதிக்கக்கூடாது என்பதற்காக கடந்த ஆண்டைபோல இந்த வருடமும் ஜெனரேட்டர் வசதி அனைத்து தேர்வு மையங்களுக்கும் அளிக்கப்படுகிறது.

காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரையில் எந்தெந்த பகுதிகளில் மின்சாரம் தடை உள்ளது என்பதை அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் ஆய்வுசெய்து அதற்கேற்ப ஜெனரேட்டர்களை வாடகைக்கு எடுத்து தேர்வு மையங்களில் அமைத்து கொள்ளவேண்டும் என்று அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும் தேர்வுத்துறை அறிவுறுத்தி உள்ளது.

தேர்வு நடைபெறும் அனைத்து நாட்களும் ஜெனரேட்டர் வசதி தொடர்ந்து அளிக்கப்படவும் மின்சாரத்தடையினால் தேர்வு எவ்விதத்திலும் பாதிக்கப்படாத வகையில் 2000 தேர்வு மையங்களிலும் ஜெனரேட்டர் வசதியை அதிகாரிகள் முன்கூட்டியே உறுதி செய்து கொள்ளவேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மட்டுமின்றி தனியார் பள்ளிகளுக்கும் ஜெனரேட்டர் வசதியை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். அதற்கான செலவினத்தை அரசு தேர்வுத்துறை ஏற்கும்.

பொதுத் தேர்வு தொடங்க இன்னும் 22 நாட்களே உள்ள நிலையில் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகள், தேர்வு நடைபெறும் பள்ளிகளுக்கு சென்று தலைமை ஆசிரியர்களிடம் மின்தடை ஏற்படும் நேரம் குறித்து தகவல் திரட்டி வருகிறார்கள்.

சென்னையை தவிர பிற மாவட்டங்களில் 2 மணி நேரத்திற்கும் மேலாக மின்சாரத் தடை இருப்பதனால் தேர்வு நடைபெறும் நேரத்தில் மின் தடை ஏற்படும் பகுதிகள் எவை எவை என கண்டறியப்பட்டு அதற்கேற்ப ஜெனரேட்டர் வாடகைக்கு எடுத்து அமர்த்த பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger