பல லட்சம் ரூபாய் செலவழித்து செய்யப்பட்ட பிரமாண்ட பிறந்த நாள் விழாவில் ரஜினி குடும்பத்திலிருந்து யாரும் பங்கேற்காதது வருத்தத்தைத் தருவதாகவும், ஒரு ரசிகனாக இதற்கு கண்டனம் தெரிவிப்பதாகவும் நடிகர் கருணாஸ் தெரிவித்தார்.
இதனால் விழா மண்டபத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
லட்சணக்கான ரூபாய் செலவில் வள்ளுவர் கோட்டத்தில் நேற்று ரஜினியின் பிறந்த நாள் விழா நடத்தப்பட்டது. விழாவுக்கு ரஜினி வராவிட்டாலும் ரஜினியின் குடும்பத்திலிருந்து யாராவது நிச்சயம் வருவார்கள் என்று தலைமை ரசிகர் மன்றம் உறுதி அளித்திருந்ததால் மும்பை, ஹைதராபாத், பெங்களூர், டெல்லி உள்ளிட்ட நகரங்களிலிருந்தும் ரசிகர் மன்ற நிர்வாகிகள் வந்திருந்தனர்.
வந்த அனைவரும் ஏழை மக்களுக்கு வழங்க பல ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள நலத்திட்ட உதவிப் பொருள்களையும் எடுத்துவந்திருந்தனர்.
ரஜினி குடும்பத்தினர் முன்னிலையில் இந்தப் பொருள்களை வழங்க ஆசைப்பட்டனர். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. இதனால் சற்று ஏமாற்றத்துக்குள்ளாகினர் ரசிகர்கள்.
அவர்களின் மனதைப் பிரதிபலிக்கும் வகையில் நடிகர் கருணாஸ், பகிரங்கமாக ரஜினி குடும்பத்துக்கு கண்டனம் தெரிவித்தார்.
"இவ்வளவு பிரமாண்டமாக எந்த நடிகனுக்காவது விழா நடக்குமா.. ஆனால் என் தலைவனுக்கு மட்டுமாதான் நடக்கிறது. காரணம் ரசிகர்கள் அவர்மீது வைத்திருக்கும் அன்பு. இந்த விழாவுக்கு தலைவர் ரஜினி வராததில் தவறில்லை. காரணம் அவர் வந்தால் இந்த கூட்டத்தை கட்டுப்படுத்த முடிந்திருக்காது.
ஆனால் அவர் குடும்பத்திலிருந்து யாராவது ஒருவர் வந்திருக்க வேண்டுமல்லவா... இவ்வளவு பேரும் அதைத்தான் எதிர்ப்பார்க்கிறார்கள். ஆனால் எத்தனையோ நிகழ்ச்சிக்குப் போகும் ரஜினி குடும்பத்தினர் இந்த நிகழ்ச்சிக்கு வராததை நான் வெளிப்படையாகவே கண்டிக்கிறேன். நானும் ஒரு தீவிர ரஜினி ரசிகன். அவரைத் தலைவராக ஏற்றவன் என்ற உரிமையுடன் இதனை தெரிவித்துக் கொள்கிறேன்," என்றார்.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?