Monday, 28 November 2011

ஆங்கில படங்களுக்கு கிடைக்கும் தியேட்டர்கள் கூட கிடைக்கலயே : பாலை டைரக்டர் ஆதங்கம்!

 
 
 
தமிழர்களுக்கு எதிரான படமான டேம் 999 படத்துக்கு கிடைத்த தியேட்டர்களில் 25 சதவீதம் கூட தமிழகத்தில் எங்களின் பாலை படத்துக்குக் கிடைக்கவில்லையே என அந்தப் படத்தின் இயக்குநர் மற்றும் குழுவினர் ஆதங்கம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பாலை திரைப்பட இயக்குநர் ம.செந்தமிழன் வெளியிட்டுள்ள உருக்கமான கடிதத்தில்,
 
முகம் தெரியாத உறவுகளுக்கு வணக்கம். 'பாலை' என்ற திரைப்படத்தை எழுதி இயக்கியவன் நான். என் பெயர் ம.செந்தமிழன்.
 
'பாலை' படத்தில் அதன் நாயகி காயாம்பூ பேசும் வசனங்களில் எனக்கு நெருக்கமானது, 'பிழைப்போமா அழிவோமா தெரியாதுவாழ்ந்தோம் எனப் பதிவு செய்ய விரும்புகிறோம்' என்பது. 'பாலை' குழுவினர் உங்களிடம் கூற விரும்புவதும் ஏறத்தாழ இதுவே. 'பாலை படம் தமிழினத்தில் பதிவாகுமா அழிந்து போகுமா தெரியாதுஇப்படி ஒரு படம் எடுத்தோம் எனப் பதிவு செய்ய விரும்புகிறோம்.
 
சில நாட்களுக்கு முன் பாலையின் முன்னோட்டக் காட்சியைப் பார்த்த இயக்குனர் பாலுமகேந்திரா, "பாலை உலகத் திரைப்பட வரலாற்றில் குறிக்கத்தக்க இந்தியப் படமாக இருக்கும். இது ஒரு தமிழ்ப் படம் என்பதில் எனக்குத் தனிப்பட்ட கர்வம் உண்டு. எனது 45 ஆண்டுகால சினிமா வாழ்க்கையில் எந்தப் படத்தைப் பார்த்தும் 'இந்தப் படத்தை நான் இயக்கவில்லையே' என ஆதங்கப்பட்டதில்லை. பாலை படம் என்னை அப்படி ஏங்கச் செய்கிறது'" என்று கடிதம் எழுதிக் கொடுத்தார். சத்தியமாக இவ்வார்த்தைகளுக்கான தகுதி எனக்கில்லை. இவை ஒரு மூத்த படைப்பாளியின் உணர்ச்சிவய வார்த்தைகள். முன்னோட்டக் காட்சி பார்த்த கார்ட்டூனிஸ்ட் பாலா முதல் மென்பொருள் இளம் பொறியாளர் விர்ஜினியா ஜோசபின் வரை பாலையை மனமார வாழ்த்துகிறார்கள். இவர்கள் அனைவரின் வேண்டுகோளும் மக்களை நோக்கி இருக்கிறது. 'அவசியம் பாலை படத்தைப் பாருங்கள்' என்கிறார்கள் இவர்கள். எனக்கும் என் குழுவினருக்குமான வேண்டுகோள் மக்களை நோக்கி இல்லை. அதற்கான சூழலும் எழவில்லை. எங்கள் வேண்டுகோள் திரையுலகை நோக்கி இருக்கிறது.
 
தமிழகத்தின் சரி பாதி பகுதிகளில் பாலையைத் திரையிட ஒரு திரை அரங்கு கூட கிடைக்கவில்லை. இதற்கான காரணங்கள் நிறைய. அவற்றை நான் அடுக்க விரும்பவும் இல்லை; இப்போது அதற்கான அவகாசமும் இல்லை. ஓர் உண்மையை உரத்துச் சொல்ல விரும்புகிறேன். 'அதிகாரமும் பெரும் பணமும் இருந்தால் குப்பைகளுக்கும் திரையரங்குகள் திறக்கும். இல்லையென்றால், இயக்குனர், தயாரிப்பாளர் முகங்களில் குப்பை வீசப்படும்'இன்றைக்குத் தமிழகத்தில் உள்ள ஆயிரத்து இருநூறு திரையரங்குகளில் சரி பாதியை மிகச் சில படங்கள் ஆக்கிரமித்துக் கொண்டுள்ளன. இவை ஓடும் திரையரங்குகளுக்குச் சென்று பாருங்கள். மக்கள் கூட்டம் அலைமோதுகிறதா அல்லது இவை வெறுமனே பணபலத்தாலும் அதிகார பலத்தாலும் ஆக்கிரமிக்கப் பட்டுள்ளனவா என்பதை நீங்களே உணரலாம்.
 
ஒவ்வொரு அரங்கத்துக்கும் இலட்சக்கணக்கில் பணம் கொடுக்கப்பட்டு, அவ்வரங்குகளில் வேறு படங்கள் வராமல் பாதுகாக்கப்படுகின்றன. திரைப்படங்களால் நிரம்ப வேண்டிய அவ்வரங்குகள் மிகச் சில முதலைகளின் கழிவுகளால் நாற்றமெடுத்துக் கிடக்கின்றன. தமிழகத்தில் டேம்-999 என்ற படத்துக்குக் கிடைத்த திரையரங்குகளில் 25% கூட பாலைக்குக் கிடைக்கவில்லை! முல்லைப் பெரியாறு அணையின் உரிமையை மலையாளிகளுக்குப் பிடுங்கித் தரும் படமாக இருந்தாலும் பரவாயில்லை; தமிழரின் வரலாற்றைப் பதிவு செய்யும் படத்துக்கு அரங்கு இல்லை. அழுவதைத் தவிர வேறு என்ன வழி?
 
இப்போது டேம்-999 படம் தடை செய்யப்பட்டுவிட்டது. ஆனாலும் அந்தத் திரை அரங்குகளில் மிகச் சில கூட பாலைக்குக் கிடைக்கவில்லை. அவ்வரங்கங்கள், வேறு ஒரு வார்னர் பிரதர்ஸ் தயாரிப்புப் படத்துக்காகக் காத்திருக்கின்றன. ஜாக்கிசானின் 1911 படத்துக்குக் கிடைத்த அரங்குகளின் எச்சில் துளி கூட எங்களுக்குக் கிடைக்கவில்லை. கிடைத்த அரங்குகளில் பாலை 25ம் தேதி வெளியாகிறது. எமக்கு அரங்கு கொடுத்த அரங்க உரிமையாளர்கள், மேலாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் இப்பணியில் தம்மை அளவுக்கு மீறி ஈடுபடுத்திக் கொண்டதால் மிக மோசமான உடல் உபாதையில் சிக்கித் தவிக்கும் என் இனிய நண்பர் 'செங்கோட்டை' திரைப்பட இயக்குனர் சசிகுமார் உள்ளிட்ட அனைவருக்கும் எமது மனமுருகிய நன்றிகள்!
 
இக்கடிதத்தை எழுதுவதால் என்ன பலன் என எனக்குப் புரியவில்லை. ஆனால், நான் ஒரு போதும் நம்பிக்கையை விடுவதில்லை. இயற்கையின் பேராற்றலை வேண்டுகிறேன். அப்பேராற்றலின் அங்கங்களாகவும் படைப்புகளாகவும் விளங்கும் மக்களை நம்புகிறேன். நாங்கள் பந்தயத்தில் பரிசு கேட்கவில்லை நிற்க ஒரு அடி மண் கேட்கிறோம்!
 
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.



0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger