Friday 19 August 2011

உங்கள் விதியை மா���்ற 10 வழிகள்!



உங்கள் விதியை உங்களாலேயே மாற்ற முடியும் என்று சொல்வார் ஷீர்டி சாய்பாபா.
அது எப்படி?
விடையையும் பாபாவே சொல்லியிருக்கிறார்.
1. தினமும் கடவுளைப் பிரார்த்தனை செய்யுங்கள்.
2. எல்லாம் கடவுள் அருளால் நடக்கிறது என்பதை முழுமையாக நம்புங்கள். தீபம், ஊதுபத்தி, மெழுகுவத்தி, சாம்பிராணி ஏதாவது ஏற்றி இறைவனை வணங்குங்கள்.
3. உங்களுக்குத் தெரிந்த மந்திரங்கள், ஸ்லோகங்களைச் சொல்லுங்கள்.
4. உங்கள் வருமானத்தை நியாயமான வழியில் பெறுங்கள். முறையில்லாத வழிகளில் பணத்தை சம்பாதிக்காதீர்கள்.
5. எண்ணம், சொல், செயல்களில் உண்மையைக் கடைப்பிடியுங்கள்.
6. மற்றவர்களுக்கு எந்த பிரதிபலனும் இல்லாமல் உதவி செய்யுங்கள்.
7. பசி என்று வருபவர்களுக்கும், ஏழைகளுக்கும் உங்களாலான உதவியைச் செய்யுங்கள்.
8. வாழ்க்கை நடத்த என்ன தேவையோ அது மட்டும் இருந்தால் போதும், குறைந்த தேவைகளோடு எளிமையாக இருங்கள்.
9. தியாகம், வைராக்கியம் இரண்டையும் மறக்காமல் செயல்படுத்துங்கள்.
10. உங்களின் ஒவ்வொரு விநாடியும் கடவுளால் கண்காணிக்கப்படுகிறது என்பதையும், அவரது ஆசியுடன்தான் வாழ்கிறீர்கள் என்பதையும் உணர்ந்து கொள்ளுங்கள்.
ஆமாம். பாபா சொன்ன இந்தப் பத்து விதிகளையும் யார் கடைப்பிடிக்கிறார்களோ அவர்களுக்கு வாழ்வில் எந்தப் பிரச்னையும் வராது. விதியையே மாற்றியமைக்கும் வல்லமை அவர்களுக்கு உண்டு என்று சொல்லி ஆசி வழங்குகிறார் பாபா.
என்ன, பாபாவுடன் அவரது விதிகளையும் பின் பற்றுவோமா?
மராட்டியில் புலமை பெற்ற அறிஞர் தாஸ்கணு. ஏராளமான நூல்களையும் எழுதியிருக்கிறார். பாபாவின் சிறந்த பக்தரான தாஸ்கணு, ஈசோபனிஷத்துக்கு மராட்டிய மொழியில் உரை எழுத ஆரம்பித்த நேரம் அது.
உபநிஷதங்கள், ஆழ்ந்த பொருள் தரும் மந்திர நூல்கள். வேதங்கள், மந்திரங்கள், சடங்குகள் ஆகியன பற்றி முழுமையாகச் சொல்லும் அவற்றிற்கு உரை எழுதுவது அத்தனை சுலபமல்ல. அதிகமான புலமையும், கடினமான பயிற்சியும் இருந்தால் தான் அவற்றைப் புரிந்து கொள்ளவே முடியும். அதுவும் ஈசோ உபநிஷதம் என்பது, உபநிடதங்களின் தாய் போன்றது. அதாவது மற்ற உபநிஷதங்களில் எல்லாம் ஈசோ உபநிஷத்தில் கூறப்பட்டுள்ள விஜயங்களின் விளக்கம்தான் இருக்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
தீமை செய்யத் தூண்டும் மயக்கங்களுக்கும், கவலைகளுக்கும் இடையில் கலக்கமடையாத கர்ம யோகம் என்னும் போதனைத் தொகுப்புக்கு முன்னோடிதான் ஈசோ உபநிஷதம்.
அத்தனை சிறப்பு வாய்ந்த ஈசோ உபநிஷதத்தினை அறிஞர் தாம்கணு, மராத்திய யாப்பு வகையில் மொழி பெயர்த்தார். ஆனால் அந்த உரை அவருக்கு திருப்தியாக வரவில்லை. எத்தனை முறை எழுதிப் பார்த்தும் சரியாக வரவில்லை.
சில அறிஞர்களிடம் கலந்து பேசினார். அவர்களது அபிப்பிராயங்களைக் கேட்டு, மாறுதல் செய்தும் பார்த்தார். ம்ஹூம். அதுவும் நன்றாக வரவில்லை.
என்ன செய்வது? எப்படி செய்வது?
யோசித்தார் தாஸ்கணு.
ஈசோ உபநிஷதம் என்பது வேதங்களின் சாராம்சம். பிறப்பு, இறப்பு என்னும் கட்டுகளை அறுத்தெறியக்கூடிய ஆயுதம். எனவே அதை, தன்னைப் போன்ற ஒரு வெறும் புலவரால் மட்டும் மொழி பெயர்க்க முடியாது என்ற முடிவுக்கு வந்தார்.
வேறு எப்படி?
பற்றுதல் எதுவும் இல்லாத ஒரு மகா ஞானி மனது வைத்தால் மட்டுமே தன்னால் உரை எழுத முடியும் என்று புரிந்தது அவருக்கு.
அப்படிப்பட்டவர் ஒரே ஒருவர்தானே இருக்கிறார்? நம் சாயி பாபா தானே அவர்.
அடுத்த ரயிலிலேயே ஷீர்டிக்குக் கிளம்பினார் தாஸ்கணு.
பாபாவின் பாதங்களில் விழுந்தார். "நான் அறிஞன்தான். நிறைய படித்தவன்தான். ஆனால் என்னால் உரை எழுத முடியவில்லை. அந்த ஈசோ உபநிஷதத்தின் சரியான பொருளைப் புரிந்து கொள்ளக் கூட என்னால் இயலவில்லை. அதில் எனக்கு நிறைய சந்தேகங்கள் எழுகின்றன. ஐயங்களை எல்லாம் போக்கி எனக்க சரியான தீர்வை தாங்கள்தான் தர வேண்டும்' என்று வேண்டினார்.
அதற்கு பாபா என்ன சொன்னார் தெரியுமா?
பாபா புன்னகைத்தார். "அந்த சந்தேகங்களைச் சொல்ல நான் எதற்கு? நீ உன் ஊருக்குத் திரும்பிச் செல்லும் வழியில் மும்பையின் புறநகர்ப் பகுதியில் ஒரு பக்தர் வீட்டு வேலைக்காரச் சிறுமியே உன் சந்தேகங்களைத் தீர்த்து வைப்பாள்' என்று பதில் சொன்னார் பாபா.
கூடியிருந்தவர்கள் மெல்லச் சிரித்தார்கள். "பாபா வேடிக்கை செய்கிறாரா என்ன? எல்லாம் படித்த தனக்கே ஈசோ உபநிஷத் புரியவில்லை என்று தாஸ்கணு சொல்லும்போது, படிப்பறிவில்லாத யாரோ வேலைக்காரி பதில் சொல்வாள் என்கிறாரே?' என்று தங்களுக்குள் பேசிக் கொண்டார்கள்.
ஆனால் பக்தர் தாஸ்கணு அப்படி நினைக்கவே இல்லை. பாபா என்ன சொன்னாலும் அது சரியாகத்தான் இருக்கும். பாபாவின் சொல், ஆண்டவன் கட்டளை என்று முழுமையாக நம்பிய அவர் ஷீர்டியை விட்டு கிளம்பினார்.
வீட்டுக்குச் செல்லும் முன்பு, மும்பையின் கடைப் பகுதியான விலேபார்லேயில் உள்ள நண்பர் சாஹேத் தீட்சித்தைக் காணச் சென்றார். அன்றைக்கு அவர் வீட்டிலேயே தங்கினார்.
பொழுது விடிந்தது. எழுந்து குளித்து முடித்து விட்டு, கண் மூடி பாபாவை நினைத்துப் பிரார்த்தனை செய்து முடித்தார்.
அப்போதுதான் அந்த வீட்டில் வேலைக்காரச் சிறுமி வாசலில் அமர்ந்து பாத்திரங்களைக் கழுவியபடி இனிமையாகப் பாடிக் கொண்டிருப்பது அவர் காதில் விழுந்தது.
உற்று கவனித்தார்.
"சிவப்பு கலர் பாவாடை எத்தனை அழகு!
அதன் பார்டர் கூட எத்தனை அருமை!
எம்ப்ராய்டரி கூட எத்தனை அற்புதம்!'
இப்படித்தான் தன்னை மறந்து பாடிக் கொண்டிருந்தாள் அந்த வேலைக்காரச் சிறுமி. பாவாடை பற்றிப் பாடிய அவள் அணிந்திருந்த பாவாடையோ கிழிந்து போய் அழுக்கடைந்து காணப்பட்டது. அவளது முகமோ ஏக்கத்துடனும் வருத்தத்துடனும் இருந்தது.
நெகிழ்ந்து போய்விட்டார் தாஸ்கணு. உடனே அவளுக்கு ஒரு புத்தாடை வாங்கிக் கொடுத்தார். மகிழ்ந்து போய்விட்டாள் அந்தச் சிறுமி. உடனே அதை அணிந்து கொண்டாள் சுற்றிச் சுற்றி ஓடினாள். நடனமாடினாள். உற்சாகம் பொங்கி வழிந்தது அவளுக்குள்.
ஆனால் மறுநாள், வழக்கம் போல் பழைய கிழிந்த உடையிலேயே வலம் வந்தாள். அவள் வேலைக்காரச் சிறுமி. அப்படித்தான் இருக்க வேண்டிய நிலை.
ஆனால் இதுநாள் வரை அவள் முகத்தில் இருந்த ஒரு சோகம் இப்போது காணவில்லை. அவளுக்குச் சொந்தமாக ஒரு புத்தாடை இருப்பதால், அவள் அன்று முதல் மகிழ்வுடனேயே காணப்பட்டாள்.
அதைக் கண்ட தாஸ்கணு துள்ளிக் குதித்தார். இதுநாள்வரை அவருக்கு குழப்பத்தை ஏற்படுத்தி வந்த ஈசோ உபநிஷதப் பாடலுக்கு அவருக்கு விளக்கம் கிடைத்துவிட்டது.
ஆமாம். நமது இன்ப துன்ப உணர்ச்சிகள் எல்லாம் நம் மனத்தில் பாங்கைப் பொருத்தே அமைகின்றன. கடவுள் எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார். கடவுளால் நமக்கு கிடைக்கும் எல்லாவற்றையும் மகிழ்ந்து ஏற்றுக் கொள்ள வேண்டும். எல்லாமே கடவுளின் பரிசு தான் என்று நினைப்பவனுக்குக் கவலை என்பதே தோன்றாது.
இதுதான் ஈசோ உபநிஷத்தின் அடிப்படைத் தத்துவம். இதுநாள் வரை அறிஞர் தாஸ்கணுவைக் குழப்பி ஆட்டம் காட்டிய விளக்கம் ஓர் ஏழைச் சிறுமியைக் கண்டதால் சுலபமாகத் தீர்ந்தது.
எல்லாம் பாபாவின் அருள். பாபாவின் கருணை. பாபாவின் ஆசி.
சரி, இந்த விளக்கத்தை பாபாவே நேரடியாகச் சொல்லியிருக்கலாமே, எதற்காக ஓர் ஏழைச் சிறுமியின் மூலம் இதைச் சொல்ல வேண்டும் என்று உங்களுக்குத் தோன்றியிருக்கலாம்.
அந்த அபலைச் சிறுமிக்கு ஒரு புத்தாடை தர வேண்டும் என்று கடவுள் நினைத்திருக்கிறார். அதை இப்படி நிறைவேற்றியிருக்கிறார். அவ்வளவுதான்.
தாஸ்கணு, பாபாவை நம்பினார். கொஞ்சம் கூடச் சந்தேகம் கொள்ளவில்லை. எங்கோ பம்பாய் அருகே ஒரு வேலைக்காரச் சிறுமி மூலம் விடை கிடைக்குமா என்றெல்லாம் அவர் சந்தேகப்படவேயில்லை.
அவர் நினைத்தது நடந்தது.




http://snipshot.blogspot.com




  • http://snipshot.blogspot.com


  • 0 comments:

    Post a Comment

    உங்களது கமெண்ட் என்ன ?

    My Blog List

    Popular Posts

    Popular Posts

     
    Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
    Theme Template by BTDesigner · Powered by Blogger