அஜீத்துடன் நடிச்சாச்சு. அப்புறம் கமல் கூட நடிச்சிடணும் என்று நெற்றி வேர்வை நிலத்தில் தெறிக்கும்படி யோசித்துக் கொண்டிருக்கிறது வெங்கட்பிரபுவின் நட்பு கோஷ்டி. பெரிய நடிகர், சின்ன நடிகர், ஹிட்டு நடிகர், பிட்டு நடிகர் என்ற பாசாங்கும் இல்லாமல் பழகுகிற இவர்களுக்கு இப்படி ஒரு ஆசை வந்ததில் தப்பில்லை. ஏனென்றால் வெங்கட்பிரபு யாரை வைத்து படம் எடுத்தாலும் அதில் நாங்க இருப்போம் என்ற நம்பிக்கை அவர்களுக்கு.
அதை நிறைவு செய்துவைக்கிற கடமையும் கொண்டவர் போல கமல்ஹாசனை சந்தித்து கதை சொல்லப் போயிருக்கிறார் வெங்கட்பிரபு. போன இடத்தில் நடந்ததென்ன? அது தனி காமெடி ஷோ என்கிறார்கள் இந்த வால் பிரதர்ஸ் பற்றி ஆராய்ச்சி செய்யும் கோடம்பாக்கத்து லென்ஸ் கண்ணர்கள்.
இவர்களையும் ஒரு காரில் ஏற்றிக் கொண்டு கமலிடம் கதை சொல்லப் போயிருந்தாராம் வெங்கட்பிரபு. நல்லவேளையாக அவர்களை காருக்குள் விட்டுவிட்டு இவர் மட்டும் உள்ளே போனாராம். உலக சினிமாவையே உள்ளங் கையில் வைத்திருக்கும் கமலிடம் கதை சொல்லப் போவதென்றால் அது அவ்வளவு சுலபம் இல்லை என்பதை அந்த சந்திப்பில் புரிந்து கொண்டாராம் வெங்கட்.
இவர் எந்த ஆங்கில படத்தின் கதையை சொல்ல ஆரம்பித்தாலும், அதுவா? என்று இடையில் குறுக்கிடும் கமல், அந்த ஆங்கில படத்தையே கூட எந்த படத்தின் இன்ஸ்பிரேஷனில் எடுக்க ஆரம்பித்தார்கள் என்பதை சொல்லி அதிர வைத்தாராம். அதுமட்டுமல்ல, சம்பந்தப்பட்ட அந்த படத்தின் கடைசி லைட் மேன் பெயர் வரைக்கும் சொல்லி வெங்கட்பிரபுவை மேலும் திக்கு முக்காட வைத்தாராம். இப்படியே போன ரெண்டு மணி நேர சந்திப்பில் ஒரு ஹாலிவுட் ஸ்டுடியோவுக்குள் நுழைந்த கரட்டாம்பட்டி பஞ்சாயத்து பிரசிடென்ட் ரேஞ்சில் பேஸ்த் அடித்து வெளியே வந்தாராம் வெங்கட்.
சரி... கடைசியாக வெங்கட் பிரபு என்னதான் முடிவெடுத்தார்? 'போங்கப்பா... அவரை எந்த கதையை சொல்லியும் ஏமாத்த முடியல! '
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?