தன்னை சந்திக்க நேரம் கேட்ட ராஜபக்சேவை சந்திக்க அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா மறுத்து விட்டார். அதேபோல மேற்கத்திய நாடுகளின் தலைவர்கள் யாரும் ராஜபக்சேவை சந்திக்கவில்லை. இதனால் இலங்கைக்கும், ராஜபக்சேவுக்கும் பெருத்த அவமானம் ஏற்பட்டுள்ளது நியூயார்க்கில்.
ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக உலக நாடுகளின் தலைவர்கள் நியூயார்க்கில் குவிந்துள்ளனர். இவர்களில் ராஜபக்சேவும் ஒருவர். ஆனால் திருவிழாவில் காணாமல் போன குழந்தையின் நிலையில் ராஜபக்சே மற்றும் அவரது குழுவினரின் நிலை உள்ளது. நியூயார்க்கை விட்டு வெளியேறக் கூடாது என்று அமெரிக்க அதிகாரிகள் ராஜபக்சேவுக்குத் தடை போட்டு விட்டனர். இதனால் பொறியில் சிக்கிய எலி போல மாறிப் போயுள்ளார் ராஜபக்சே.
இந்த நிலையில் மேலும் ஒரு அவமானம் அவருக்குக் கிடைத்துள்ளது. அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவை சந்திக்க நேரம் கேட்டிருந்தார் ராஜபக்சே. ஆனால் நேரமில்லை என்று உடனடியாக பதில் வந்து விட்டதாம். இதனால் பெருத்த அதிர்ச்சியாகி விட்டார் ராஜபக்சே.
அதேபோல மேற்கத்திய நாடுகளின் தலைவர்களும் கூட ராஜபக்சேவை சந்திக்க மறுத்து விட்டனராம். தனியாகவெல்லாம் சந்திக்க முடியாது என்று கூறி அவர்களும் புறக்கணித்து விட்டனராம்.
இதனால் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கையும், சீன, பாகிஸ்தான் தலைவர்களையும் மட்டும் பார்த்து பேசி திருப்தியடைய வேண்டிய நிலை ராஜபக்சேவுக்கு.
அமெரிக்கா வாழ் தமிழர்கள், இலங்கையின் இனப்படுகொலை குறித்தும், போர்க்குற்றம் குறித்தும் தொடர்ந்து அமெரிக்க அரசை வலியுறுத்தி வருகின்றனர். நியூயார்க் கோர்ட்டில் ராஜபக்சேவைக் கைது செய்யக் கோரி வழக்கும் தொடரப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே ராஜபக்சேவை சந்திக்க ஒபாமா மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?