ராஜீவ் கொலையாளிகள் மூன்று பேரின் தூக்குத்தண்டனைக்கான கருணை மனுக்களை குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டில் நிராகரித்து விட்டதற்கு வருத்தம் தெரிவித்து, மூன்று பேரின் தூக்கு தண்டனையைக் குறைக்க வலியுறுத்துமாறு முதல்வருக்கு வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் மேலும், ''இருபது ஆண்டுகளாக சிறைக் கொட்டடியில் வாடி வதங்கி, வாழ்வின் அற்புதமான வாலிபப் பருவத்தைத் துன்ப இருளில் பறிகொடுத்து விட்ட, மூன்று தமிழ் இளைஞர்களின் உயிரை முடிக்க, அவர்களுக்குத் தூக்குத் தண்டனையை இந்திய அரசு உறுதிப்படுத்தியது என்ற செய்தி, இதயத்தை வாள் கொண்டு பிளக்கிறது.
ஜனநாயக உரிமைகளை அடியோடு பறித்துக் கொண்ட எதேச்சாதிகாரச் சட்டமான, தடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, பொலிஸாரின் சித்திரவதை மூலமாக, அச்சுறுத்தலால் பெறப்பட்ட ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில், தடா சிறப்பு நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்டு இருந்த 41 பேரில், 26 பேருக்குத் தூக்குத்தண்டனை என்று தீர்ப்பு அளித்தது.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சிலர் பெங்களூரில் தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டார்கள். பேரறிவாளன், சாந்தன், முருகன் எனும் இம்மூவரும் 'திருபெரும்புதூர் கொலைச் சம்பவத்தில், குற்றவாளிகள் அல்லர் என்பதுதான் உண்மை' ஆகும்.
எனவே, நிரபராதிகளின் உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில், பழ. நெடுமாறன் உயிர்காப்பு அமைப்பின் தலைவராக, இந்த வழக்கின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில், வழக்கறிஞர் நடராசன் மூலமாக வழக்கை நடத்த ஏற்பாடு செய்தார்.
1999 மே மாதம், உச்சநீதிமன்றம், 19 பேரை விடுதலை செய்தது; மூன்று பேருக்கு ஆயுள் தண்டனை விதித்தது; முருகன், சாந்தன், நளினி, பேரறிவாளன் நால்வருக்கும் மரண தண்டனையை உறுதி செய்தது.
அதை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மறு ஆய்வு தள்ளுபடி செய்தது.
தமிழக ஆளுநர் பாத்திமா பீவி அவர்களிடம் கருணை மனு தாக்கல் செய்யப்பட்டது. அவர், தமிழக அரசின் கருத்தைப் பெறாமலேயே, தாமாகவே கருணை மனுவைத் தள்ளுபடி செய்து விட்டார்.
அரசாங்கத்தின் கருத்தைத்தான் ஆளுநர் பிரதிபலிக்க முடியுமே தவிர, தாமாக முடிவு எடுக்க சட்டத்தில் இடம் இல்லை' என்று, உயர்நீதிமன்றத்தில் நெடுமாறன் தொடுத்த வழக்கில், வழக்கறிஞர் சந்துரு வாதாடினார்.
ஆளுநர் தாமாக முடிவு எடுக்க முடியாது' என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.
இதன் பின்னர், நளினியின் மரண தண்டனையைக் குறைக்க வேண்டும் என்று, குடியரசுத் தலைவர் நாராயணனிடம் கருணை மனு சமர்ப்பிக்கப்பட்டது.
2001 ஆம் ஆண்டு, நான்கு பேரின் மரண தண்டனையை ரத்து செய்வதற்கும், அவர்களின் கருணை மனுவை ஏற்க வேண்டியும், நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பங்களைப் பெற்று, நானும், நெடுமாறனும், பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய், உள்துறை அமைச்சர் எல்.கே. அத்வானி ஆகியோரை நேரில் சந்தித்து, முறையீட்டுக் கடிதங்கள் கொடுத்தோம்.
உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி வி.ஆர். கிருஷ்ணய்யர், பிரதமர் மன்மோகன் சிங்'குக்கு எழுதிய கடிதத்தில், 'உலகில் 135 நாடுகளில் மரண தண்டனை ஒழிக்கப்பட்டு விட்டது; பேரறிவாளனின் துன்ப நிலையைச் சுட்டிக்காட்டி, மரண தண்டனையை ரத்து செய்ய வேண்டும்' என்று கேட்டுக் கொண்டார்.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் டாக்டர் மன்மோகன் சிங் அரசின், உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரையின் பேரில், நளினிக்கு மரண தண்டனை ரத்து செய்யப்பட்டு, ஆயுள் தண்டனையாக, குடியரசுத் தலைவரால் குறைக்கப்பட்டது.
