சாப்பாடு போட மகன் மறுக்கிறார் என நடிகர் லூஸ்மோகன் சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்துள்ளார்.
லூஸ்மோகன் மயிலாப்பூரில் வசித்து வருகிறார். இன்று காலை போலீஸ் நிலையத்துக்கு ஆட்டோவில் வந்த அவர் போலீஸ் கமிஷனரை சந்தித்து ஒரு புகார் மனுவை அளித்தார்.
அதில் எனது மகன் கார்த்திக், மனைவியுடன் சேர்ந்துகொண்டு சாப்பாடு போட மறுக்கிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். நான் வேறு எதுவும் கேட்க வில்லை. மூன்றுவேளை சாப்பாடு கொடுத்தால் போதும் என்று அதில் கூறப்பட்டிருந்தது.
புகார் அளித்துவிட்டு வெளியேவந்து செய்தியாளர்களிடம் லூஸ்மோகன் கூறியதாவது:
சினிமாவில் பலரை சிரிக்க வைத்த எனக்கு இப்படி ஒரு நிலை ஏற்படும் என்று நினைத்துக் கூட பார்க்க வில்லை. எனக்கு 3 மகள்களும், கார்த்திக் என்ற மகனும் உண்டு. மகள்களுக்கு திருமணமாகி விட்டது. மகனுக்கும் திருமணமாகி குழந்தை உள்ளது.
எனது மனைவி 2004-ம் ஆண்டு இறந்து விட்டார். மகனுடன் நான் தங்கி இருக்கிறேன். அவரை நான்தான் ஒரு பத்திரிகை அலுவலகத்தில் வேலைக்கு சேர்த்து விட்டேன். கடந்த 3 நாட்களாக மனைவி பேச்சை கேட்டு அவர் வீட்டுக்கு வருவதில்லை. எனக்கு சாப்பாடு வாங்கி தருவது இல்லை. வயதாகி விட்டதால் காலையில் 2 இட்லியும், இரவு 2 இட்லியும் மட்டுமே சாப்பிடுகிறேன். அதைக் கூட தர மறுக்கிறார். எனக்கு சொந்தமாக வீடு உள்ளது. அதனால் தங்குவதற்கு பிரச்னை இல்லை. என் பையன் என்னை கவனித்து சாப்பாடு மட்டும் கொடுத்தால் போதும்.
இவ்வாறு லூஸ்மோகன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
கமிஷனரிடம் இவர் அளித்த புகார் மயிலாப்பூர் போலீசாருக்கு அனுப்பப்பட்டு மேல் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக போலீஸ் கமிஷனர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?