"இரண்டு திராவிட கட்சிகளுடன் இனி மேல் கூட்டணி இல்லை' என்ற, பா.ம.க., நிறுவனர் ராமதாசின் அறிவிப்பைத் தொடர்ந்து, அவரது மகன் அன்புமணி, "சட்டசபை தேர்தலில் தி.மு.க., குடும்ப அரசியலால் தான் தோல்வி அடைந்தோம்' என, சரவெடியைக் கொளுத்திப் போடவும், தி.மு.க., - பா.ம.க., இடையே முட்டல் மோதல் ஆரம்பமாகியுள்ளது.
தி.மு.க., கூட்டணியை விட்டு வெளியேறிய பின், அக்கட்சியை சீண்டிப் பார்த்த அன்புமணிக்கு பதிலடி தரும் வகையில், தி.மு.க., முன்னாள் அமைச்சர் பொன்முடி அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
அதில், அவர் கூறியிருப்பதாவது:தி.மு.க.,வின் தயவால் எம்.பி., மத்திய அமைச்சர் பதவி வகித்த அன்புமணிக்கு நன்றி வேண்டாம். ஆனால், கடந்த காலத்தை மறந்து விட்டு, கண்ணாடி வீட்டில் இருந்து கொண்டு கல்லெறியக் கூடாது. குடும்ப ஆதிக்கத்தைப் பற்றி அவர் பேசலாமா?ராமதாஸ் மகன் அன்புமணி முன்னாள் மத்திய அமைச்சர். ராமதாசின் அக்காள் மகன் தன்ராஜ் முன்னாள் எம்.பி., அன்புமணியின் மாமனார் கிருஷ்ணசாமி இப்போது எம்.பி., அன்புமணியின் அம்மா சரஸ்வதி வன்னியர் சங்க டிரஸ்ட் நிர்வாகி. அன்புமணியின் மைத்துனர் விஷ்ணுபிரசாத் முன்னாள் எம்.எல்.ஏ., அன்புமணியின் சித்தப்பா சீனுவாசன், சமீப காலம் வரை பா.ம.க.,வில் ஒரு தூண், இன்று காங்கிரஸ். அரசியலில் கொஞ்சமாவது நாவடக்கம் வேண்டும். நீங்கள் அ.தி.மு.க.,வுடன் அணி சேர்ந்து பார்லிமென்ட் தேர்தலில் ஏழு இடங்களில் நின்றீர்களே. எத்தனை இடத்தில் வென்றீர்கள் என்பதை எண்ணிப் பார்த்து பேசுங்கள்.இவ்வாறு பொன்முடி கூறியுள்ளார்.
இந்த அறிக்கை வெளியிட்ட மறுநாள், பொன்முடிக்கு பதிலடி தரும் வகையில், பா.ம.க., தலைவர் கோ.க.மணி ஒரு அறிக்கையை வெளியிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
சட்டசபை தேர்தலில் தி.மு.க., தோல்விக்கு தி.மு.க., குடும்ப ஆதிக்கம் தான் காரணம் என்ற உண்மையை, அன்புமணி ராமதாஸ் சொன்னதை அவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. குடும்ப ஆதிக்கம் தான் காரணம் என, அன்புமணிக்கு முன் ஸ்டாலின் குற்றம் சாட்டியிருந்தும், கோவையில் நடைபெற்ற தி.மு.க., பொதுக்குழுக் கூட்டத்தில், இதே கருத்தை வலியுறுத்த வேண்டும் என்று, தன் ஆதரவாளர்களுக்கு அவர் ஆணையிட்டிருந்தது பொன்முடிக்கு தெரியாது போலிருக்கிறது.
நண்பர் பொன்முடிக்கு நாவடக்கம் தேவை. விழுப்புரம் மாவட்டத்தில் பொன்முடி மனைவி படத்தையோ, மகன் படத்தையோ போடாமல் தி.மு.க.,வினர் எவரேனும் சுவரொட்டிகள் அச்சிட்டு விட முடியுமா? அவ்வாறு அச்சிட்டால் அதன் பின்னர் அவர்கள் கட்சியில் நீடிக்க முடியுமா? தி.மு.க.,வுக்காக பொன்முடியின் மனைவியும் மகனும் செய்த தியாகம் என்ன?
இவ்வாறு மணி கூறியுள்ளார்.
அறிக்கைகள் மூலம் தி.மு.க., - பா.ம.க., அக்கப்போர் நீடித்து வரும் நிலையில், உள்ளாட்சி தேர்தலில் ம.தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சிகளுடன் கூட்டணி வைக்கவும் ராமதாஸ் திட்ட மிட்டுள்ளார். "திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி சேர மாட்டோம்' என ராமதாஸ் கூறியுள்ளதால், ம.தி.மு.க., தரப்பில் ராமதாசின் கருத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. "நாங்களும் தீவிர திராவிடக் கட்சி தான். அப்படி என்றால் நாங்கள் எப்படி ராமதாசுடன் கைகோர்க்க முடியும்' என்ற கேள்வியை ம.தி.மு.க.,வினர் எழுப்பியுள்ளனர்.
திருமாவளவனும் பா.ம.க.,வுடன் கூட்டணி அமைக்க விரும்பவில்லை. காரணம், ராமதாசை கூட்டணியின் தலைவராக ஏற்கும் பட்சத்தில், பா.ம.க., வில் உள்ள பொன்னுசாமி, வடிவேல் ரமணன் போல தனது நிலை உருவாகி விடும் என, திருமாவளவன் கருதுகிறார்.
அதேசமயம் கூட்டுத்தலைமை என்றால், கூட்டணி முடிவை திருமாவளவன் பரிசீலனை செய்வார் என்ற மற்றொரு கருத்தும் நிலவுகிறது. இதற்கிடையில், தி.மு.க., கூட்டணியை விட்டு காங்கிரஸ் வெளியே வருமானால், அக்கட்சியுடன் சேர்ந்து கூட்டணி வைக்கும் மற்றொரு கணக்கையும் ராமதாஸ் கணித்துள்ளார்.
இது குறித்து பா.ம.க.,வின் முன்னாள் எம்.எல்.ஏ., ஒருவர் கூறியதாவது:
பா.ம.க.,வுக்கு சோதனை யான காலம் ஆரம்பித்து விட்டது. தி.மு.க.,வும் இனிமேல் எங்களை சேர்க்கப் போவதில்லை. அ.தி.மு.க., கதவும் எங்களுக்கு திறக்காது. இரு கட்சிகளும் கை கழுவியதால், நாங்கள் நடுத்தெருவில் நிற்கிறோம்.
திருமாவளவனை பொறுத்தவரை, பா.ம.க.,வை எதிர்த்து தான் கட்சி வளர்த்தார். எனவே, அவரும் ராமதாஸ் தலைமையை ஏற்று கூட்டணி வைக்க முன்வரமாட்டார்.
திராவிடக் கட்சிகளை ராமதாஸ் வெறுக்கும் போது, ம.தி.மு.க.,வின் ஆதரவும் எங்களுக்குக் கிடைக்காது. காங்கிரசை பொறுத்தவரையில், மத்திய அமைச்சர் பதவியை கடைசி வரை அனுபவித்து விட்டு தான் வெளியே வந்தோம். அதனால், அவர்களும் எங்களுடன் கூட்டணி வைக்க விரும்ப மாட்டார்கள். எனவே, உள்ளாட்சி தேர்தலில் தனிமரமாக தான் நிற்போம். கடை விரித்தும் கொள்வார் யாரும் இல்லை என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.
http://sirappupaarvai.blogspot.com
http://sirappupaarvai.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?