Sunday 18 December 2011

ஒஸ்தி விமர்சனம்

 


ரஜினியின் சிவாஜி படத்துக்கு விகடன் 41 மார்க் தந்தது; ஒஸ்திக்கு 40 மார்க். ஒரு மார்க் தானே கம்மி என்று நேற்று இந்தப் படத்தைப் பார்த்தேன்.

படம் ஆரம்பித்து கொஞ்ச நேரத்திலேயே "சிவாஜி தி பாஸ் ஒஸ்தி தி மாஸ்" என்ற வசனம் வர, படம் சூப்பரா இருக்கும் போல என்று பார்த்தால்....

'நான் கண்ணாடி மாதிரிலே' என்று அடிக்கடி வசனம் பேசும் சிம்பு போலீஸ் டிரஸ் போட்டுக்கொண்டு கண்ணாடியில் ஏன் அதை ஒரு முறை கூடப் பார்க்கவில்லை என்ற எண்ணம்தான் முதலில் நமக்கு வந்தது. ஸ்கூல் பசங்க ஃபேன்ஸி டிரஸ் போட்டுக்கொண்டு வந்து "மை நேம் இஸ்... ஐயம் ஏ போலீஸ்' என்று சொல்லும் குழந்தை போல படம் முழுக்க வருகிறார்.

இயக்குநர் தரணி சிம்புவிடம் இது 3D படம் என்று சொல்லியிருப்பாரோ என்னவோ படம் முழுக்க கருப்பு கண்ணாடி போட்டுக்கொண்டே வருகிறார். போலீஸ் டிரஸுடன் சரி மஃப்டியில் வரும் போதும் கூட ஏன் பாட்டு டான்ஸ் ஆடும் போதும் கூலிங் கிளாஸ் போட்டுக்கொண்டு வந்து... படத்தை குறைந்த செலவில் 3D படமாக்கிவிட்டர்கள். சபாஷ்!. கிளாஸுக்கு கீழே விழும் கண்ணீரை ஒரு விரலால் தட்டிவிடுவது ... முடியலடா சாமி.

சரி 'லே' விமர்சனத்தை ஆரம்பிக்கிறேன்லே. உடனே புரிந்திருக்குமே இது திருநெல்வேலியின் கதை என்று...

திருநெல்வேலி என்றால் உடனே அங்கே இருக்கும் போலீஸும் பொறுக்கி என்ற தமிழ் சினிமா ஃபார்முலாவின் படி இவரும் பொறுக்கி போலீஸாக வருகிறார்.

டைட்டில் போது சின்ன வயது அண்ணன் தம்பி சண்டையிலிருந்து ஆரம்பிக்கிறது கதை. உடனே நாம் என்ன புரிந்துக்கொள்ள வேண்டும்? டைட்டில் ஆரம்பித்த சின்ன வயது சண்டை டைட்டில் முடியும் போது இவர்கள் பெரிதாகி, சண்டையும் பெரிதாகி, அக்னிநட்சத்திரம் பிரபு, கார்த்திக் மாதிரி பிறகு அப்பாவோ, அம்மாவோ ஆஸ்பத்திரியில் இருக்க, வில்லன் இவர்களை அடிக்க பழைய உண்மை ஏதாவது வெளியே வர உடனே அண்ணன் தம்பி ஒன்று சேர, இந்தத் தறுதலைகளுக்கு நல்ல, பார்க்க அழகான காதலிகள் அமைய - சுபம்!

முதலில் வில்லன் சோனு எண்டரி. நமக்கு நல்ல அறிமுகமானவர் தான். விஜயகாந்த படத்தில் தீவிரவாதியாகவும், பல தமிழ் படங்களில் சின்ன சின்ன நடிகர்களிடமும் சளைக்காமல் அடிவாங்கியவர். சிம்புவிடம் அடிவாங்குவது ஒன்றும் அவருக்கு பெரிது இல்லை. முதலில் அவரை கொடூர வில்லன் என்று காண்பிக்க ஏதோ ஒரு சிஐடி போலீஸை ஒரே அடியில் வீழ்த்திவிட்டு பணத்தை கூட்டளிகளிடம் கொடுத்து அனுப்புகிறார். சோனுவை இன்னும் ரொம்ப கொடூரமாக காண்பிக்க வேண்டும் என்று தரணி நினைத்திருப்பார் போல. அதனால் அவரையும் திருநெல்வேலி பாஷை பேச வைத்துள்ளார்.

