சென்னை வந்திருந்த அன்னா ஹசாரே இந்தியில் பேசியது புரியாததால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. இதையடுத்து அன்னாவின் பேச்சு மொழிபெயர்த்துச் சொல்லப்பட்டது.
நேற்று அன்னா ஹசாரே சென்னைக்கு வந்திருந்தார். பச்சையப்பன் கல்லூரி மைதானத்தில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் பேசினார்.
முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி சந்தோஷ் ஹெக்டே, எல்லோருக்கும் வணக்கம் என்று தமிழில் ஆரம்பித்து ஆங்கிலத்தில் பேசினார். தொடர்ந்து கிரண் பேடி பேசினார். இதையடுத்து அன்னா பேசினார்.
வணக்கம் என்று தமிழில் கூறி விட்டு இந்திக்குத் தாவினார் அன்னா. தன்னால் தமிழில் பேச முடியாததற்காக வருத்தப்படுவதாக கூறி விட்டு இந்தியில் தொடர்ந்து பேசினார் அன்னா.
அன்னா பேசுகையில், எனது போராட்டங்கள் மூலம் 6 அமைச்சர்களின் பதவி பறிபோயுள்ளது. லோக்பால் தொடர்பாகமத்திய அரசு எங்களை பலமுறை முட்டாளாக்கியுள்ளது. இளைஞர்கள், மக்களின் சக்தியுடன் எனது போராட்டம் வெல்லும்.
வருகிற 26ம் தேதி ஜன் லோக்பால் மசோதாவை வலியுறுத்தி உண்ணாவிரதம் இருக்கப் போகிறேன். அதுவும் சரிப்பட்டு வராவிட்டால் சிறை நிரப்பும் போராட்டம் நடைபெறும் என்றார் அன்னா.
முதலில் அன்னா இந்தியில் தொடர்ச்சியாக பேசினார். இதனால் அவர் பேசுவது யாருக்கும் புரியவில்லை. இதனால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. பலர் கிளம்பிச் செல்ல ஆரம்பித்து விட்டனர். இதையடுத்து அன்னா தனது பேச்சை நிறுத்தினார். கிரண் பேடி மைக்கைப் பிடித்து அனைவரும் அமைதியாக அமருங்கள். உங்களுக்காகத்தான் அன்னா வந்துள்ளார். அவரது பேச்சு தமிழில் மொழிபெயர்க்கப்படும் என்றார். இதையடுத்து கூட்டத்தில் அமைதி திரும்பியது.
பின்னர் அன்னா நிறுத்தி நிறுத்திப் பேச அவரது பேச்சு மொழிபெயர்த்துச் சொல்லப்பட்டது.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?