கேரளா மாநிலத்தில் இருந்து இதுவரை 170 தமிழர்களின் குடும்பங்கள் வலுக்கட்டாயமாக விரட்டியடிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் அடர்ந்த வனப்பகுதி வழியே நடந்து தமிழகம் வந்து சேர்ந்தனர்.
முல்லைப் பெரியாறு அணைப்பிரச்சினை காரணமாக கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம், உடும்பன்சோலை, பாப்பம்பாறை, பாரத்தோடு, கைலாசபாறை, காமாட்சிகுளம், ஆனைக்கல் மெட்டு, தூக்குப்பாலம், நெடுங்கண்டம், பகுதிகளில் வசிக்கும் தமிழர்கள் மீது அங்கு வசிக்கும் கேரளாவை சேர்ந்தவர்கள் தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.
இதனால் தோட்டத்தொழிலாளர்கள் தேவாரம் குதிரைப்பாஞ்சான்மலையின் வழியாக சதுரங்கப்பாறை, சாக்குலூத்து மெட்டு மலையடிவார பகுதிகளில் இருந்து சுமார் 8 கிலோ மீட்டர் தூரம் நடந்து தமிழகத்துக்கு வருகின்றனர். ஏற்கனவே 70 குடும்பத்தினர் விரட்டியடிக்கப்பட்ட நிலையில், நேற்று மேலும் 100 குடும்பங்களை சேர்ந்தவர்கள் வந்துள்ளனர். கடந்த 3 தினங்களாக 170 குடும்பங்களை சேர்ந்த 500க்கும் மேற்பட்டவர்கள் வந்துள்ளனர்.
தேனி மாவட்ட கலெக்டர் கே.எஸ்.பழனிச்சாமி உத்தரவின் பேரில் அவர்களை இங்குள்ள பள்ளிகளில் தங்க வைத்து மதிய உணவு, பால், ரொட்டி, போன்றவைகளை வருவாய்த்துறையினர் வழங்கி வருகிறார்கள். இவர்களுக்காக அந்த பள்ளியிலேயே சமையலும் செய்யப்படுகின்றது. மேலும் அவர்களின் விருப்பத்துக்கிணங்க சொந்த ஊர்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றனர்.
இவர்களில் வீடுகள் இல்லாதவர்கள் பற்றி வருவாய்த்துறை அலுவலர்கள் கணக்கெடுத்து தனியார் மண்டபங்களில் தங்க வைக்க ஏற்பாடு செய்து உள்ளனர். கேரளாவில் உள்ள தமிழர்களுக்கு ஏற்பட்டுள்ள பரிதாபநிலை குறித்து கேரளாவில் இருந்து வெளியேறி தேவாரத்திற்கு வந்தவர்கள் கூறியதாவது:
அழகுராணி: (உடுப்பஞ்சோலை), கேரளாவில் நாங்கள் பல ஆண்டுகளாக தங்கி எஸ்டேட்களில் வேலை செய்து வருகிறோம். இரவு நேரங்களில் குடிபோதையில் வரும் கேரளாவைச் சேர்ந்த அரசியல் கட்சியினர் வாய்க்கு வந்தபடியெல்லாம் திட்டினார்கள். இதனால் நான் பயந்தபடி இரவு நேரத்தில் யானைகளின் பயத்திற்கு இடையே எனது சிறு குழந்தையை தூக்கிக்கொண்டு வந்தேன்.
அபிலாஷ், அம்மு: (செம்மனார் எஸ்டேட்) : நாங்கள் கேரளாவில் உள்ள பள்ளிகளில்தான் படிக்கிறோம். முல்லைப்பெரியாறு அணைப் பிரச்சினையினால் எங்களை பள்ளிகளிலேயே மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்துகின்றனர். கடந்த 3 நாட்களாக ஏற்பட்ட நெருக்கடியினாலும், எங்களது குடும்பத்தினரை மலையாளிகள் கும்பல் மிரட்டியதாலும் அதிகாலையில் எழுந்து நடந்து வந்தோம். இதுபோன்ற பரிதாபநிலை வேறு யாருக்கும் ஏற்படக் கூடாது.
மணிகண்டன்(உடும்பன்சோலை): எனக்கு கேரளாவில் வாக்குரிமை உள்ளது. குடும்பத்தோடு எஸ்டேட் கூலித்தொழிலளியாக வேலை பார்க்கிறேன். முல்லைப் பெரியாறு பிரச்சினைக்கு பின்பு இங்குள்ள யூனியன்களில் கூட தமிழர்கள் என்ற காரணத்தால் புறக்கணிக்கப்படும் நிலை உள்ளது. கேரளாவை சேர்ந்தவர்கள் எங்களை விரட்டும் நோக்கத்தோடு திட்டினார்கள். எதற்கு பிரச்சினை என்று கிளம்பி வந்துவிட்டோம். மேற்கண்டவாறு அவர்கள் கூறினார்கள்.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?