அதிமுகவில் கேட்ட இடமும் மரியாதையும் கிடைக்காததால், தனது அதிருப்தியை வெளிப்படுத்திவிட்டு தேமுதிகவுடன் கூட்டணி அமைத்துவிட்டது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. ஆனால், அந்தக் கட்சியின் முக்கியமான இணைக் கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைவர் தா.பாண்டியன் அதிமுகவிடம் தொடர்நது சீட் கேட்டு பேச்சு நடத்திக் கொண்டுள்ளார்.
முன்னாள் எம்.எல்.ஏ. பழனிச்சாமி தலைமையிலான இந்திய கம்யூனிஸ்ட் குழு அதிமுகவுடன் பேச்சு நடத்தி வருகிறது. ஆனால் உடன்பாடு தான் ஏற்பட்டவில்லை. காரணம், சிபிஐ கேட்கும் இடங்களில் 3ல் 1 பங்கு கூட தர அதிமுக தயாராக இல்லை.
மேலும் 2006 உள்ளாட்சி தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் வெற்றி பெற்ற இடங்களை ஒதுக்கக்கூட அதிமுக தலைமை மறுத்துவிட்டது. ஆனாலும் அதிமுகவுடன் பேசிக் கொண்டே இருக்கிறது இந்திய கம்யூனிஸ்ட்.
இத்தனைக்கும் தேமுதிக-மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டணிக்கு வருமாறு இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு மார்க்சிஸ்ட் மாநிலத் தலைவர்கள் பத்திரிக்கைகள் மூலம் அழைப்பும் விடுத்துப் பார்த்துவிட்டனர்.
முன்னதாக தனிப்பட்ட முறையில் இந்திய கம்யூனிஸ்டிடம் மார்க்சிஸ்ட் தலைவர்கள், தேமுதிக கூட்டணிக்குப் போகலாம் என்று கூறியும் கூட தா.பாண்டியன் அதை ஏற்கவில்லை என்று தெரிகிறது.
இதையடுத்தே, ''எங்கள் அணியில் சேருமாறு இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு அழைப்பு விடுக்கிறோம். நாங்கள் அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேறியதற்கு காரணம் அ.தி.மு.க. தலைமையின் தவறான அணுகுமுறைதான்'' என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலத் தலைவர் ஜி.ராமகிருஷ்ணன் பத்திரிக்கைள் மூலம் தா.பாண்டியனுக்கு அழைப்பு விடுக்க நேர்ந்தது என்கிறார்கள்.
உங்கள் கூட்டணிக்கு இந்திய கம்யூனிஸ்ட் வரும் என்று நம்புகிறீர்களா என்று கேட்டதற்கு, இந்திய கம்யூனிஸ்டு கட்சித் தலைவர்களை நேற்று சந்தித்து பேசினோம். எங்கள் கூட்டணிக்கு அவர்கள் வருவார்கள் என்று நம்புகிறோம் என்றார் ராமகிருஷ்ணன்.
இந் நிலையில் இன்று காலை சென்னையில் தா.பாண்டியன் கட்சியின் மாநிலக் குழுவைக் கூட்டி ஆலோசனை நடத்தி வருகிறார். அதில் கட்சியின் மூத்த தலைவரான நல்லக்கண்ணு, பழனிச்சாமி உள்பட பலர் கலந்து கொண்டுள்ளனர்.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?