காய்கறி, பழம், உணவுப் பொருட்களுக்கு தமிழகத்தை சார்ந்தே இருக்கிறது கேரளா என்பதை நாங்கள் மறுக்கவில்லை. ஆனால் கேரள மக்களின் அச்சத்தைப் போக்கவே நாங்கள் புதிய அணை கட்ட முடிவு செய்துள்ளோம் என்று கூறியுள்ளார் கேரள முதல்வர் உம்மன் சாண்டி.
பெங்களூர் வந்த சாண்டி அங்கு செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறுகையில், முல்லைப் பெரியாறு அணை 100 ஆண்டுகளைக் கடந்து விட்ட பழமையான அணை. இதனால் இடுக்கி உள்ளிட்ட மாவட்ட மக்கள் மனதில் அணை உடைந்து விடுமோ என்ற அச்சம் உள்ளது. இந்த அச்சத்தைப் போக்கவே புதிய அணை கட்ட நாங்கள் முடிவு செய்துள்ளோம்.
தமிழகத்திற்கு எதிராக நாங்கள் செயல்படவில்லை. கேரள மக்களுக்குப் பாதுகாப்பு, தமிழக மக்களுக்கு தண்ணீர் என்பதுதான் எங்களது இலக்கு.
கேரளாவில் தமிழர்கள் தாக்கப்படவில்லை. பாதுகாப்பாகவே உள்ளனர். ஆனால் சில பத்திரிகைககள்தான் திரித்துக் கூறி செய்தி வெளியிடுகின்றன.
தமிழகத்தின் 5 மாவட்ட மக்களின் வாழ்வாதாரம் முல்லைப் பெரியாறை நம்பியே உள்ளன என்பதை நாங்கள் அறிவோம். அதேபோல காய்கறிகள், பழம், உணவு ஆகியவற்றுக்கு நாங்கள் தமிழகத்தை நம்பியே உள்ளோம். இதை நாங்கள் மறுக்க விரும்பவில்லை.
தமிழகத்துடன் உள்ள நீண்ட கால நல்லுறவைப் பேணிக் காக்க விரும்புகிறோம் என்றார் சாண்டி.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?