நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை வெளியிடப்பட்டுள்ள நிலையில் அடுத்த நடவடிக்கைகள் குறித்த செயற்பாடுகள் சிறீலங்காவில் துரிதமடைந்துள்ளன. முதலில் அறிக்கைக்கான சர்வதேச ஆதரவை பெறுதல் என்பதே முதல் பணியாக்கப்பட்டுள்ளது.
எதிர்பார்த்தவாறு ஆதரவு இதுவரை வெளிப்படாத நிலையில் அது குறித்த கண்டனங்கள் சிறீலங்காவிற்குள்ளேயே வெளியாவது அரசிற்கு சவாலாக அமைந்துள்ளது. அதை தடுக்கும் வகையில் பல முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அது அறிக்கையைக் கண்டித்தால் சட்ட நடவடிக்கை என மிரட்டும் அளவிற்கு சென்றுள்ளது.
இந்நிலையில் வெளிப்படையாக அல்லது மறைமுக ஆதரவை வெளியிடும் சில நாடுகளும் அறிக்கையில் பிரேரிக்கப்பட்ட விடயங்களை அமுல் நடத்தக் கோருவது மேலும் சவாலை அரசிற்கு அதிகரித்துள்ளது. இந்நிலையில் இவ்வறிக்கையும் வழமைபோல் கிடப்பில் போட்டுள்ள அரசு, புதிய ஆண்டில் உள்நாட்டு, மட்டும் சர்வதேச மோதலுக்கு தன்னை தயார் செய்துள்ளதாக விசயம் அறிந்த அரச வட்டாரங்கள் தெரிவித்தன.
இது குறித்த உயர்மட்ட கலந்துரையாடல்கள் சமீபத்தில் நடந்துள்ளன. இதில் சனாதிபதியின் சக்திவாய்ந்த சகோதரர்கள் கலந்து கொண்டு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளனர். இதில் கனடா குறித்த கலந்துரையாடலே முதன்மை இடத்தை பிடித்துள்ளது.
குறிப்பாக கனடியப்பிரதமர் காப்பர் மற்றும் வெளி;விவகார அமைச்சர் பெயட் ஆகியோர் தொடர்ச்சியாக சிறீலங்கா குறித்து வெளியிட்டுவரும் கருத்துக்கள் அரச தரப்பை பெரும் சினம் அடைய வைத்துள்ளதாக அவ்வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.
கனடா பல்வேறு சர்வதேச தளங்களில் சிறீலங்கா அரசிற்கு சவாலாகி வருவதாக பல்வேறு விடயங்களை முன்னிலை நிறுத்தி அங்கு கருத்துக்கள் பரிமாறப்பட்டுள்ளன. குறிப்பாக மார்ச்சில் வரவுள்ள ஐ.நா மனித உரிமைகள் அவையத்தின் அமர்வில் கனடாவின் செயற்பாடு குறித்து சிறீலங்கா தரப்பு அச்சம் அடைந்துள்ளது.
மேலும் அடுத்த ஆண்டில் சிறீலங்காவில் நடைபெறவுள்ள கொமன்வெல்த் நாடுகளின் மாநாட்டை புறக்கணிக்கப்போவதாக கனடா தொடர்ந்தும் மிரட்டிவரும் நிலையில் அது குறித்த சர்வதேச ஆதரவு திரட்டும் செயற்பாட்டை கனடா பிறந்த புதியாண்டில் விரைவுபடுத்தலாம் என சிறீலங்கா தரப்பு அச்சப்படுகின்றது.
அதனால் கனடாவை எதிர்கொள்ள பல திட்டங்கள் வரையப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. அதில் குறிப்பாக ஆளும் கன்சவேட்டிக் கட்சிக்கு எதிராக இருந்த கனடியத் தமிழ் மக்கள் சமீபகாலமாக அரசின் காந்திரமான செயற்பாடுகள் காரணமாக அதற்கு ஆதரவாக மாறிவரும் சூழல் சிறீலங்கா அரசை மேலும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.
அதை உடன் தடுத்துநிறுத்தும் செயற்பாடுகள் முதன்மைப்படுத்தப்பட்டுள்ளன. ஊடகவியலாளராக இருந்து பின்னர் அரச வெளிவிவகார துறைக்குள் உள்வாங்கப்பட்டு தற்போது சனாதிபதி ஆலோசகராக உள்ள இனவாதி ஒருவர் இப்பணியில் முதன்மைப்படுத்தப்பட்டுள்ளார்.
இவர் முன்னர் ரொரன்ரொவில் சிறீலங்கா அரச பணியில் இருந்தபோது பல தொடர்புகளை ஏற்படுத்தியிருந்தார் என்றும் கனடியத் தமிழரில் சிலரை முழுமையாக உள்வாங்கியிருந்தார் என்றும் சொல்லப்படுகின்றது.
அவரது தலைமையில் ஒரு குழு கனடியத் தமிழரையும் கனடிய அரசையும் முழுமையாக பிரிக்கும் பணியை ஏற்கனவே ஆரம்பித்துள்ளதாக சொல்லப்படுகின்றது. இக்குழுவில் கனடிய தமிழ் ஊடகவியாளர்கள், துறைசார் விற்பன்னர்கள், இளையோர், மதத் தலைவர்கள், மற்றும் கே.பி குழு எனத் தமிழர் பலரையும் இணைக்கும் முயற்சிகள் தொடர்கின்றன.
மேற்கத்திய நாடுகளில் உள்ள ஆளும் தரப்பிடம் இருந்து அங்கு வாழும் தமிழ் மக்களை அன்னியப்படுத்தி வைப்பது என்பது நீண்டகால சிறீலங்காவின் நாசகாரத்திட்டமாகும்.
கனடிய அரசு குறித்து குழப்பமான, தமிழருக்கு கோபம் வரும் செய்திகளை வெளியிடுதல், கனடிய அரச வட்டாரத்தில் கனடிய தமிழர் குறித்து தொடர்ந்தும் மோசமான தவறான அபிப்பிராயங்களை ஏற்படுத்துதல், கனடிய அரசு தமிழர் ஆதரவு நிலைக்கு வந்துள்ள நிலையில் கனடிய எதிர்கட்சிகளையாவது சிறீலங்கா ஆதரவு நிலைக்கு கொண்டுவருதல் ஊடாக கனடிய அரசிற்கு அழுத்தத்தை அதிகரித்தல், கனடிய கட்சிகளுக்குள் சிறீலங்கா ஆதரவு தரப்பின் தாக்கத்தை அதிகரித்தல், இலைமறையாக இருந்து தமிழர் தளத்தை கனடிய அரசியலில் வலுவாக்கிவருவோரை இனம்கண்டு அழித்தல் எனப் பலசெயற்பாடுகள் முதன்மைப்படுத்தப்பட்டுள்ளன.
2012ஆம் ஆண்டு கனடியத் தமிழருக்கு சவால் நிறைந்த ஆண்டாக, ஒரு அரசியல் போர்களமாக விரிந்துள்ளது என்றார் கொழும்பில் உள்ள சிரேஸ்ட தமிழ் பத்திரிகையாளர் ஒருவர். கடந்த ஆண்டில் வலுவாக இருந்த பிரித்தானியத் தமிழர்கள் இவ்வாண்டில் சிதையுண்டு போயுள்ளமையையும் அவர் நினைவு கூர்ந்தார். கனடிய அரசு சிறீலங்கா தற்போது தொடுத்துள்ள சவால் குறித்து அறிந்து வைத்துள்ளதாகவும், ஆனால் கனடியத் தமிழர் இச்சதிவலை குறித்து முழுமையான புரிதலுடன் தயாராக உள்ளனரா என்பதே தனது கேள்வி என்றார் மேலும் அவர்.
அவர் சுவாரசியமான மேலும் ஒரு விடயத்தையும் குறிப்பிட்டார். இக்கலந்துரையாடல்களில் போது சிறீலங்கா அரச தரப்பில் கனடா கடும் விசர்சனத்திற்கு உள்ளானதாகவும், வெறும் மூன்று கோடி மக்களை கொண்ட நாடு எங்களை மிரட்டுவதாக என வர்ணிக்கப்பட்டதாகவும் அவர் மேலும் சொன்னார். இவ்வாறே மேலும் பல நாடுகளும் கடந்த காலங்களில் மோசமாக விமர்சனம் செய்யப்பட்டமையையும் அவர் இங்கு நினைவு கூர்ந்தார்.
அதேவேளை இவ்விமர்சனத்தின் பின் மறைக்கப்பட்ட உண்மைகளையும் சுவாரசியமாக அவர் தெரிவித்தார். சிறீலங்காவின் சனத்தொகை 2 கோடியே 6 லட்சம். உலகில் 56 இடம். கனடாவின் சனத்தொகை 3 கோடியே 46 லட்சம். உலகில் 35வது இடம்.
ஆனால் உலகவங்கியின் கடந்த 10 ஆண்டுக்கணிப்பில் உலகப் பொருளாதாரத்தில் இந்தியாவிற்கு அடுத்து கனடா 10வது இடத்தில். சிறீலங்கா 72வது இடத்தில். உலக நிலப்பரப்பில் 6.7 சதவீத நிலப்பரப்புடன் அதாவது 100 லட்சம் சதுர கிலோ மீற்றர் நிலப்பரப்புடன் கனடா உலகில் 2வது பெரியநாடு. ஆனால் சிறீலங்காவோ வெறும் 0.04 சதவீத நிலப்பரப்புடன் அதாவது 65 ஆயிரத்து 610 சதுர கிலோ மீற்றர் நிலப்பரப்புடன் உலகில் 122 இடத்தில்.
கனடா – சிறீலங்கா மோதலில் முள்ளிவாய்க்காலை இம்முறை சந்திக்கப் போவது யார்? இம்முறை வெற்றிக்கனியை தமிழர்கள் தவறாது பறிப்பார்களா? நடப்பாண்டில் பதில் தெரிந்துவிடும் என்கின்றனர் விசயம் அறிந்தவர்கள்.
http://tamil-cininews.blogspot.com
http://tamil-starmovies.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?