தேர்தலில் படுதோல்வியைச் சந்தித்ததால் அதிர்ச்சி அடைநத் பாமக பெண் வேட்பாளர் லதா ராசாத்தி என்பவர், எனக்குத்தான் ஓட்டுப போடவில்லையே, பிறகு எதற்கு நான் கொடுத்த சேலையை மட்டும் கட்டிக் கொண்டிருக்கிறீர்கள் என்று பெண்களைப் பார்த்துக் கேட்டதால் கொதிப்படைந்த அவர்கள் சேலைகளுடன் ராசாத்தி வீட்டில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தீபாவளிக்கு பலகாரம் செய்வது எப்படி பிரிக்க முடியாததோ அதேபோல தேர்தல்களில் வாக்காளர்களுக்குப் பணம், பொருள் கொடுப்பதும் தற்போது கண்டிப்பாகி விட்டது. ஒவ்வொரு கட்சியும் தனது தெம்புக்கேற்ற பொருட்களை, பணத்தைக் கொடுத்து வாக்காளர்களை தங்கள் பக்கம் ஈர்க்கின்றன.
நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலிலும் பணம், பொருள் விநியோகம் சிறப்பாகவே நடந்தது. இந்தக் கட்சி என்று பாகுபாடு இல்லாமல் கிட்டத்தட்ட அத்தனை பெரிய கட்சிகளுமே பணம், பொருள் விநியோகித்துள்ளன.
அந்த வகையில், கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகராட்சியில் 28வது வார்டில் போட்டியிட்ட பாமக வேட்பாளர் லதா ராசாத்தி என்பவர், வாக்காளர்களுக்கு வீடு வீடாக சேலையை அன்பளிப்பாக வழங்கி பெண்களிடம் வாக்கு சேகரித்தார். ஆனால் தேர்தலில் காங்கிரஸ் கட்சியிடம் போய் தோற்று விட்டார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த லதா ராசாத்தி, தனக்கு பெண்கள்தான் ஓட்டுப் போடவில்லை என்று கருதி தான் சேலை கொடுத்த வீட்டுக்கெல்லாம் போய், எனக்குத் தான் ஓட்டுப் போடவில்லையே, பிறகு எதற்கு நான் கொடுத்த சேலை என்று கோபத்துடன் கேட்டு அதை அத்தனை பேரும் திருப்பிக் கொடுக்குமாறு கேட்டுச் சென்றார்.
இதனால் பெண்கள் அத்தனை பேரும் அதிர்ச்சியும், ஆத்திரமும் அடைந்தனர். இதையடுத்து அத்தனை பெண்களும், தங்களது வீட்டார் மற்றும் பொதுமக்கள் சகிதம் சேலைகளை எடுத்துக்கொண்டு ராசாத்தி வீடு முன்பு திரண்டனர். அப்போது ராசாத்தி வீட்டில் இல்லை. இருந்தாலும் வந்த பிறகு சேலைகளைக் கொடுத்து விட்டுத்தான் போவோம் என்று பெண்கள் பிடிவாதமாக கூறினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து போலீஸார் விரைந்து வந்தனர். அவர்கள் அங்கு குவிந்திருந்தவர்களை கலைந்து போகுமாறு தடிகளைக் காட்டி விரட்டினர். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இருந்தாலும் ராசாத்தியைப் பார்த்து சேலையைக் கொடுக்காமல் விட மாட்டோம் என்று பொதுமக்கள் கோபத்துடன் கூறியுள்ளதால் தொடர்ந்து அங்கு பரபரப்பு நிலவுகிறது.
எதுக்கு வாங்குவானேன், எதுக்குப் போராடுவானேன்...!
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?