நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுஉலைகளை மூட வலியுறுத்தி, இடிந்தகரையில் செப்.11 முதல் 22 வரை 127 பேர் காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர். பிரதமருடன் தமிழக அமைச்சர்கள் மற்றும் அணுமின் நிலைய எதிர்ப்பாளர்கள் குழு நடத்திய சந்திப்பில் சாதகமான முடிவு எட்டப்படவில்லை. இதைத்தொடர்ந்து 2ம்கட்டமாக கடந்த 9ம்தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். இன்று 6வது நாளாக போராட்டம் தொடர்கிறது. நேற்று இருகட்டங்களாக போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
அதன்படி இடிந்தகரை லூர்துமாதா ஆலை 106 பேர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர். மற்றொரு கட்டமாக கன்னியாகுமரி-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை எஸ்.எஸ்.புரம் விலக்கில், சுமார் 30 கிராமங்களைச் சேர்ந்த மக்கள், சாலையின் இருபுறமும் பந்தல் அமைத்து மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
நேற்றிரவு அணுமின் நிலைய நுழைவு வாயில் முன்பு 25க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அவர்களை போலீசார் அப்புறப்படுத்த முயன்றபோது 'தள்ளுமுள்ளு' ஏற்பட்டது.
இதில் சிலருக்கு காயம் ஏற்பட்டதாகவும், அவர்களை சிகிச்சைக்காக நாகர்கோவில் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அங்கு அனுமதிக்க மறுத்ததாகவும் போராட்டக்குழுவினர் புகார் கூறி உள்ளனர். இதனால் இடிந்தகரை மற்றும் எஸ்எஸ்.புரம் பகுதியில் பதற்றம் ஏற்பட்டதால், நெல்லை டிஜிபி வரதராஜூ, எஸ்பி விஜயேந்திரபிதரி, வள்ளியூர் ஏஎஸ்பி விஜயகுமார் ஆகியோர் அங்கு விரைந்தனர். அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் செய்யப்பட்டுள்ளன. ஏராளமான போலீசாரும் குவிக்கப்பட்டுள்ளனர்.
இன்று அதிகாலை 5 மணிக்கு கூடன்குளம் அணு மின்நிலையத்தில் பணியாற்றும் ரஷ்ய மற்றும் இந்திய அணுசக்தி விஞ்ஞானிகள், அணு மின்நிலைய பொறியாளர்கள் சுமார் 400 பேர் அங்கு பணிக்கு செல்வதற்காக அவர்களது குடியிருப்பான அணுவிஜய் டவுன்சிப் நுழைவு வாயிலில் கூடினர்.
குடியிருப்புகளுக்கு வெளியே போராட்டக்காரர்கள் ஏராளமான அளவில் குவிந்திருந்தனர். இதையடுத்து போலீசார் அந்த இடத்தில் அதிக அளவில் குவிக்கப்பட்டனர். பாதுகாப்பு பிரச்னை காரணமாக ஊழியர்கள் இன்று பணிக்கு செல்லவேண்டாம் என்று போலீசார் கூறினர். இதனால் விஞ்ஞானிகள், பொறியாளர்கள் வெளியே வர முடியாமல் வீட்டுக்குள் முடங்கினர்.
மேலும் ஒப்பந்த பணியாளர்களையும், போராட்டக்காரர்கள் தடுத்து நிறுத்தினர். இதை கண்டித்த போலீசார், 'நிலைமை எல்லை மீறி சென்றால் எந்த நடவடிக்கை எடுக்கவும் தயங்க மாட்டோம்' என்று தெரிவித்தனர். இதனால் கூடன்குளத்தில் பதற்றமான நிலை நிலவுகிறது.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?