Thursday 17 November 2011

2வது டெஸ்ட்டில் இந்தியாவுக்கு இன்னிங்க்ஸ் வெற்றி

 
 
 
கொல்கத்தாவில் நடந்த இந்தியா, மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையேயான 2வது டெஸ்ட் போட்டியில் இந்தியா இன்னிங்க்ஸ் மற்றும் 15 ரன்களில் வெற்றி பெற்றது.
 
கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் இந்தியா, மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையேயான 2வது டெஸ்ட் போட்டி நடந்தது. 'டாஸ்' வென்று முதல் இன்னிங்க்ஸ்சை விளையாடிய இந்திய அணி, 7 விக்கெட் இழப்புக்கு 631 ரன்களை குவித்து டிக்ளேர் செய்தது. டிராவிட், லட்சுமணன், டோணி ஆகியோர் சதமடித்து கலக்கினர்.
 
பின்னர் முதல் இன்னிங்சை துவக்கிய மேற்கிந்திய தீவுகள் அணியில் 2வது நாள் முடிவில் ஏ.பரத் (1), பிரத்வோய்ட் (17) ஆகியோர் ஆட்டமிழந்து, 34 ரன்கள் எடுத்திருந்தது. பின்னர் 3ம் நாள் ஆட்டத்தை இன்று காலையில் துவங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி, அடுத்தடுத்து விக்கெட்கள் சரிந்தது.
 
ஆட்டம் ஆரம்பித்த சில நிமிடங்களில் எட்வர்ட் (16) அவுட்டானார். சற்று நிலைத்து ஆடிய பிரவோ (30), சந்தர்பால் (4) சாமுவேல்ஸ் (25), சம்மி (18) ஆகியோரும் அவுட்டாகினர். பின்னர் ரோச் (2), பாக் (13), எட்வேர்ட் (16) என்று வந்தவர்கள் அனைவரும் வரிசையாக பிரிவிலியனை நோக்கி நடையை கட்டினர். காலை 11 மணிக்குள் அனைத்து விக்கெட்களையும் இழந்த மேற்கிந்திய தீவுகள் 153 ரன்களில் சுருண்டது.
 
இதனால் மேற்கிந்திய தீவுகள் அணி பாலோ-ஆன்னாக 2ம் இன்னிங்க்சை தொடர்ந்தது. 2ம் இன்னிங்க்சின் முதல் விக்கெட்டாக யாதவ் பந்தில் டோணியிடம் கேட்ச் கொடுத்து பரத்வேய்ட் (9) வெளியேறினார். அதன்பின் விக்கெட் இழப்பை தடுக்க போராடிய அட்ரீயன் பரத் (62), கிரிக் எட்வர்ட்ஸ் (60) ஆகியோர் ஆட்டமிழந்தனர்.
 
அதன்பின் தோல்வியை தவிர்க்கும் நிலையில் டெரன் பிராவோ, சந்தர்பால் ஜோடி பொறுப்பாக விளையாடியது. 3ம் நாள் முடிவில் மேற்கிந்திய தீவுகள் அணி 3 விக்கெட்களை இழந்து 195 ரன்களை எடுத்திருந்தது. டெரன் பிராவோ (38), சந்தர்பால் (21) ஆகியோர் களத்தில் இருந்தனர்.
 
4ம் நாள் ஆட்டம் துவங்கிய சில அரை மணி நேரத்தில் சந்தர்பால் (47) ஆட்டமிழந்தார். இதனால் 3 ரன்களில் அரைசதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார். அதன்பிறகு சிறப்பான ஆடிய பிராவோ (136) ஆட்டமிழந்தார். பின்னர் வந்த பாக் 3 ரன்களில் ஓஜா பந்தில் கேட்சு கொடுத்து அவுட்டானார். சாமுவேல்ஸ் (84) ரன்கள் எடுத்து சற்று ஆறுதல் அளித்தார். 3 சிக்ஸ்கள் அடித்து சற்று நேரம் இந்தியா ரசிகர்களை பயப்படுத்திய சம்மி (32) யாதவ்விடம் போல்டானார்.
 
பின்னர் ரோச் (1), பிஷூ (0) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, மேற்கிந்திய தீவுகளின் 2வது இன்னிங்க்ஸ் முடிவுக்கு வந்தது. மேற்கிந்திய தீவுகள் அனைத்து விக்கெட்களையும் இழந்து 463 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இந்திய அணி 1 இன்னிங்க்ஸ், 15 ரன்களில் வெற்றி பெற்றது.
 
இந்திய தரப்பில் சிறப்பாக பந்துவீசிய உமேஷ் யாதவ் 4 விக்கெட்களை வீழ்த்தி வெற்றிக்கு உதவினார். இஷாந்த் சர்மா, ஓஜா, அஸ்வின் ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.
 
சதமடித்து வெற்றிக்கு உதவிய லட்சுமண் ஆட்டநாயகனாக தேர்வு
 
இந்தியாவின் வெற்றிக்குப் பேருதவி புரிந்த விவிஎஸ் லட்சுமண் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். 12 பவுண்டரிகளுடன் 176 ரன்களைக் குவித்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார் லட்சுமண் என்பது குறிப்பிடத்தக்கது.



0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger