Monday 28 November 2011

கர்ப்பிணி என்று சொன்ன பிறகும் போலீஸ்காரர் என்னை கற்பழித்தார்; பெண் பரபரப்பு பேட்டி

 
 
 
கர்ப்பிணி என்று சொன்ன பிறகும் போலீஸ்காரர் கற்பழித்தார் என்று பெண் பரபரப்பு புகார கூறினார். வேலியே பயிரை மேய்ந்த கதையாக பொதுமக்களுக்கு காவலாக இருக்க வேண்டிய போலீசார் கற்பழிப்பு குற்றத்தில் ஈடுபட்டதாக விழுப்புரம் மாவட்டத்தில் பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
 
திருக்கோவிலூர் அருகே உள்ள தி.மண்டபம் கிராமத்தைச் சேர்ந்த காசியின் மனைவி லட்சுமி (வயது 20). இருளர் பழங்குடியனத்தைச் சேர்ந்தவர். இவர் நேற்று விழுப்புரம் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு கார்த்திகா, வைகேஸ்வரி, ராதிகா ஆகியோருடன் வந்து போலீசார் மீது கற்பழிப்பு குற்றச்சாட்டு கூறி புகார் மனு கொடுத்தார்.
 
அதில் கடந்த 22-ந்தேதி பிற்பகல் 3 மணிக்கு 3 போலீசார் எனது கணவர் காசியை விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். எங்களது உறவினர்கள் திருக்கோவிலூர் போலீஸ் நிலையம் சென்று கேட்டபோது, காசியை விழுப்புரத்துக்கு கொண்டு சென்று விட்டதாக தெரிவித்தனர். பின்னர் இரவு 8 மணிக்கு வேனில் வந்த 8 போலீசார் எங்கள் வீட்டை சோதனை செய்து எங்களையும் மாமனார் முருகன், மாமியார் வள்ளி, எனது கணவரின் சகோதரர் ஆகிய 7 பேரையும் அடித்து உதைத்து வேனில் தூக்கிப்போட்டு கொண்டு சென்றனர்.
 
அதன் பிறகு என்னையும் (லட்சுமி) ராதிகா, வைகேஸ்வரி, கார்த்திகா ஆகியோரையும் தைலாபுரம் தோப்பிற்கு அழைத்துச் சென்று கற்பழித்தனர். மறுநாள் எங்களை வீட்டின் அருகே இறக்கி விட்டனர் என்று கூறி உள்ளார்.
 
புகார் கொடுக்க வந்த ஒரு பெண் கூறுகையில், நான் கர்ப்பிணியாக இருக்கிறேன். என்னையும் போலீசார் கீழே தள்ளி கற்பழித்தனர். நான் கர்ப்பிணி என்னை விட்டு விடுங்கள் என்று கெஞ்சினேன். கர்ப்பிணியானால் என்ன என்று கூறி போலீசார் இரக்கமின்றி கற்பழித்தனர்.
 
போலீசார் எங்கள் வாயில் துணியை திணித்து இந்த கொடூர செயலில் ஈடுபட்டனர் என்று அழுதுக்கொண்டே கூறினார்.
 
இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து டி.ஐ.ஜி. சக்திவேல்,போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் ஆகியோர் அந்த பெண்களிடம் விசாரணை நடத்தினார்கள். அப்போது போலீசார் எங்களை கற்பழித்தது உண்மைதான் என்று கூறினார்கள். நேற்று இரவு போலீசார் 4 பெண்களையும் தங்கள் பாதுகாப்பிலேயே வைத்து தொடர்ந்து விசாரித்தனர். விடிய விடிய இந்த விசாரணை நீடித்தது. அதன் பிறகு 4 பேரையும் போலீஸ் ஜீப்பில் ஏற்றி திருக்கோவிலூர் அழைத்து சென்றனர். அங்கு சம்பவம் நடந்ததாக கூறப்படும் இடத்திற்கு அழைத்து சென்று விசாரிக்க உள்ளனர்.
 
அதன்பிறகு 4 பெண்களையும் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்ப போலீசார் முடிவு செய்துள்ளனர். இன்று அல்லது நாளை மருத்துவ பரிசோதனை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாவட்ட கலெக்டர் மணிமேகலையும் தனியாக இது சம்மந்தமாக விசாரணை நடத்தி வருகிறார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கர் நேற்று இரவு சம்பவம் நடந்ததாக கூறப்படும் தைலாபுரம் காட்டுப்பகுதிக்கு சென்று விசாரித்தார்.
 
காசி வீடு உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களிடமும் விசாரித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும் போது "லட்சுமியின் குடும்பத்தினர் 6 பேரை திருட்டு வழக்கில் கைது செய்தோம். எனவே போலீசார் மீது அவர்கள் கற்பழிப்பு புகார் கூறுகிறார்கள். இது சம்மந்தமாக கலெக்டர் அறிக்கை வந்த பிறகு மேல் நடவடிக்கை எடுக்கப்படும். போலீசார் மீது தவறு இருந்தால் அவர்கள் மீது நிச்சயம் நடவடிக்கை எடுப்போம்" என்று கூறினார்.
 
பழங்குடியின இருளர் பாதுகாப்பு சங்க ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் கல்யாணி 4 பெண்களையும் போலீசில் புகார் கொடுக்க தேவையான ஏற்பாடுகளை செய்தார். பேராசிரியர் கல்யாணி நிருபரிடம் கூறியதாவது:- 4 பெண்களையும் போலீசார் வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். ஆனால் இது உண்மையல்ல என்பது போல மறைக்க முயற்சி நடக்கிறது. நேற்று புகார் கொடுத்ததுமே விசாரணை என்ற பெயரில் 4 பெண்களையும் தங்கள் பாதுகாப்பில் போலீசார் கொண்டு சென்று விட்டனர். அவர்களை இரவு முழுவதும் தங்கள் பாதுகாப்பிலேயே வைத்துள்ளனர்.
 
தற்போது இந்த புகாரை வாபஸ் பெற வைக்க போலீசார் அவர்களை மிரட்டி வருகிறார்கள். இது சம்மந்தமாக நாளை விழுப்புரத்தில் மக்கள் உரிமை அமைப்புகள் மற்றும் அனைத்து கட்சிகள் பங்கேற்கும் கூட்டத்தை நடத்துகிறோம். அதில் உரிய நடவடிக்கை எடுப்பது பற்றி முடிவு எடுப்போம்.
 
இவ்வாறு அவர் கூறினார்.



0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger