இலங்கையில் தமிழ் ஈழம் மலரும் என்றால், ஆட்சியை இழக்கக்கூட நாங்கள் தயார் என்று அறிவித்தவன் நான், என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
இது தொடர்பாக, தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி - பதில் வடிவிலான அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கேள்வி:- கேரள முதல்-அமைச்சர் மீது விஜிலன்ஸ் குற்றச்சாட்டு என்றதும், விஜிலன்ஸ் பொறுப்பில் இருந்து உடனடியாக விலகிக் கொண்டிருக்கிறாரே?.
பதில்:- அது கேரளா. இங்கே தமிழ்நாட்டில் உள்ள முதல் அமைச்சர் மீது விஜிலென்ஸ் துறை சார்பில் பெங்களூருவில் சொத்துக் குவிப்பு வழக்கு பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இவர் மீது விஜிலென்ஸ் விசாரணை நடந்து கொண்டிருக்கும் போது, இவரே அந்தத் துறையை வகிப்பது முற்றிலும் நியாயமல்ல.
கேள்வி:- ஜெயலலிதா உயிரோடு இருக்கும் வரையில், அவர்தான் அந்தக் கட்சியின் நிரந்தரப் பொதுச் செயலாளர் என்று பேரவையில் ஜெயலலிதாவே அறிவித்துக் கொண்டிருக்கிறாரே?.
பதில்:- "இந்த நூற்றாண்டின் இணையற்ற ஜனநாயகவாதி'' என்று அமைச்சர்கள் எல்லாம் தலைப்பிட்டு மாலை ஏடுகளில் விளம்பரம் செய்யலாம்.
கேள்வி:- பேரவையில் வணக்கம் சொல்ல பேரவைத் தலைவர் மறந்து விட்டதாக ஏடுகளில் ஒரு செய்தி வந்திருக்கிறதே?.
பதில்:- தி.மு.க. ஆட்சிக் காலத்தில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஜெயலலிதா அன்றைய பேரவைத் தலைவர் ஆவுடையப்பன் தனக்கு வணக்கம் செய்யவில்லை என்று ஒரு புகாரைக் கூறினார். உடனே பேரவைத் தலைவராக இருந்த ஆவுடையப்பன் தான் வணக்கம் செலுத்துகின்ற புகைப்படத்தை காட்டி, தான் வணக்கம் செலுத்தினேன் என்று பதில் அளித்தார்.
இப்போது தனது ஆட்சிக்காலத்திலும், பேரவைத் தலைவர் வணக்கம் செலுத்த மறந்த நிலையில் அதை ஜெயலலிதாவே ஞாபகப்படுத்தி, பேரவைத் தலைவர் உடனடியாக அதைக் கேட்டு வணக்கம் செலுத்தி, ஏடுகளில் செய்தி வெளியிட் டிருக்கிறார்கள். அவ்வளவுதான்.
கேள்வி:- சரியான கேள்வியை பேரவையில் கேட்க பேரவைத் தலைவர் தவறி விட்டதாக - இது "பேரவைத் தலைவரின் தவறு'' என்று முதல்-அமைச்சர் ஜெயலலிதா அவையிலேயே சுட்டிக்காட்டியிருக்கிறாரே, அவ்வாறு பேரவைத் தலைவர் மீது அவையிலே குற்றஞ் சாட்டலாமா?.
பதில்:- உறுப்பினர்கள் கேட்கின்ற கேள்விகளைத்தான் பேரவைத் தலைவர் தேர்ந்தெடுக்க வேண்டும். உறுப்பினர் முதன் முதலாக கேள்வி கேட்கிறார். அவருக்கு அரசின் சார்பில் சாதகமான பதிலைச் சொல்கின்ற கேள்வியைத்தான் பேரவைத் தலைவர் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதெல்லாம் எந்த விதியின் கீழ் என்பதுதான் தெரியவில்லை. அது மாத்திரமல்ல. உறுப்பினர்களுக்கு பேரவை விதி முறைகள் தெரியவில்லை என்றும், அதைப் பேரவைத் தலைவர் சொல்லிக் கொடுத்திருக்க வேண்டும், அதை அவர் செய்யாததால் முதல் அமைச்சரே செய்ய வேண்டியிருக்கிறது என்றும் முதலமைச்சர் நொந்து கொண்டிருக்கிறார்.
கேள்வி:- தி.மு.க. ஆட்சியிலே இலங்கைத் தமிழர்களுக்காக நீங்கள் மேற்கொண்ட நடவடிக்கைகளை யெல்லாம் பேரவையில் ஜெயலலிதா சுட்டிக் காட்டி, அவைகள் எல்லாம் "கண் துடைப்பு நாடகங்கள்'' என்று குறிப்பிட்டிருக்கிறாரே?.
பதில்:- 1956-ம் ஆண்டிலேயே சிதம்பரம் தி.மு.க. பொதுக்குழுவிலே அண்ணா முன்னிலையில் இலங்கைத் தமிழர்களுக்கான தீர்மானத்தை முன்மொழிந்தவனே நான்தான்!. 24-8-1977 அன்று சென்னை மாநகரிலே ஒரேநாள் அறிவிப்பில் 5 லட்சம் பேரைத் திரட்டி இலங்கைத் தமிழர் பிரச்சினைக்காக பிரம்மாண்டப் பேரணி நடத்தக் காரணமாக இருந்தவனும் நான்தான்!.
2006-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு மாத்திரம் 7-12-2006 அன்றும், 23-4-2008 அன்றும், 12-11-2008 அன்றும், 23-1-2009 அன்றும் இலங்கைத் தமிழர் பிரச்சினைக்காக பேரவையில் தீர்மானங்களை முன் மொழிந்தது நான்தான். 14.10.2008 அன்று இலங்கைத் தமிழர் பிரச்சினைக்காக தலைமைச் செயலகத்தில் அனைத்துக்கட்சித் தலைவர்களின் கூட்டத் தைக் கூட்டியதும் நான்தான்.
15.10.2008 அன்று பிரதமருக்கு இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்து கடிதம் எழுதியதும் நான்தான். 13.11.2008 அன்று உணவுப் பொருட்கள், துணிவகைகள் மற்றும் மருந்து பொருட்களை இலங்கைத் தமிழர் களுக்காக கப்பல் மூலம் அனுப்பி வைத்ததும் நான்தான். 2009-ம் ஆண்டு இலங்கைத் தமிழர்களுக் காக சட்டப் பேரவையில் தீர்மானம் கொண்டு வரப்பட்ட போது - இலங்கையிலே தமிழ் ஈழம் மலரும் என்றால், அதற்காக ஆட்சியை இழக்கக் கூட நாங்கள் தயார் என்று அறிவித்தவன் நான்தான்.
கேள்வி:- அப்துல் கலாமை இரண்டாவது முறையாக குடியரசு தலைவராக விடாமல் தடுத்தது நீங்கள்தான் என்று விஜயகாந்த் பேசியிருக்கிறாரே?.
பதில்:- பைத்தியக்காரர்களின் உளறலுக்கெல்லாம் பதில் சொல்லி காலத்தையும் கண்ணியத்தையும் வீணாக்க நான் விரும்பவில்லை. நான் எழுதிய "தொல்காப்பியப் பூங்கா'' புத்தகத்திற்காக - "தொல்காப்பியர்'' விருதினை எனக்கு வழங்கி - அந்த விழாவில் அவர் ஆற்றிய உரையையும் அறியாதவர்கள் இப்படியெல்லாம் சொல்கிற பொய்யை யார் நம்புவார்கள்?.
இவ்வாறு அறிக்கையில் கருணாநிதி கூறியுள்ளார்.
http://sirappupaarvai.blogspot.com
http://sirappupaarvai.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?