கற்பழிப்பு தொடர்பாக கூறிய கருத்துகளுக்காக சி.பி.ஐ. இயக்குனர் ரஞ்சித் சின்கா வருத்தம் தெரிவித்தார் Ranjith sinha regrets for his remarks
புதுடெல்லி, நவ. 13–
கற்பழிப்பு மற்றும் கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பாக கூறிய கருத்துகளுக்காக சி.பி.ஐ. இயக்குனர் ரஞ்சித் சின்கா வருத்தம் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் சி.பி.ஐ.யின் பொன் விழா மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் சி.பி.ஐ. இயக்குனர் ரஞ்சித் சின்கா சூதாட்டம், கற்பழிப்பு, லாட்டரி மற்றும் கேளிக்கைகள் பற்றி பேசுகையில், நீங்கள் பாலியல் பலாத்காரத்தை தடுத்து நிறுத்தாவிட்டால் அதனை நீங்கள் விரும்பி வரவேற்பதாக அர்த்தம் என்றார்.
தொடர்ந்து அவர் பேசியதாவது:–
சூதாட்டங்கள் பாலியல் பலாத்காரம் போன்றது. அதனை நீங்கள் தடுத்து நிறுத்தாவிட்டால் அதனை அனுபவித்து மகிழுங்கள். பல்வேறு மாநிலங்களில் லாட்டரிகள், விடுமுறை கால கேளிக்கை விடுதிகள், சூதாட்ட கிளப்புகள் செயல்படுகின்றன. இதன் மூலம் கறுப்பு பண நடமாட்டத்தை நாமாகவே அனுமதிக்கிறோம்.
இவற்றை தடுத்து நிறுத்தாவிட்டால் அவை நாடு முழுவதும் பரவி விடும்.
விளையாட்டுப் போட்டிகளில் மேட்ச் பிக்சிங் மற்றும் சூதாட்டம் தலை விரித்தாடுகிறது. இதில் முறைகேடுகளை தடுக்க சூதாட்டத்தை சட்டபூர்வமாக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
அவரது பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பாலியல் குற்றம் பற்றிய அவரது கருத்துக்கு மகளிர் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. தேசிய மகளிர் அமைப்பு சார்பில் விளக்கம் கேட்டு ரஞ்சித் சின்காவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தலைவர் பிருந்தா காரத் கூறுகையில், ரஞ்சித் சின்கா பொறுப்பற்ற முறையில் பேசியிருக்கிறார். எனவே அவர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்றார்.
இந்நிலையில், கிரிக்கெட் சூதாட்டம் மற்றும் கற்பழிப்பு தொடர்பாக கூறிய கருத்துகளுக்காக ரஞ்சித் சின்கா வருத்தம் தெரிவித்துள்ளார்.
பெண்கள் மீது நான் அதிகமான மதிப்பும் மரியாதையும் கொண்டுள்ளேன். நான் வெளியிட்ட கருத்துகள் எவ்வித உள்நோக்கமும் அற்றவை.
இதனால் யாருடைய மனமாவது புண்பட்டு இருந்தால் அதற்காக வருத்தம் தெரிவித்து கொள்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.
...
shared via
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?