இயக்குநர் பாரதிராஜா மற்றும் அகத்தியன் ஆகியோர் தன் மீது கோபத்தில் இருந்த போது, தனது டப்பிங் திறமையால் அசரடித்திருக்கிறார் நடிகர் கார்த்திக்.
சீன் 1: 'நாடோடித் தென்றல்' டப்பிங் விவகாரம்
பாரதிராஜா இயக்கத்தில் கார்த்திக், ரஞ்சிதா நடிப்பில் உருவான படம் 'நாடோடித் தென்றல்'. அப்படத்திற்காக கார்த்திக் டப்பிங் மட்டும் பாக்கி இருந்தது. அப்போது கார்த்திக் சரியான நேரத்திற்கு வருவதில்லை என பல பஞ்சாயத்துகள் நடந்து கொண்டிருந்தது. டப்பிங் பண்ணுவதற்காக நீண்ட நாட்களாக கார்த்திக்கை படக்குழு கேட்டுக்கொண்டே இருந்திருக்கிறது. ஆனால், கார்த்திக் வரவே இல்லை.
ஒரு நாள் பாரதிராஜா பரணி ஸ்டூடியோவில் பயங்கர கோபமாகி, "இன்று கார்த்திக் வந்து டப்பிங் பேசியே ஆக வேண்டும். நான் வீட்டுக்குப் போய்விட்டு வருகிறேன்" என்று சொல்லிவிட்டு கிளம்பி விட்டார்.
பாரதிராஜா கிளம்பிய சில மணித்துளிகளில் கார்த்திக் பரணி ஸ்டூடியோவுக்கு வந்துவிட்டார். காட்சிகளை எல்லாம் பார்த்துவிட்டு டப்பிங் பேசலாம் என்று ஆரம்பித்திருக்கிறார். இதை பாரதிராஜாவிடம் படக்குழு தெரிவிக்க, "எங்கேயும் கார்த்திக்கை விட்டு விடாதீர்கள். இன்னும் ஒரு மணி நேரத்தில் அங்கு இருப்பேன்" என்று பதிலளித்துவிட்டு ஒரு மணி நேரம் கழித்து வந்திருக்கிறார் பாரதிராஜா. அதற்குள் மொத்த படத்துக்கும் டப்பிங் பேசி முடித்துவிட்டு வெளியே காத்துக் கொண்டிருந்தார் கார்த்திக்.
டப்பிங் பேசிய காட்சிகள் அனைத்தையும் பாரதிராஜா பார்த்துவிட்டு கார்த்திக்கிடம், "இந்த திறமை தான் உன்னை இன்னும் திரையுலகில் நீடிக்க வைக்கிறது" என்று மனம்விட்டு பாராட்டினார்.
சீன் 2: 'கோகுலத்தில் சீதை' டப்பிங் விவகாரம்
'கோகுலத்தில் சீதை' படத்துக்கும் நீண்ட நாட்களாக டப்பிங் பேசாமல் இருந்து வந்தார் கார்த்திக். இயக்குநர் அகத்தியன் பயங்கர கோபத்தில் இருந்திருக்கிறார். ஒரு நாள் இரவு 9 மணிக்கு பரணி ஸ்டூடியோவிற்கு வந்தார் கார்த்திக். 'கோகுலத்தில் சீதை' டப்பிங் பேசலாமா? எனக் கேட்டு அப்படத்தை முழுக்க ஓடவிட்டு பார்த்திருக்கிறார். பின்னர் கார்த்திக் "ஒரு மணி நேரம் போன் பேசிவிட்டு வருகிறேன்" என்று கூற, அனைவருமே எங்கேயோ கிளம்ப போகிறார் என்று எண்ணி இருக்கிறார்கள். ஏனென்றால் 'கோகுலத்தில் சீதை' படத்தில் கார்த்திக் சம்பந்தப்பட்ட காட்சிகள் நிறைய இருப்பதால் இன்று டப்பிங் பேசாமல் ஏமாற்றிவிட்டு கிளம்பி விடுவார் என்று அங்கிருந்தவர்கள் நினைத்தார்கள்.
ஒரு மணி நேரம் கழித்து டப்பிங் அறைக்கு சென்று பேச ஆரம்பித்த கார்த்திக், காலை 8:30 மணி வரை இருந்து, முழுப்படத்தையும் பேசி முடித்துவிட்டார். கார்த்திக்கை கடுமையாக திட்டிவந்த படக்குழு, டப்பிங் பேசி முடித்தவுடன் ஒரே இரவில் முழுப்படமுமா?! என்று மகிழ்ந்து பாராட்டி இருக்கிறது
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?