வில்லன் கூட்டளிகள் டாட்டா சுமோவில் சோனு கொடுத்த பணத்தை எடுத்துக்கொண்டு பறக்க, நடுவில் டயர் பஞ்சராகி நிற்க டயரில் ஆணியா என்று பார்க்க 'ஆணி' இல்லை சின்ன புல்லட். உடனே கூட இருக்கும் வில்லன் இது 'ஒஸ்தி வேலன்' தான் என்று முடிவு செய்யும் போது போலீஸ் சைரனுடன் ஒஸ்தி சிம்பு ரோடு எல்லாம் இருந்தும், சுவரை உடைத்துக்கொண்டு டிரைவர் சீட்டிலிருந்து அப்படியே ஓடும் ஜீப்பிலிருந்து வெளியே குதித்து
வண்டி மீது ஏறி உட்காருகிறார் ...ஸ்லோமோஷனில். வேகமாகச் செய்தால் விழுந்துவிடுவார். தலை கூடக் கலையாமல், கண்ணடி மட்டும் லைட்டாக அசைய ஸ்டைலுக்கு அதை ஒத்தை விரலால் சரி செய்கிறார். காலை அனுராதா டின்ஸ் ஆடும் போது எடுத்துப் போடுவாரே அதே போல எடுத்துப் போட்டுவிட்டுக் கீழே இறங்குகிறார். ஹீரோ எண்டரியாம். :-)

ஒரு எடுபிடி வில்லன் அவருக்கு நேராக துப்பாகியைக் காண்பிக்க சிம்பு கவலையேபடாமல் வசனம் பேச ஆரம்பிக்கிறார். அவர் வசனம் பேசி முடித்தவுடன் பார்க்கும் நாமளே டையர்ட் ஆகி இருக்க துப்பாகி வைத்துக்கொண்டு அவர் பக்கம் இருக்கும் எடுபிடி டையர்ட் ஆகாமலா இருப்பார்? அவரும் டையர்ட் ஆன சமயம் பார்த்து சிம்பு அதே துப்பாகியை வைத்து அவரை சுடுகிறார். சுடுவதற்கு முன் .. வேற என்ன வசனம் தான்... "நான் கண்ணாடி மாதிரி என்னைப் பார்த்துச் சிரிச்சா நான் சிரிப்பேன், முறைச்சா முறைப்பேன்... " என்று சொல்லிவிட்டு எடுபடியைச் சுட அவர் இந்த வசனம் கேட்பதிலிருந்து விமோசனம் பெறுகிறார். அவரைப் பார்த்தால் நமக்குப் பொறாமையாக இருக்கிறது.

அப்போது யாரும் எதிர்ப்பார்க்காத ஒன்று நடக்கிறது. ஏதோ ஒரு மூலையிலிருந்து ஒரு துப்பாக்கிக் குண்டு வந்து பாய குண்டை பார்த்த சிம்பு லைட்டாக தலையை அசைக்க குண்டு கார் கண்ணாடியை உடைக்கிறது. உடனே சிம்பு யாரும் எதிர்பார்க்காத ஒன்றைச் செய்கிறார். கண்ணாடியைக் கழட்டுகிறார் கழட்டி இரண்டு மூன்று முறை சுற்றி மேலே போடுகிறார் அது நேராக அவர் காலர் பின்பக்கம் வந்து மாட்டிக்கொள்கிறது. அப்போது இரண்டு எடுபிடிகள் சிம்புவை "எப்படி அண்ணாச்சி இவ்வளவு பேரை சத்தமே இல்லாமல் அடித்தீர்கள்?" என்று கேட்க, தரணி நமக்கு படத்தை ரிவைண்ட் செய்து சிம்பு எப்படி பலரை சத்தமே இல்லாமல் அடித்தார் என்று காண்பிக்கிறார். மீதம் இருப்பது இரண்டு பேர்தான். சரி அவர்களை

