Saturday, 7 December 2013

College student killed lover friend statement in trichy

Img என்னை காதலிக்காததால் கல்லூரி மாணவி ரஞ்சிதாவை கொன்று ஆற்றில் புதைத்தேன்: காதலனின் நண்பன் வாக்கு மூலம் college student killed lover friend statement in trichy

மண்ணச்சநல்லூர், டிச. 7–

திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள ஆமூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் சப்பாணி. இவரது மகள் ரஞ்சிதா (20). இவர் மண்ணச்சநல்லூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.காம். 2–ம் ஆண்டு படித்து வந்தார்.

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 23–ந் தேதி கல்லூரிக்கு சென்ற ரஞ்சிதா அதன் பிறகு வீடு திரும்பவில்லை. இதையடுத்து ரஞ்சிதாவின் தந்தை சப்பாணி வாத்தலை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வந்தாலும் மாயமான ரஞ்சிதா குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதையடுத்து சப்பாணி ஐகோர்ட்டு மதுரை கிளையில் மகளை கண்டு பிடித்து தர வேண்டும் என்று ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.

இதை தொடர்ந்து போலீசார் ரஞ்சிதாவை தீவிரமாக தேடி வந்தனர்.இந்த நிலையில் கடந்த 29–ந் தேதி கொள்ளிடம் ஆற்றின் கரையில் புதைக்கப்பட்டிருந்த ஒரு பெண்ணின் எலும்புக்கூடு கண்டு பிடிக்கப்பட்டது. அதன் அருகே ரஞ்சிதா என்ற பெயருடன் கல்லூரி அடையாள அட்டை இருந்ததை கைப்பற்றினர். மேலும் மாயமான கல்லூரி மாணவி ரஞ்சிதா காணாமல் போன அன்று அணிந்திருந்த சுடிதார், செருப்பு, கைப்பை, 2 சிம் கார்டுகள் ஆகியவை இருந்ததையும் போலீசார் கண்டனர். இதையடுத்து ரஞ்சிதா கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டது உறுதிப்படுத்தப்பட்டது.

இதன் அடிப்படையில் இந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்ய மத்திய மண்டல ஐ.ஜி. ராமசுப்பிரமணி உத்தரவின் பேரில் திருச்சி சரக டி.ஐ.ஜி. அமல்ராஜ் ஆலோசனையின்படி புதுக்கோட்டை மாவட்ட எஸ்.பி. உமா (பொறுப்பு) மேற்பார்வையில் திருச்சி மாவட்ட மது விலக்கு அமலாக்கப்பிரிவு கூடுதல் எஸ்.பி. தங்கதுரை தலைமையில் ஜீயபுரம் டி.எஸ்.பி.கென்னடி, இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் ஆகியோர் கொண்ட தனிப்படையினர் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

விசாரணையில் அதே ஊரை சேர்ந்த பிரபாகரன் என்பவர் ரஞ்சிதாவை காதலித்து வந்தது தெரிய வந்தது. அவரிடம் நடத்திய விசாரணையில் அவரது நண்பரான பொன்னம்பலம் என்பவரின் மகன் வேன் டிரைவர் குணசேகரனும் ரஞ்சிதாவை ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார். அவரை போலீசார் தேடிய போது ரஞ்சிதா மாயமானதில் இருந்தே அவரும் மாயமாகி இருந்தார். இதனால் போலீசாருக்கு அவர் மீது சந்தேகம் வலுத்ததால் அவரை தேடினர். போலீசாரின் தீவிர தேடுதல் வேட்டைக்கு பின்னர் அவர் சென்னையில் தங்கி இருந்து ஓட்டலில் வேலை செய்து வந்தது தெரிய வந்ததையடுத்து அங்கு விரைந்து சென்ற போலீசார் அவரை சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர்.

விசாரணையில் குணசேகரன் போலீசாரிடம் கூறியதாவது–

ரஞ்சிதாவும், எனது நண்பரான பிரபாகரனும் காதலித்து வந்தனர். இதனால் நானும் பிரபாகரனுடன் அடிக்கடி ரஞ்சிதாவின் வீட்டிற்கு சென்று வந்தேன். அப்போது ரஞ்சிதா என்னிடம் பேசுவார். அவரது அழகில் நானும் மயங்கினேன். இதை தொடர்ந்து நானும் ரஞ்சிதாவை காதலிக்க தொடங்கினேன். ஆனால் ரஞ்சிதா என்னை காதலிக்க வில்லை. ஒரு தலையாக எனது காதல் இருந்தது. மேலும் ரஞ்சிதாவை அடைய விரும்பினேன்.

இதனால் பிரபாகரனுக்கு தெரியாமல் அவரது செல்போனில் இருந்து சிம் கார்டை திருடிய நான் சம்பவத்தன்று பிரபாகரன் பேசுவது போல ரஞ்சிதாவிடம் பேசி கொள்ளிடம் ஆற்றின் கரைக்கு வரவழைத்தேன். பிரபாகரன் அழைப்பதாக நினைத்து ரஞ்சிதாவும் நான் சொன்ன இடத்துக்கு வந்தார். அங்கு பிரபாகரன் இல்லாததால் அவனை பற்றி என்னிடம் கேட்டாள். அப்போது எனது காதலை அவளிடம் வெளிப்படுத்தினேன். இதில் ஆத்திரம் அடைந்த ரஞ்சிதா என்னை அவமானமாக திட்டினாள். இது என் மனதை பாதித்தது. இதை பிரபாகரனிடம் கூறினால் எனக்கு மேலும் அவமானம் ஏற்படும் என்பதாலும், ரஞ்சிதாவை எப்படியாவது அடைய வேண்டும் என்று அந்த நேரம் நினைத்தேன்.

இதனால் அவளுடன் உடலுறவு கொள்ளவும் முடிவு செய்தேன். இதைய அறிந்த ரஞ்சிதா அங்கிருந்து ஓட முயன்றார். நான் தப்பிக்க விடாமல் தடுத்ததோடு ரஞ்சிதாவை தாக்கினேன். இதில் மயக்கமடைந்து கீழே விழுந்த அவரை நான் பலாத்காரம் செய்தேன். உயிரோடு விட்டால் விஷயம் வெளியில் தெரிந்து விடும் என்பதால் துப்பட்டாவால் அவரது கழுத்தை இறுக்கி கொலை செய்தேன்.

மேலும் அவள் அணிந்திருந்த வெள்ளி கொலுசு, தங்க தோடுகளை கழற்றி எடுத்த பின் அதே இடத்தில் ஆற்று மணலை தோண்டி அவரது உடல்,கைப்பை, டிபன் பாக்ஸ், கல்லூரி அடையாள அட்டை ஆகியவற்றையும் புதைத்தேன் என்று கூறினார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசர் அவரை கைது செய்தனர்.

மேலும் குணசேகரன் வீட்டில் இருந்த ரஞ்சிதாவின் தோடு, கொடைக்கானல் நகை கடையில் அடகு வைத்திருந்த ரஞ்சிதாவின் கொலுசு ஆகியவற்றையும் போலீசார் கைப்பற்றினர். சுமார் 2 வருடங்களுக்கு முன்பு மாயமான கல்லூரி மாணவி அதே ஊரை சேர்ந்தவரால் கொன்று புதைக்கப்பட்டு தற்போது கொலையாளி கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

...

0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger