ஐந்து அழகான பெண்கள் யார்?
நம்மூரில் ஒரு கருத்துக் கணிப்பில், நூறு ஆண்கள், பெண்களிடம் கேட்ட கேள்விகளில் இது ஒன்று. பெரும்பான்மையோர் தந்த பதில்:
நயன்தாரா, சமந்தா, ஹன்சிகா, காஜல் அகர்வால், ஸ்ருதி ஹாஸன்.
சினிமா என்றாலே அழகு, கவர்ச்சி: அழகு, கவர்ச்சி என்றாலே சினிமா என்னும் மானசீகத் தொடர்பு மக்களுக்கு இருக்கிறது. தமிழ் சினிமாவில் மட்டுமல்ல, பாலிவுட், ஹாலிவுட்டிலும் இருக்கிறது: இன்றல்ல, காலம் காலமாக இருக்கிறது. அழகான பெண்கள் என்று நினைக்கும்போது, மர்லின் மன்ரோ, எலிசபெத் டைலர், ஹேமமாலினி, ரேகா, மாதுரி திட்சித், டி.ஆர். ராஜகுமாரி, பத்மினி, கே.ஆர். விஜயா, தேவிகா மற்றும் இன்றைய பல நடிகைகள்தாம் நம் கண்களின் முன்னால் வருகிறார்கள். சினிமாவுக்கும் அழகுக்கும் இருக்கும் பந்தத்தை பிசினஸ் வெற்றிக்குப் பயன்படுத்தி வருபவர்கள் லக்ஸ் சோப்.
சலவைத்தூள்
1899. இங்கிலாந்தின் லீவர் கம்பெனி, ஸன்லைட் என்னும் துணி துவைக்கும் சோப்புத் தூள் தயாரித்தார்கள். கைக்கு மிருதுவான இந்தச் சலவைத் தூள் நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்த வருடம், தூளின் பெயரை லக்ஸ் என்று மாற்றினார்கள். இதற்கு இரண்டு காரணங்கள் - லக்ஸ் என்பது லத்தீன் மொழி வார்த்தை. இதற்கு, பிரகாசமான என்று அர்த்தம். Luxury என்னும் ஆங்கில வார்த்தைக்கு, ஆடம்பரமான, சுகானுபவம் தருகிற என்னும் அர்த்தங்கள் உண்டு.
லக்ஸ் என்னும் வார்த்தையை, லத்தீன் மொழிச் சொல்லாகவும், Luxury என்னும் ஆங்கிலச் சொல்லின் சுருக்கமாகவும் எடுத்துக்கொள்ளலாம். துணிகள் துவைக்கும்போது, லக்ஸ் கைகளுக்கு மிருதுவாக இருந்தது. நறுமணம் தந்தது. இதனால், ஏராளமான பெண்கள் சலவைக்கு மட்டுமல்லாது, கை, முகம், கூந்தல் கழுவவும் லக்ஸ் தூள் உபயோகித்தார்கள்.
குளியல் சோப்
1924 இல் லீவர் கம்பெனி, லக்ஸ் விற்பனையை அதிகரிப்பதற்காகப் போட்டி ஒன்று நடத்தினார்கள். அப்போது, சலவை சோப்பாகப் பயன்படுத்துவதைவிட அதிகமாக, அழகு தரும் சோப்பாக லக்ஸ் சோப்பைப் பெண்கள் உபயோகிப்பது லீவர் கம்பெனிக்குத் தெரிந்தது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள, 1925 இல் லக்ஸ் குளியல் சோப் அறிமுகம் செய்தார்கள். லக்ஸ் என்றால், சலவைத் தூள் என்னும் பிம்பம்தான் மக்கள் மனங்களில் இருந்தது. இந்த அபிப்பிராயத்தை மாற்றி, லக்ஸ் அழகு தரும் குளியல் சோப் என்னும் பிம்பத்தை உருவாக்கவேண்டிய கட்டாயம்.
அழகு என்றால், முதலில் நினைவுக்கு வருபவர்கள் சினிமா நடிகைகள். லீவர் கம்பெனி, எலிசபெத் டைலர், மர்லின் மன்ரோ, எஸ்தர் வில்லியம்ஸ் போன்ற பிரபல ஹாலிவுட் நட்சத்திரங்களை விளம்பரக் களத்தில் இறக்கியது. சினிமா நட்சத்திரங்களின் அழகு தரும் சோப் லக்ஸ் என்று இவர்கள் பிரகடனம் செய்தார்கள். லக்ஸ் சலவைத் தூள் என்னும் பிம்பம் மக்கள் மனங்களிலிருந்து மறைந்தது. சினிமா நட்சத்திரங்களின் அழகு சோப் என்னும் மனத் தொடர்பு பிறந்தது.
இந்தியாவில்…
1929 இல், லக்ஸ் சோப் இந்தியாவில் அறிமுகமானது. ஆரம்பத்தில், லக்ஸ், விளம்பரங்களில் ஹாலிவுட் நடிகை களைப் பயன்படுத்தியது. என்னதான் இவர்கள் கவர்ச்சியாக, பிரபலமாக இருந்தாலும், இந்திய மக்கள் இவர்களை அந்நியர்களாகத்தான் பார்த்தார்கள். எனவே, விளம்பரங்கள் அதிக வெற்றி தரவில்லை. எனவே, லீவர் கம்பெனி இந்திய நடிகைகளைப் பயன்படுத்த முடிவு செய்தார்கள்.
1940 கால கட்டம். அன்று, இந்தி சினிமாவில் முன்னணிக் கதாநாயகி நடிகை லீலா சிட்னிஸ். 1941 இல் லக்ஸ் விளம்பரத்தில் தோன்றினார். லக்ஸ் விளம்பரத்தில் வந்த முதல் இந்திய நடிகை இவர்தான். விரைவில், பிரபலமான நடிகை என்றால், லக்ஸ் விளம்பரத்தில் வந்திருக்கவேண்டும் என்னும் எண்ணம் தோன்றி விட்டது. லக்ஸ் பத்திரிகை மற்றும் திரைப்பட விளம்பரத்தில் வராத முன்னணி நடிகையே கிடையாது. ஹேமமாலினி, ரேகா, ஜெயப்ரதா, ஸ்ரீதேவி, ஐஸ்வர்யா ராய், கரீனா கபூர், பிரியங்கா சோப்ரா, கத்ரினா கைஃப், தீபிகா படுகோன், பத்மினி, சாவித்திரி, காஞ்சனா, செல்வி ஜெயலலிதா, ஷ்ரேயா, அசின்.....இன்னும் பலர்.
1960, 1970 களில், சினிமாவில் புரட்சி வந்தது. பாலச்சந்தர், பாரதிராஜா, மகேந்திரன், பாக்யராஜ் போன்ற இயக்குநர்கள், ஹீரோ, ஹீரோயின்களுக்கு அழகு அத்தியா வசியம் என்னும் இலக்கணத்தை உடைத்து எறிந்துவிட்டார்கள். ஹீரோயின் அழகாக இருக்கவேண்டியதில்லை, மேக்கப் தேவையில்லை என்னும் யதார்த்தம், ஹீரோயின்களைக் கனவுக் கன்னிகள் பீடத்திலிருந்து கீழே இறக்கத் தொடங்கியது. அக்கம் பக்கத்து வீட்டுப் பெண்கள்போல் லுக் கொண்டவர்கள் நடிகைகளாவது நடைமுறை நிஜமாகி வருகிறது.
இதற்கு ஏற்றபடி, லக்ஸ் சோப் தன் அணுகுமுறையை மாற்றி வருகிறார்கள். அழகு சோப் என்னும் அடிப்படைப் பொசிஷனிங் மாறவில்லை. ஆனால், விளம்பரங்களில் பல மாற்றங்கள். முதன் முதலாக, ஒரு நடிகர் விளம்பரத்தில் வந்தார். குளிக்கும் ஷாருக் கான், அவரைச் சுற்றி ஹேமமாலினி, கரீனா கபூர், ஸ்ரீதேவி, ஜூஹி சாவ்லா.
அண்மையில், இன்னும் சில மாற்றங்கள் வந்திருக்கின்றன. அபிஷேக் பச்சன் ஐஸ்வர்யா ராய் இருவரும் சேர்ந்து வந்தார்கள். அடுத்து, சித்தார்த் சமந்தா, தனுஷ் சோனம் கபூர்..
இந்த விளம்பரங்களைக் கவனமாகப் பாருங்கள். சினிமா நட்சத்திரங்களின் அழகு சோப் என்னும் பொசிஷனிங் மாறவில்லை. நடிகைகளோடு, நடிகர்களும் வருகிறார்கள். அவ்வளவுதான். ஆண்டாண்டு காலமாகத் தொடர் வெற்றி கண்டுவரும் பொசிஷனிங் பார்முலாவை ஏன் மாற்றவேண்டும்?
Keywords: பொசிஷனிங், விளம்பரம், வியாபார தந்திரம், லக்ஸ் சோப், சோப்பு விளம்பரம், அழகான பெண்கள், சலவைத் தூள்
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?