சிட்னியில் நடந்த முத்தரப்பு ஒருநாள் தொடரின், முக்கிய லீக் போட்டியில் இந்திய அணி, ஆஸ்திரேலியாவிடம் 87 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. ஆஸ்திரேலியா 19 புள்ளிகளுடன் பைனலுக்கு தகுதி பெற்றது.
இப்போட்டியில் முதலில் "பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 252 ரன்கள் எடுத்தது. வார்னர்(68), டேவிட் ஹசி(54), வேட்(56) அரைசதம் கடந்து அசத்தினர்.
எட்டக் கூடிய இலக்கை துரத்திய இந்திய அணிக்கு சேவக்(5) சோபிக்கவில்லை. 100வது சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட சச்சின்(14) சர்ச்சைக்குரிய முறையில் ரன் அவுட்டானார்.
காம்பிர்(23), கோஹ்லி(21), தோனி(14), ரவிந்திர ஜடேஜா(8), அஷ்வின்(26), இர்பான் பதான்(22) தாக்குப்பிடிக்கவில்லை. இந்திய அணி 39.3 ஓவரில் 165 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி, தோல்வி அடைந்தது.
பைனல் வாய்ப்பு எப்படி?:
இந்திய அணி பைனலுக்கு முன்னேறுவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தற்போது இலங்கை(15 புள்ளி), இந்திய(10 புள்ளி)அணிகள் முறையே இரண்டாவது, மூன்றாவது இடத்தில் உள்ளன.
இந்திய அணி அடுத்த போட்டியில்(பிப்., 28) இலங்கைக்கு எதிராக மிகப் பெரும் வெற்றியை "போனஸ் புள்ளியுடன் பெற வேண்டும்.
"போனசாக ஒரு புள்ளியை பெற தவறினால், பைனல் வாய்ப்பு கிடைக்காது. அதே நேரம் இலங்கை அணி, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான லீக் போட்டியில்(மார்ச் 2) தோல்வி அடைய வேண்டும்.
ரன்ரேட்டிலும் முன்னிலை பெறும்பட்சத்தில் இந்தியாவுக்கு பைனல் வாய்ப்பு கிடைக்கலாம்.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?