அடித்துவிட்டு அடுத்த சீனுக்கு போவார்கள் என்று பார்த்தால் உடனே நிறைய டாட்டா சுமோக்கள் புழுதியை கிளப்பிக்கொண்டு வந்து சிம்புவைச் சூழ, இப்ப என்ன செய்ய போகிறார் என்று நாம் பரிதவிக்க "மாப்பிள்ளைகளா இப்ப நடந்தது குஸ்தி ஃபைட் - இனிமே காட்ட போவது ஒஸ்தி ஃபைட்" என்று அவர்களை அடித்து நொறுக்குகிறார். குரங்கு கூட வெட்கப்படும் அளவிற்குத் தாவுகிறார், குதிக்கிறார், பறக்கிறார்... கடைசியாக எல்லோரையும் அடித்துவிட்டு ஏதோ பஞ்ச் வசனம் பேசுகிறார். அப்போது தரணி என்று தன் பெயரை பெருமையாகப் போட்டுக்கொள்கிறார் டைரக்டர்.

சண்டைக்கு பிறகு காமெடி வரவேண்டுமே என்று நினைக்க உடனே.. சந்தானம், மயில்சாமி குழுவினர் வந்து சேருகிறார்கள். வில்லனுக்கு எடுபிடிகள் ரவுடியாக இருந்தால், ஹீரோவிற்கு எடுபிடிகள் காமெடியன்களாக இருக்க வேண்டும் என்ற தமிழ் சினிமா மரபின் படி காமடி பட்டாளம் போலீஸ் ஏட்டாக வருகிறார்கள். (காலெஜ் ஸ்டுடண்ட் என்றால் கூட இருப்பவர்களும் ஸ்டூடன்ஸ் அது மாதிரி).

காமெடிக்குப் பிறகு பாடல் வர வேண்டும்.. அச்சுபிச்சு வசனம் பேசி காமெடி என்று சொல்லிவிட்டு சிம்பு ஜீப்பை விட்டு இறங்கி ஓடுகிறார். போலீஸ் டிரஸை கழட்டி போட்டுவிட்டு டான்ஸ் காஸ்டியூமிற்கு மாறுகிறார். ஆனால் டான்ஸில் கூட கண்ணாடியை மட்டும் கழட்ட மறுக்கிறார்.

இதே மாதிரி கதையை முழுக்க இங்கே சொன்னால் அப்பறம் யாரும் படம் பார்க்கமாட்டாகள். அதனால் இத்துடன் நிறுத்திக்கொள்கிறேன்.

ஸ்டண்ட் மாஸ்டர் யார் என்று தெரியலை, ஆனால் கடைசியில் ஃபைட் கோபம் வர சிம்புவின் தசைகள் முறுக்கேற அவர் சட்டை அப்படியே கிழிந்து பறக்கிறது. 6 பேக் என்பது பேண்டுக்கு மேல் காமிக்கும் சமாசாரம் அதனால் பேண்ட் அப்படியே இருக்கிறது. சிம்புவும் தமிழ் சினிமாவின் ரீசன்ட் டிரண்ட்படி 6 பேக் காண்பிக்கிறார். 6 பேக் காண்பித்தால் அதுவே கடைசி சண்டை என்ற முடிவுக்கும் நாம் வருகிறோம்.

ரிச்சா படம் முழுக்க தன் இடுப்பையும் முதுகையும் ரிச்சாகக் காட்டிவிட்டுப் போய்விடுகிறார். இந்த எவர்சில்வர் யுகத்திலும் அவர் பானை வியாபாரியாக இருப்பது பாராட்டத்தக்கது.

படத்தில் எல்லோரும் காமெடி செய்துக்கொண்டு இருக்க, நாசர், ரேவதி மட்டும் இந்த படத்தில் எதற்கு நடித்தார்கள் என்று தெரியவில்லை. துளிக்கூட ஒட்டவே இல்லை. படம் முழுக்க எல்லோரும் திருநெல்வேலி பாஷை பேசி காமெடி செய்ய சந்தானம் மட்டும் பேசாமல் காமெடி செய்கிறார்.


இந்தியில் 'டபாங்' என்ற படத்தை தமிழுக்கு கொன்று வந்துள்ளர்கள். படத்தின் பெயரை 'டப்பா' என்று வைத்திருந்தால் இன்னும் ஒஸ்தியாக இருந்திருக்கும்.

சிவாஜி தி பாஸ். ஒஸ்தி தி மாஸ். நல்ல தமாஸ்(லே)


இட்லிவடை மார்க் 2.95/10

தாடி .. கில்லாடி பற்றி விவாதம் இங்கே...



0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger