கூட்டணிக் கட்சிகளை கழற்றி விட்டு விட்டு தனித்துப் போட்டியிட்ட அதிமுக திருச்சி மேற்கில் வெற்றி பெற்றிருப்பது புதிய திருப்பமாக பார்க்கப்படுகிறது.
திருச்சி மேற்குத் தொகுதியில் இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், திடீரென உள்ளாட்சித் தேர்தலுக்கான தேதிகளையும் மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. திருச்சி மேற்கில் எப்படியும் அதிமுகதான் போட்டியிடும் என்பதால் அதுகுறித்து அக்கூட்டணியில் இடம் பெற்றிருந்த எந்தக் கட்சியும் கவலைப்படவில்லை.
ஆனால் திருச்சி மேற்குத் தொகுதி இடைத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் முடிவடைய ஓரிரு நாட்களே இருந்த நிலையில் அதிரடியாக உள்ளாட்சித் தேர்தலில் முக்கியக் கூட்டணிக் கட்சிகளான தேமுதிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்டவற்றை கழற்றி விட்டார் ஜெயலலிதா. இதை அவர்கள் சற்றும் எதிர்பார்க்கவில்லை.
உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவதே லோக்சபா தேர்தலில் கூட்டணி பேரம் பேச முக்கியம் என்பதால் தேமுதிக, திருச்சி மேற்கு குறித்துக் கவலைப்படவில்லை. எப்படிக் கவலைப்பட்டாலும் எதுவும் நடக்கப் போவதில்லை என்ற எண்ணத்தில் இடதுசாரிகளும் அதுகுறித்துக் கவலைப்படவில்லை. சரத்குமார் உள்ளிட்ட பிற குட்டிக் கட்சிகளும் திருச்சி மேற்குப் பக்கம் திரும்பிக் கூட பார்க்கவில்லை.
இப்படி தேமுதிக, இடதுசாரிகள், சரத்குமார், புதிய தமிழகம் உள்ளிட்ட அத்தனைக் கூட்டணிக் கட்சிகளையும் படு லாவகமாக ஓரம் கட்டிய ஜெயலலிதா, திருச்சி மேற்கில் தனது கட்சியை தனித்துக் களம் இறக்கினார்.
இந்தத் தேர்தலில் தேமுதிக, பாமக, காங்கிரஸ் என வேறு யாருமே போட்டியிடவில்லை. இதனால் திமுக, அதிமுக இடையிலான நேரடி மோதலாக இது மாறியது.
இப்படி தனியாக போட்டியிட்டு அதிமுக வெற்றி பெற்றிருப்பது புதிய திருப்பமாக பார்க்கப்படுகிறது. இதன் அடிப்படையில் அடுத்தடுத்து ஜெயலலிதா காய் நகர்த்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?