Sunday 18 August 2013

நடிகர் பேராசிரியர் பெரியார்தாசன் மரணம் - Actor and professor periyar dasan death eye body donation

பாரதிராஜாவின் கருத்தம்மா , காதலர் தினம் உள்பட பல்வேறு தமிழ் திரைப் படங்களில் நடித்தவர் பெரியார்தாசன். இவர் சென்னை பச்சையப்பா கல்லூரியில் 38 ஆண்டுகள் பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். 15-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த இவர் பட்டிமன்றம், கருத்தரங்குகளில் பங்கேற்று வந்தார்.

ம.தி.மு.க. நிர்வாகியான இவர் அந்த கட்சியின் உயர் நிலைக்குழு உறுப்பினராக இருந்தார். பெரியார்தாசன் வீடு திருவேற்காடு மகாலட்சுமி நகர் 6-வது தெருவில் உள்ளது. கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். கல்லீரல் கோளாறு காரணமாக குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.


அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று நள்ளிரவு 1.25 மணிக்கு மரணம் அடைந்தார். அவருக்கு வயது 63. அவரது உடல் திருவேற்காட்டில் உள்ள அவரது வீட்டில் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. பெரியார்தாசனுக்கு வசந்தா (62) என்ற மனைவியும், வளவன் (35), சுரதா (35) என்ற 2 மகன்களும் உள்ளனர்.

பெரியார்தாசன் உயிருடன் இருக்கும் போதே தனது கண்களை தானம் செய்து இருந்தார். அவர் மரணம் அடைந்த தகவல் கிடைத்ததும் சங்கர நேத்ராலயா மருத்துவ குழுவினர் வந்து அவரது கண்களை தானமாக பெற்றுக் கொண்டனர். அதே போல் பெரியார்தாசன் விருப்பப்படி அவரது உடலும் அரசு மருத்துவ கல்லூரிக்கு தானமாக வழங்கப்பட இருப்பதாக அவரது மூத்த மகன் வளவன் தெரிவித்தார்.

1 comments:

  1. பேரன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்ம...

    நாடறிந்த அற்புதமான சொல்லாற்றல் மிக்கவரும், மார்க்கப் பணிகளில் மிகப் பெரும் சேவையாற்றிவரும், பிரபல மனோதத்துவ நிபுணருமான பேராசிரியர் டாக்டர் அப்துல்லாஹ் (பெரியார்தாசன்) அவர்கள் இன்று திங்கட்கிழமை (19.08.2013) அதிகாலை 1:30 மணியளவில் உடல் நலக் குறைவு காரணமாக தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகாவை அடைந்தார்கள்.

    தன்னுடைய நீண்டகால நாத்திக+புத்தமதப் பயணத்தின் இறுதியில் தன்னையும் இவ்வுலகையும் படைத்தவனைக் கண்டுகொண்ட பேராசிரியர் பெரியார்தாசன் அவர்கள், "கருத்தம்மா" என்ற பெண்சிசுக் கொலையை மையப்படுத்தி எடுத்திருந்த திரைப்படத்தின் மூலமும் தமிழக மக்களிடையே பிரபலமானவராவார். உளவியல் துறையில் முனைவர் பட்டம் பெற்ற அவர், கடவுள் மறுப்புக்கொள்கையில் உறுதியாகயிருந்து தனது பெயரையே நாத்திகச் சிந்தனையாளரான பெரியாரின் பெயருடன் அடிமை என்ற பொருளைத் தரும் தாசன் என்ற சொல்லை இணைத்துக் கொண்டு, 'பெரியார்தாசன்' ஆக வாழ்ந்தவர்.

    சமூக சிந்தனைக் கருத்துகளைப் பரப்புவதில் முன்னணியில் நின்ற அவர், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில் அமைந்துள்ள கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் விசிட்டிங் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இஸ்லாத்தைப் பற்றி, கடந்த 10 ஆண்டுகளாக ஆய்வு செய்த பெரியார்தாசன், கடந்த 2010ம் ஆண்டு மார்ச் 11ந் தேதி (வியாழக்கிழமை) அன்று சவூதி அரேபியாவின் தலைநகரான ரியாதில் அமைந்துள்ள இஸ்லாமிய அழைப்பு மையத்தில் இஸ்லாத்தைத் தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டு, தன்பெயரை "படைத்தவனுக்கு அடிமை" என்ற பொருள்படும் "அப்துல்லாஹ்" என்று மாற்றிக் கொண்டார்.

    இஸ்லாத்தை ஏற்ற பிறகு தமிழகம் மட்டுமல்லாது உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் இஸ்லாமியர்கள் தங்கள் அமைப்பின் சார்பாக சிறப்பு விருந்தினராக அழைப்பு விடுத்ததை ஏற்றுக் கொண்டு இஸ்லாமிய பிரச்சாரப் பணிகளை மேற்கொண்டார்.

    இந்நிலையில் டாக்டர் அப்துல்லாஹ் (பெரியார் தாசன்) அவர்கள் உடல் நலிவுற்று சென்னை சோளிங்கநல்லூர் குளோபல் மருத்துவமனையில் கடந்த சில வாரங்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று மரணமடைந்தார். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்...

    30.12.2011 வெள்ளிக்கிழமை அன்று ஜும்ஆ தொழுகைக்குப் பிறகு K-Tic பள்ளிவாசலில் குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) ஏற்பாடு செய்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சியில் பேராசிரியர் அவர்கள் கலந்து கொண்டு "முஸ்லிம்களிடம் இவ்வுலகம் எதிர்பார்ப்பது என்ன?" என்ற தலைப்பில் சிந்திக்க வைக்கும் அற்புதமான பேருரைரையாற்றிய நிகழ்வுகள் இன்றும் நினைவுகளில் நிழலாடுகின்றன.

    எல்லாம் வல்ல அல்லாஹ் பேராசிரியர் அவர்களின் நல்லறங்களை ஏற்றுக் கொண்டு, மார்க்கச் சேவைகளை அங்கீகரித்து, குற்றங்களை மன்னித்து தன்னுடைய 'ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ்' எனும் சுவனபதியில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அன்னாரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர், மாணவர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும்'ஸப்ரன் ஜமீலா' எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) பிரார்த்தனை செய்கிறது. ஆமீன்!

    உலகெங்கும் வாழும் சகோதரர்கள் அனைவரும் அன்னாரின் ஹக்கில் துஆ செய்யும்படி அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.

    நன்றி! வஸ்ஸலாம்.

    அன்புடன்....

    பரங்கிப்பேட்டை மவ்லவீ அஃப்ழலுல் உலமா
    அ.பா. கலீல் அஹ்மத் பாகவீ எம்.ஏ.,
    பொதுச் செயலாளர்
    மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள்.
    குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic),
    துரித சேவை அலைபேசி எண்: (+965) 97 87 24 82
    மின்னஞ்சல்கள்: q8_tic@yahoo.com / ktic.kuwait@gmail.com / ktic.kuwait@yahoo.com
    இணையதளம்: www.k-tic.com
    யாஹூ குழுமம்: http://groups.yahoo.com/group/K-Tic-group
    கூகுள் குழுமம்: https://groups.google.com/q8tic

    ReplyDelete

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger