டெஸ்ட் போட்டியை மேலும் பிரபலப்படுத்தும் வகையில் டெஸ்ட் போட்டிகளை பகல்-இரவு போட்டிகளாக நடத்த வேண்டும். மேலும் தேவையற்ற ஒருநாள் போட்டிகளை நடத்துவதை நிறுத்த வேண்டும் என்று இந்திய வீரர் டிராவிட் விருப்பம் தெரிவித்து உள்ளார்.
ஆஸ்திரேலிய சுற்றுப் பயணம் சென்றுள்ள இந்திய அணியில் இடம் பெற்றுள்ள டிராவிட், நேற்று முன்னாள் கிரிக்கெட் வீரர் பிராட்மேனின் நினைவு நிகழ்ச்சியில் பேசினார். அப்போது டெஸ்ட் போட்டிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் வகையில், பகல்- இரவு டெஸ்ட் போட்டிகளை நடத்தலாம் என்று டிராவிட் கருத்து தெரிவித்தார்.
இது குறித்து கிரிக்கெட் வீரர் டிராவிட் கூறியதாவது,
கடந்த 1985ம் ஆண்டும் கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஒருநாள் போட்டிகளின் மீது விருப்பம் இல்லாமல் இருந்தது. ஒருநாள் போட்டிகள் தேவையில்லாமல் நடத்தப்படுவதாக கிரிக்கெட் ரசிகர்கள் தெரிவித்தனர்.
ஆனால் தற்போது கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஒருநாள் மற்றும் டுவென்டி20 போட்டிகளின் மீது அதிக ஆர்வம் ஏற்பட்டுள்ளது. ஆனால் டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கவே ஒவ்வொரு கிரிக்கெட் வீரரும் விரும்புகின்றனர். டெஸ்ட் போட்டிகளின் மூலம் தான் ஒரு சிறந்த கிரிக்கெட் வீரரின் திறமைகளை அறிய முடியும்.
எனவே டெஸ்ட் போட்டிகளை பாதுகாக்க வேண்டும். அதற்காக டெஸ்ட் போட்டிகளை பகல்- இரவு போட்டிகளாக நடத்தலாம். மேலும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர்களை நடத்த ஐ.சி.சி. முன்வர வேண்டும். டெஸ்ட் போட்டிகளை பகல்- இரவு போட்டிகளாக நடத்தினால், சிவப்பு பந்தை சரியாக பார்க்க முடியாது என்பது உண்மை தான். ஆனால் கிரிக்கெட் போட்டியின் வளர்ச்சிக்கு தடையாக கிரிக்கெட் பந்தின் நிறம் தடையாக இருக்காது.
டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை 2013ம் ஆண்டு நடத்த ஐ.சி.சி. முடிவு செய்து இருந்தது. ஆனால் விளம்பர நிறுவனங்களும், ஒளிப்பரப்பு நிறுவனங்களும் சேர்ந்து டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை 2017க்கு தள்ளி வைக்க ஐ.சி.சி.க்கு நெருக்கடி கொடுத்தன.
சமீபகாலமாக ஒருநாள் போட்டிகள் அதிக அளவில் நடத்தப்படுகின்றன. அதிக அளவில் ஒருநாள் போட்டிகள் நடத்தப்படுவதால் ரசிகர்களிடம் கிரிக்கெட் ஆர்வம் குறைந்து வருகிறது.
இங்கிலாந்து, இந்தியா அணிகளுக்கு இடையிலான தொடர்கள் அடுத்தடுத்து நடத்தப்பட்டதால் போட்டிகளை காண வந்த ரசிகர்களின் எண்ணிக்கை குறைந்தது. இந்திய அணி, இங்கிலாந்து சென்று விளையாடிய போது ரசிகர்களிடையே ஆர்வம் இருந்தது. அடுத்த வாரத்திலேயே அதே இரு அணிகளும் மீண்டும் மோதியதால், ரசிகர்கள் இடையே போட்டியை காணும் ஆர்வம் குறைந்தது.
இதன் மூலம் கிரிக்கெட் போட்டிகளுக்கு வரவேற்பு குறைந்து வருவதை காண முடிந்தது. எனவே உலகப் கோப்பை போன்ற முக்கிய போட்டிகள் தவிர தேவையற்ற ஒருநாள் தொடர்களை நடத்துவதை நிறுத்த வேண்டும்.
கிரிக்கெட் போட்டிகளை ரசிகர்கள் டிவியில் பார்ப்பதால், கிரிக்கெட் மைதானத்தில் உள்ள பார்வையாளர்கள் பகுதி வெறிச்சோடி கிடக்கும் நிலை ஏற்படும். இதனால் கிரிக்கெட் போட்டியின் மீது உள்ள விளம்பர நிறுவனங்களின் ஆர்வமும் எதிர்காலத்தில் குறைய வாய்ப்பு உள்ளது, என்றார்.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?