Img
Sengottai bribery woman tahsildar arrest
செங்கோட்டை, நவ.27-
நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள காலாங்கரையைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் மகன் செண்பகராஜ் (வயது 36). இவர் புளியரை சோதனை சாவடிக்கு அருகே சிமெண்டு செங்கல் (ஹாலோ பிளாக்) தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருகிறார்.
நிறுவனத்துக்கு தேவையான பாறைப்பொடியை, சோதனைச் சாவடியை தாண்டி கொண்டு செல்ல வருவாய்த்துறையினரின் அனுமதிச் சான்று வேண்டும் என்று போலீசார் கேட்கிறார்கள். இதற்கான அனுமதிச் சான்று கேட்டு செங்கோட்டை தாலுகா அலுவலகத்தில் செண்பகராஜ் விண்ணப்பித்து இருந்தார்.
செண்பகராஜுவின் மனுவை பரிசீலனை செய்த செங்கோட்டை தாசில்தார் ஸ்டெல்லா எஸ்தர் ராணி, அனுமதி சான்று வழங்க ரூ.7 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக தெரிகிறது. அதற்கு செண்பகராஜ் சம்மதம் தெரிவித்தார். முதல் கட்டமாக ரூ.3 ஆயிரம் கொடுத்தார். சான்றிதழ் தயாரான உடனே மீதி பணத்தை தருவதாகவும் கூறினார்.
செண்பகராஜுவுக்கு சான்றிதழ் தயாராகி விட்டதாக தாலுகா அலுவலகத்தில் இருந்து தகவல் வந்தது. இதையடுத்து ரூ.4 ஆயிரத்தை எடுத்துக்கொண்டு, தாசில்தாரை பார்க்க செண்பகராஜ் சென்றார். தாசில்தார் ஸ்டெல்லா எஸ்தர் ராணியை சந்தித்து ரூ.4 ஆயிரத்தை செண்பகராஜ் கொடுத்தார்.
அப்போது கூடுதலாக ரூ.3 ஆயிரம் வேண்டும் என்று தாசில்தார் கேட்டு இருக்கிறார். அதனை கொடுக்க இயலாத செண்பகராஜ், நெல்லை லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு ரகசியமாக தகவல் தெரிவித்தார்.
அதைத்தொடர்ந்து ரசாயன பவுடர் தடவிய ரூபாய் நோட்டுகளை செண்பகராஜுவிடம் கொடுத்து, தாசில்தாரிடம் கொடுக்கும்படி லஞ்ச ஒழிப்பு போலீசார் கூறினார்கள். அதன்படி அந்த ரூபாய் நோட்டுக்களை செண்பகராஜ், நேற்று மதியம் தாசில்தார் ஸ்டெல்லா எஸ்தர் ராணியை சந்தித்து கொடுத்தார்.
அப்போது மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு தங்கச்சாமி, இன்ஸ்பெக்டர் கந்தசாமி மற்றும் பெண் போலீசார், தாசில்தாரை கையும், களவுமாக பிடித்தனர். அவரிடம் மதியம் 2 மணி முதல் இரவு 7 மணி வரை தாலுகா அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
பின்னர் இரவு 7 மணி அளவில் தாசில்தார் ஸ்டெல்லா எஸ்தர் ராணியை போலீசார் கைது செய்து வேனில் அழைத்துச் சென்றனர். செங்கோட்டை தாலுகா அலுவலகத்தில் லஞ்சம் வாங்கிய தாசில்தார் கைது செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
...
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?