மரண தண்டனை விதிக்கப்பட்டு உள்ள பேரறிவாளன், இரண்டு பேட்டரி செல்கள் கடையில் வாங்கிக் கொடுத்தார், என்பதுதான் குற்றச்சாட்டு ஆகும். சதியிலும், குற்றத்திலும், அவருக்குப் பங்கு இருப்பதாகச் ஜோடிக்கப்பட்ட வழக்கில்,தண்டிக்கப்பட்டு இருக்கின்றார்.
2011 ஆகஸ்ட் 2 ஆம் நாள், டாக்டர் மன்மோகன் சிங்கை நானும், நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி அவர்களும் சந்தித்து, 'குற்றம் புரியாமலேயே, 19 வயதில் கைது செய்யப்பட்ட பேரறிவாளனின் இருபது ஆண்டு இளமைக் காலம், சிறை எனும் நரகத்தில் அழிக்கப்பட்டு விட்டதால், கருணை உள்ளத்தோடு, மனிதாபிமானத்தோடு, மரண தண்டனையை ரத்து செய்யுமாறு வேண்டுகோள் கடிதத்தை நேரில் சந்தித்துக் கொடுத்தோம்.
உள்துறை அமைச்சருக்கு அனுப்பி வைப்பதாக' பிரதமர் கூறினார். அன்று மாலையிலேயே உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் அவர்களைச் சந்தித்து, மரண தண்டனையை ரத்துச் செய்வதற்கான கோரிக்கை மனுவைக் கொடுத்ததோடு, பேரறிவாளன், முருகன், சாந்தன் மூவரின் மரண தண்டனையையும் மனிதாபிமானத்தோடு ரத்து செய்ய வேண்டும் என்று அவரிடத்தில் கேட்டுக் கொண்டோம். உள்துறை அமைச்சர் எதுவும் சொல்லவில்லை.
எவ்விதத்திலும், மரணக் கொட்டடியில் இருந்து மூவரையும் மீட்டு விட முடியும் என்ற எனது நம்பிக்கையில் இடி விழுந்து விட்டது.
மரண தண்டனையை உறுதி செய்து உள்துறை அமைச்சகம் அனுப்பிய பரிந்துரையின் பேரில், கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்டு, மூவருக்கும் தூக்குத்தண்டனையைக் குடியரசுத் தலைவர் உறுதி செய்து விட்டதாக, ஒரு ஆங்கிலப் பத்திரிகையில் வெளியான செய்தியைப் பார்த்து, நெஞ்சம் துடிதுடித்துப் போன நான், உள்துறை அமைச்சரைச் சந்திக்க எவ்வளவோ முயன்றும் வாய்ப்புக் கிடைக்கவில்லை.
ஜனநாயக விரோத தடா சட்டத்தின்கீழ், பொலிஸ் சித்திரவதை மூலம் பெற்ற ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில், வழங்கப்பட்ட தீர்ப்பு, நீதியின்பாற்பட்டதா? என்பது ஒரு கேள்வி.
மரண தண்டனை விதிக்கப்பட்ட நான்கு பேரில், ஒருவருக்கு தண்டனையை ரத்துச் செய்துவிட்டு, மற்ற மூவருக்கு மரண தண்டனையை நிறைவேற்ற முடிவு எடுப்பது நியாயம்தானா?
இந்தியாவில் கடைசியாக, 2004 ஆம் ஆண்டு, மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த அர்ஜூன் சட்டர்ஜி என்பவர், ஒரு சிறுமியைக் கற்பழித்துக் கொலை செய்த வழக்கில், அவருக்குத் தூக்குத்தண்டனை நிறைவேற்றப்பட்டது. அதன்பிறகு இந்தியாவில் இதுவரை, எவருக்கும் தூக்குத்தண்டனை நிறைவேற்றப்படவில்லை.
1995 க்குப் பிறகு, கடந்த 17 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் ஒருவரும் தூக்கில் இடப்படவில்லை. இந்தப் பின்னணியில், பேரறிவாளன், சாந்தன், முருகன் மூவருக்கும், விதிக்கப்பட்டு உள்ள தூக்குத்தண்டனையை ரத்துச் செய்வதற்கு, இன்றைய நிலையில் கூட மத்திய அரசால் முடியும். கருணை மனுவை நிராகரித்து, ஒருவருக்குக் குடியரசுத் தலைவர் தூக்குத்தண்டனையை உறுதி செய்தாலும்கூட, அதற்குப் பின்னரும், மத்திய அரசு, அந்தத் தண்டனையை நிறுத்தி வைத்து, ரத்து செய்வதற்கு அதிகாரம் இருக்கின்றது. இதற்கு முன்னுதாரணங்கள் உள்ளன.
இந்த மூன்று இளம் தமிழர்களின் உயிரைப் பாதுகாக்க, அவர்களுக்கு விதிக்கப்பட்டு இருக்கின்ற தூக்குத்தண்டனையை இரத்துச் செய்வதற்கு உரிய நடவடிக்கைகளை, கருணை உள்ளதோடு மேற்கொள்ள வேண்டுமென, தமிழக முதல் அமைச்சரை வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்'' என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்.
http://maangaai.blogspot.com
http://maangaai.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?