ஆம், நான் ஒரு புரோக்கர்தான்! திருவாளர் சோ ஒப்புதல்
ஆனந்த விகடன் இதழில் (1.-2.-2012) திருவாளர் சோ ராமசாமியின் பேட்டி வெளிவந்துள்ளது. அதில் தான் ஒரு தரகு வேலையாள்தான் என்பதை ஒப்புக் கொண்டுள்ளார்.
கேள்வி: சோ ஓர் அரசியல் விமர்சகர் என்று இருந்த நிலை மாறி, அவர் ஓர் அரசியல் தரகர் என்று உங்களைப் பற்றி பேசப்படுவது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
பதில்: எதை வைத்து இப்படிப் பேசுகிறார்கள் என்று தெரியவில்லை. என்றாலும், சில சமயங்களில் அரசியல் கூட் டணிகள் அமைய நான் பணியாற்றி இருக்கிறேன் என்ற அடிப்படையில் பேசுகிறார்கள் என்று எடுத்துக் கொள்கிறேன். ஆனால், இந்த வேலை நான் இப்போது தொடங்கியது அல்ல. காமராஜர் காலத்திலேயே செய்தது.
மத்தியில் ஜனதா, ஆந்திரத்தில் என்.டி.ஆர், கர்நாடகத்தில் ஹெக்டே, தமிழகத்தில் எம்.ஜி.ஆர். கருணாநிதி, மூப்பனார், ஜெயலலிதா என்று எத்தனையோ பேருக்காக கூட்டணியை உருவாக்க உழைத்திருக்கிறேன். இதற்கு என்ன அடிப்படை என்றால், ஒரு வாக்காளனாக நான் விரும்பும் அடிப்படை என்றால், ஒரு வாக்காளனாக நான் விரும்பும் ஆட்சி வர நான் மேற் கொள்ளும் நடவடிக்கை என்று சொல்லலாம். உங்கள் நண்பர் விரும்பும் ஓர் அரசியல் கட்சிக்கு ஆதரவாக அவர் உங்களிடம் வாக்கு கேட்டால், அவரைத் தரகர் என்று நீங்கள் கூறுவீர்களா... எனக்குத் தெரியாது. ஆனால், தரகில் நல்ல காரியம் நடந்தால், நான் செய்வது தரகு வேலையாகவே இருக்கட்டும். அதுபற்றி எனக்குக் கவலை இல்லை. ஆனால், துரோக வேலை செய்யாதவரை நீங்கள் என்னைக் குறைகூற முடியாது! என்று கூறியுள்ளார்.
பல தலைவர்களின் பெயர்களை எடுத்துக் காட்டியதாலேயே அவர்கள் மத்தியில் மதிக்கத் தக்க வகையில் பெரிய மனுஷராக இருந்தார் என்று கருதிடத் தேவையில்லை. சோவே அடிக்கடி தன்னைப் பற்றிச் சொல்லிக் கொள்வதுண்டு.
என் ஆலோசனையைக் கேட்டு யாரும் உருப்பட்டதில்லை. ஆலோசனை கேட்டவர்கள் என்ன ஆனார்கள் என்பது உங்களுக்குத் தெரியும். The name is Rajini Gandh என்ற ஆங்கில நூல் வெளியீட்டு விழாவில்தான் இப்படி ஒரு தன்னிலை விளக்கம் கொடுத்தார்.
ரஜினியிடம் தூண்டில் போட்டுப் பார்த்தார். அவரிடம் மசியவில்லை. சீச்சீ இந்தப் பழம் புளிக்கும்! என்று ஒதுங்கிக் கொண்டார்.
இந்த நிலையில் உள்ள ஒருவர் ஏதோ கூட்டணிகளை உருவாக்கியது போல உதார் விடுகிறார்.
ஆனால் (Broker) தரகு வேலை பார்த்தார் என்பது மட்டும் அசைக்க முடியாத உண்மை.
எம்.ஜி.ஆர். அவர்கள் முதலமைச் சராக இருந்த போது, அவருக்காக தரகை விட மோசமான ஒரு வேலையைப் பார்த்தார்.
கட்சியின் பொருளாளராக இருந்த சவுந்தர பாண்டியன் பற்றி உளவு வேலை பார்த்ததை ஒப்புக் கொண்ட வர்தானே இந்த சோ.
அவ்வளவு பெரிய மனிதர் சொல் லும்போது நான் அந்த வேலையைச் செய்யும்படி நேர்ந்துவிட்டது என்று சொல்லவில்லையா?
அப்படியாகப்பட்ட மனுஷன் கையைப் பிடித்து இழுத்த போது நான் என்ன செய்வது என்றாராம் ஒரு பெண்மணி. அந்தக் கதையாக அல்லவா இருக்கிறது!
மறைந்த எழுத்தாளர் திரு.சின்னக் குத்தூசி அவர்கள் இதனைப் பலமுறை அம்பலப்படுத்தியுள்ளார்.
சங்கராச்சாரியாருக்கு கையாளாக சோ செயல் பட்ட கதையும் உண்டு.
சின்னக் குத்தூசி, ஞாநி ஆகியோர் சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதியின் வற்புறுத்தலின் அடிப்படையில் சந்திக்கச் சென்றபோது, நான்தான் சோவை வீரமணியிடம் அனுப்பினேன். நான் எழுதிக் கொடுத்த கேள்விகளைத்தான் சோ வீரமணியிடம் கேட்டார் என்று சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் கூறிய உண்மையை எதிரொலி ஏட்டில் (3.-4.-1983) சின்னக் குத்தூசி பட்டவர்த்தனமாகப் போட்டு உடைத்துவிட்டார்.
உப்புக் கண்டம் பறிகொடுத்த பழைய பார்ப்பனத்தி கதையாகிவிட்டது திருவாளர் சோ அய்யர்வாளுக்கு. இன்னொருவருக்குக் கையாளாகச் செயல்பட்டது அம்பலமாகிவிட்டதே.
அப்பொழுது கூட அறிவு நாணயத்துடன் ஒப்புக் கொள்ளாமல், மடத்தையும் விட்டுக் கொடுக்க முடியாமல் தன்னையும் காப்பாற்றிக் கொள்ள ஏதேதோ எழுதிப் பார்த்தார். இது தொடர்பாக ஞாநி துக்ளக்குக்கு எழுதிய கடிதத்தை சோ துக்ளக்கில் வெளியிடவில்லையே! அதே நேரத்தில் பார்ப்பன மடமான சங்கர மடத்தைக் காப்பாற்றும் வகையில் என்ன எழுதினார் தெரியுமா?
I have respect for that institution என்று எழுதினாரே! இதற்குப் பெயர்தானே பார்ப்பன அபிமானம் என்பது.
ஆனந்த விகடன் பேட்டி தொடருகிறது.
கேள்வி: சோவுக்கு கிங்மேக்கர் ஆகும் ஆசை வந்துவிட்டதா?
சோ: நான் கிங் மேக்கர் என்றால் கிங் யார்? நீங்கள் மோடியையும், ஜெய லலிதாவையும் மனதில் வைத்துக் கொண்டு கேட்கிறீர்கள். அப்படிப் பார்த்தால் ஒருவர் கிங். இன்னொருவர் க்வீன் அல்லவா? (சிரிக்கிறார்!) (இப்படி சொல்வது சரிதானா?)
நான் ஒரு வாக்காளன். அந்த அடிப்படையில் ஒருமுன் மொழிவைக் கூறியிருக்கிறேன். இந்த நாட்டின் பிரதமராக மோடிக்கு எல்லா தகுதிகளும் இருக்கின்றன. ஒரு வேளை பா.ஜ.க.வுக்கு மோடியைப் பிரதமராக் குவதில் முட்டுக் கட்டை ஏற்பட்டால், ஜெயலலிதா பிரதமராக அவர்கள் உதவ வேண்டும். அவ்வளவுதான் என்கிறார் சோ. இதன் பொருள் என்ன? மோடி பி.ஜே.பி.யைச் சேர்ந்தவர். ஜெயலலிதாவோ அண்ணா பெயரையும், திராவிட என்ற இனச் சுட்டையும் கட்சியில் வைத்துள்ளவர்.
சித்தாந்தப்படி பார்த்தால் இருவரும் எதிர்துருவங்களாகத்தான் இருக்க வேண்டும்.
அப்படி கணிக்கக் கூடிய நிலையில் அ.இ.அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளர் அறவே இல்லை என்பது சோவுக்கு நன்றாகத் தெரியும். இரு துருவங்களாக இல்லாவிட்டாலும் பரவாயில்லை. கட்சிகளின் பெயர்களில் தான் வேறுபாடாக இருக்கிறதே தவிர ஜெயலலிதாவைப் பொருத்தவரை, அசல் பத்தரை மாற்று இந்துத்துவாவாதி.
திராவிட இயக்கத்துக்குச் சம்பந்தமே இல்லாதவர் அந்த ஒரு கட்சிக்குப் பொதுச் செயலாளராக இருக்கிறார் என்று வெளிப்படையாக சோ எழுதியும், பேசியும் வந்திருந்தும், அது குறித்து ஒரே ஒரு வார்த்தை பேச வில்லை, கோபம் கொப்பளிக்கவில்லை செல்வி ஜெயலலிதாவுக்கு என்பதிலிருந்தே சோவின் கணிப்பு மிகத் துல்லியமானது என்பது தூக்கலாகவே தெரியவில்லையா?
திராவிடப் பாரம்பரியம் என்றால் என்ன பொருள் என்பது அந்தப் பாரம்பரியத்தினர் வெளிப்படையாக நம்பாத தெய்வத்திற்குத்தான் வெளிச்சம். அப்படி ஒரு விளக்க முடியாத பாரம்பரியமுள்ள இரண்டு அரசியல் கட்சிகளில் ஒன்றுக்குத் தலைமையேற்ற ஜெயலலிதா யார்? அந்தப் பொருளற்ற பாரம்பரியத்துக்குச் சற்றும் சம்பந்த மில்லாதவர். அந்தப் பாரம்பரியத் தினால் எந்த ஒரு சமூகம் மிகக் கடுமை யாகவும், கேவலமாகவும் எதிர்க்கப்பட்டதோ அந்தச் சமூகத்தைச் சேர்ந்தவர்!
சரி, இப்படிப்பட்ட பாரம்பரியத்திற்குத் தலைமை ஏற்பதற்காக அவர் (ஜெயலலிதா) தனது நம்பிக்கைகளை மாற்றிக் கொண்டாரா என்று கேட்டால் கிடையாது. கோவில், அர்ச்சனை, பிரசாதம் ஒரு புறம்; தீவிரவாதம் தமிழைப் பற்றியதாக இருந்தாலும் அதை நசுக்கவே முயற்சிப் பேன் என்ற முனைப்பு ஒரு புறம்; தொழி லாளிக்குக் கடமைகளும், பொறுப்புகளும் உண்டு என்பதை நிலை நாட்டத் தயங்கமாட்டேன் என்ற தீர்மானம் மற்றோர் புறம்; மைனாரிட்டி மக்களின் உரிமைகள் காக்கப்படவேண்டும் என்றாலும், அதற்காக மெஜாரிட்டி மக்களின் உரிமைகள் மறுக்கப் படவேண்டும் என்பதை ஏற்கமுடியாது என்ற நிலைப்பாடு இன்னொரு புறம்; இப்படி எந்தப் பக்கம் நோக்கினாலும் சரி, பொருளற்ற திராவிடப் பாரம்பரியத்தின் கோஷங் களை ஜெயலலிதா ஏற்கவில்லை. தன் னுடைய நம்பிக்கைகளை அந்த பாரம்பரியம் ஏற்கும்படி செய்தார். இது சமீப கால அரசின் அற்புதம்! (துக்ளக் - 21-9-2005)
இந்த விமர்சனம் ஜெயலலிதாவிற்கு பெருமை சேர்ப்பதாக ஆகாது. திராவிடப் பாரம்பரியத்துக்குச் சம்பந்தம் இல்லாதவர் என்று ஜெயலலிதாவை சோ சொல்லும்போது, அந்த அம்மையாருக்குச் சீற்றம் வர வில்லையே. ஒரு சிறிய விமர்சனத்தைக் கூடத் தாங்கிக் கொள்ள முடியாதவர் - நெருப்பாகத் தகிப்பவர் -_ இவ்வளவுக் கேவலமாக கொள்கையற்றவர் என்று சோ எழுதும்போது கண்டு கொள்ளாதது ஏன்? பொங்கி எழாதது ஏன்?
சோ மிகச் சரியாகக் கணித்துத்தான் பி.ஜே.பி.யைச் சேர்ந்த ஒருவர் பிரதமர் ஆவதையும், ஜெயலலிதா பிரதமர் ஆவதையும் ஒன்றாகவே கருதுகிறார் - _ எடுத்துக் கொள்கிறார் என்பதைக் கவனிக்கத் தவறக்கூடாது.
அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளர் செல்வி ஜெயலலிதா அவர்கள் தெரிவிக்கும் கருத்துகளை அறிந்தோர்க்கு சோ சொல்லுவது நூற்றுக்கு நூறு நூதனமான உண்மை என்பது பளிச்சென்றே புரியும்.
இதோ செல்வி ஜெயலலிதா பேசுகிறார்:
கேள்வி: அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதை ஆதரிக்கிறீர்களா?
முதல் அமைச்சர் ஜெயலலிதா: ஆமாம், ஆதரிக்கிறேன். இந்தியாவில் ஒரு ராமர் கோவில் கட்ட முடிய வில்லை என்றால் வேறு எங்கு கட்ட முடியும்?
(தமிழக அரசு செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் வெளியீடு செ.வ.என். 412 நாள்: 29-.7.-2003)
கேள்வி: Common Civil Code என்பதை ஆதரிக்கிறீர்களா?
முதல் அமைச்சர் ஜெயலலிதா: ஆமாம் .Common Civil Code நாட்டுக்கு மிகவும் தேவையான ஒன்று.
கேள்வி: இது குறித்து நாடாளுமன் றத்தில் மசோதா கொண்டு வரப் பட்டால் ஆதரிப்பீர்களா?
முதல் அமைச்சர் ஜெயலலிதா: நிச்சயமாக ஆதரிப்பேன். கழகம் ஆதரிக்கும்.
கேள்வி: Common Civil Code கொண்டு வரப்பட்டால் சிறுபான்மையினரின் நலம் பாதிக்கப்படாதா?
முதல் அமைச்சர் ஜெயலலிதா: நிச்சயம் பாதிக்கப் படாது. Common Civil Code அமல்படுத்தப்பட்டால் தான் நாட்டின் அனைத்துக் குடி மக்களுக்கும் உண்மையான சமத்துவம் (Equality) கிட்டும் (அதே ஆதாரம்).
ராமன்கோவில், காமன் சிவில் கோட் என்பவை பி.ஜே.பி. சங் பரிவார் வட்டாரத்தின் கொள்கை சார்ந்த திட்டமாகும். இந்த அடிப்படை யானவற்றை செல்வி ஜெயலலிதா ஏற்கும்போது, மோடி பிரதமராக இருந்தால் என்ன? ஜெயலலிதா பிரதமராக இருந்தால் என்ன? இரண்டும் ஒன்றுதானே!
ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி. களுக்கு அதிகாரப் பூர்வமற்ற பேச்சாளராக (Spokesman) இருக்கக்கூடிய சோ ராமசாமி வலிக்காமல், நோகாமல் பார்ப்பனியத்திற்கே உரித்தான முறையில் இலாவகமாகக் காயை நகர்த்துவது நமக்குத் தெரியாத ஒன்றா?
கேள்வி: இந்தியா போன்ற பன்மைக் கலாசாரம் மிக்க ஒரு நாட்டின் பிரதமர் நாற்காலியில் அமர மோடி தகுதி ஆனவர் என நினைக்கிறீர்களா?
சோவின் பதில்: குஜராத்தும் பன்மைக் கலாச்சாரம் மிக்க ஒரு மாநிலம்தான். அங்கும் பல்வேறு மதத்தவர்கள், பல்வேறு சாதியினர் இருக்கத்தான் செய்கிறார்கள். இன்றைக்கு இந்தியாவுக்கே ஒரு முன்னோடி மாநிலமாக குஜராத்தை மோடி மாற்றி இருக்கிறார். மோடியின் சாதனைகள் தான் அவரை முன்னிறுத்துகின்றன.
அடுத்த கேள்வி: மோடி பிரதமரானால் குஜராத்தில் நடந்த வெறி யாட்டங்கள் இந்தியா முழுக்க நடக் காது என்பதற்கு என்ன உத்தரவாதம் இருக்கிறது?
சோவின் பதில்: மதக் கலவரங்கள் என்பது குஜராத்தில் மட்டும்தான் என்பது போல பேசுவது போலித்தனம். இந்தியப் பிரிவினையில் தொடர்ந்து எடுத்துக் கொண்டால், எல்லா மாநிலங்களிலும், எல்லாக் கால கட்டங்களிலும் மதக் கலவரங்கள் அவ்வப்போது நடந்து கொண்டுதான் இருக்கின்றன. டெல்லியில் சீக்கியர்களுக்கு எதிராக நடைபெற்ற கலவரங்களைக் காட்டிலும் மோசமான கலவரங்கள் அதற்கு முன்போ, பின்போ நடந்தது இல்லை. கோத்ரா ரயில் எரிப்பை மறந்துவிட்டு, குஜராத் கலவரங்களைப் பற்றிப் பேசுவது அர்த்தம் அற்றது. அந்தக் கலவரங்கள் கண்டிக்கத் தக்கவை. ஆனால் அதற்குக் காரணம் மோடி அல்ல; கலவரங்களை அடக்கத் துளியும் தாமதிக்காமல் ராணுவத்தை அழைத்தவர் அவர் என்பதை நீங்கள் மறந்து விடக்கூடாது என்று இமயமலையையே ஒரு கைப்பிடி சோற்றுக்குள் மறைக்கும் பார்ப்பனத் தனத்தைக் கவனிக்கவும்.
டெஹல்கா வெளியிட்ட டேப்பின் காட்சிகளில் வருகிறவர்கள் எல்லாம் நான் கற்பழித்தேன்; நான் இத்தனை பேரைக் கொலை செய்தேன் என் றார்கள். இதையெல்லாம் எவனாவது கேமிரா முன் சொல்வானா? (துக்ளக் 27-.2-.2008, பக்கம் 25)
சாட்சியங்கள் வீடியோவில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மற்ற மற்ற மாநிலங்களில் நடந்த கலவரங்களுக்கும் குஜராத் கலவரத்துக்கும் எத்தனையோ மடங்கு வேறு பாடு உண்டு.
இரண்டு நாள் அவகாசம் தருகி றேன். அதற்குள் சிறுபான்மை யினர்களின் கதைகளை முடித்து விடுங்கள் என்று எந்த முதல் அமைச்சர் கட்டளையிட்டார்?
டெஹல்கா - ஊடகம் சாட்சியங் களைப் பதிவு செய்துள்ளது. சாட்சியம் அளித்தவர்கள் ஆளும் பி.ஜே.பி. பொறுப்பாளர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்களாயிற்றே.
எவ்வளவு முரட்டுத் தனமாக சோ அந்த உண்மைகளின் மீது கறுப்பு அடிக்கிறார்?
தெனாவட்டாக அதனைக் குயுக்தி யாக எப்படி மறைக்கப் பார்க்கிறார்? டெஹல்காவின் வீடியோ காட்சிகள் பொய்யானவை என்று மறுக்கப்பட்டுள் ளனவா? நிரூபிக்கப்பட்டுள்ளனவா!
பேச நா இரண்டுடையாய் போற்றி என்று ஆரிய மாயையில் பார்ப் பனர்கள்பற்றி அறிஞர் அண்ணா குறிப்பிட்டது இந்த இடத்தில் நெற்றிப் பொட்டைத் தட்டுகிறது.
உச்சநீதிமன்றமே குஜராத் முதல் அமைச்சர் நரேந்திர மோடியை நீரோ மன்னனுக்கு ஒப்பிடவில்லையா?
தனக்கு வசதிப்பட்டால் ஆகா! நீதிமன்றம் இப்படிக் கூறிவிட்டது என்று துள்ளிக் குதிப்பார் சோ.
போலி என்கவுண்டர் வழக்கில் குஜராத் காவல் துறையை நம்பமுடியாது என்று குஜராத் மாநில உயர் நீதி மன்றம் ஓங்கி அடித்துக் கூறிவிட்டதே!
லோக் அயுக்தாவுக்கு ஆளுநர் நீதிபதியை நியமித்த பிரச்சினையில்கூட நீதிமன்றம் சென்று நெடு குட்டு வாங்கி, நிலை தடுமாறி விழுந்திருக்கிறாரே - திருவாளர் சோ அய்யர் போற்றும் திருவாளர் மோடி.
மோடியின் பகுத்தறிவற்ற தன் முனைப்பு நடவடிக்கை என்று உயர்நீதி மன்றம் கூறியது சாதாரணமானது தானா?
இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்களின் குருதியைக் குடித்த மோடி என்னும் ஓநாய் பிரதமர் நாற்காலியில் அமர வேண்டும் என்பது -எத்தகைய நாசகார புத்தி?
---------------அடுத்த வாரம் சந்திப்போம் ----- கலி.பூங்குன்றன் அவர்கள் 4-2-2012 "விடுதலை" ஞாயிறுமலரில் எழுதிய கட்டுரை
http://mobilesexpicture.blogspot.com
http://mobilesexpicture.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?