இந்தியாவின் உயரிய விருதான பாரத் ரத்னா கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு வழங்கப்பட வேண்டும் என்று சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே தெரிவித்துள்ளார்.
அன்னா ஹசாரேவின் சொந்த ஊரான ராலேகான் சித்தியில் அவரது தாயின் நினைவாக நடத்தப்படும் டென்னிஸ் போட்டியை நேற்று அவர் துவங்கி வைத்தார். பின்னர் அவர் பிடிஐயிடம் கூறியதாவது,
இளைய சமுதாயத்தினர் போற்றும் நபர் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர். அவர் கிரிக்கெட்டில் பல சாதனைகள் படைத்து இந்தியாவுக்கு பெருமை தேடித் தந்துள்ளார். அப்படிப்பட்ட அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கி கௌரவிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன் என்றார்.
சச்சின் டெண்டுல்கர் டெஸ்ட் போட்டிகளிலும் சரி, ஒரு நாள் சர்வதேசப் போட்டிகளிலும் சரி புதிய சாதனைகள் படைத்துள்ளார். இந்த இரண்டு வகையான போட்டிகளிலும் அதிக ரன்கள் குவித்தவர் மற்றும் அதிக சதம் அடித்தவர் என்ற பெருமை சச்சினுக்கே உரியது. ஒரு நாள் சர்வதேசப் போட்டிகளில் இரட்டை சதம் அடித்த ஒரே வீரர் சச்சின் தான். அவர் சர்வதேசப் போட்டிகளில் 99 சதம் அடித்துள்ளார். இன்னும் ஒரேயொரு சதம் அடித்தால் 100 சதம் அடித்து புதிய சாதனை படைத்துவிடுவார்.
தற்போது மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக நடந்து கொண்டிருக்கும் டெஸ்ட் போட்டிகளில் சச்சின் விளையாடி வருகிறார். இதில் எப்படியும் அவர் சதம் அடித்துவிடுவார் என்று அவரது ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் இருக்கின்றனர்.
சச்சினுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று அரசியல் தலைவர்கள் முதல் பல பெரும்புள்ளிகள் வரை பரிந்துரைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?