Wednesday 21 December 2011

சசிகலா நீக்கம் எதிரொலி - சோவின் துக்ளக் அலுவலகத்துக்கு போலீஸ் பாதுகாப்பு!!

 
 
 
 
 
அதிமுகவிலிருந்தும் போயஸ் தோட்டத்திலிருந்து சசிகலா வெளியேற்றப்பட்டதைத் தொடர்ந்து மூத்த பத்திரிகையாளர் சோ எஸ் ராமசாமியின் அலுவலகத்துக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
 
ஜெயலலிதாவிடமிருந்து சசிகலாவைப் பிரித்து வெளியேற்றியதில் துக்ளக் ஆசிரியர் சோவின் பங்கு பெரிது என மீடியாவில் வெளிப்படையாகவே விவாதிக்கப்பட்டு வருகிறது.
 
இதுகுறித்து சமீபத்தில் அவரிடம் நாளிதழ் ஒன்று கேள்வி எழுப்பிய போதும், அதை மறுக்கவில்லை சோ. "என் பங்களிப்பு இருந்திருந்து, அது நல்லதென்றால் பாராட்டுங்கள். கெடுதல் என்றால் திட்டிக் கொள்ளுங்கள்," என்றே கூறியுள்ளார்.
 
சசிகலா போயஸ் தோட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்டபோது வேதா இல்லத்தில் சோவும் இருந்தார் என்றும் ஒரு தரப்பினர் கூறுகின்றனர்.
 
இதனால் சசிகலா ஆதரவாளர்கள் கோபம் முழுவதும் சோ மீது திரும்பியுள்ளதாகக் கருதப்படுகிறது.
 
சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ளது சோவின் துக்ளக் அலுவலகம். கடந்த திமுக ஆட்சியில் இந்த அலுவலகம் எந்தப் பரபரப்புமின்றி அமைதியாகக் காணப்பட்டது. ஆட்கள் நடமாட்டம், போலீஸ் தலைகள் எதையும் அங்கே பார்க்க முடியாது.
 
ஆனால் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்ததும், சோவின் அலுவலகத்துக்கு விசேஷ அந்தஸ்து கிட்டியது. புதிதாக போலீஸ் பாதுகாப்பு தரப்பட்டது. இரண்டு காவலர்கள், ஒரு அதிகாரி என மிதமான பந்தோபஸ்து அளிக்கப்பட்டது.
 
முதல்வர் பதவியேற்பு விழா, முக்கிய நிகழ்ச்சிகளில் சோவும் உடன் இருந்தார். எனவே, ஆளுங்கட்சியின் முக்கிய பிரமுகர்கள் அவ்வப்போது வந்து போகும் இடமாக சோ அலுவலகம் காட்சியளிக்கத் தொடங்கியது.
 
இப்போது சசியின் வெளியேற்றத்தின் பின்னணியில் முழுக்க முழுக்க சோவே இருப்பதாக கருதப்படுவதால், அவரது அலுவலகத்துக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
 
இதுகுறித்த துக்ளக் ஆசிரியர் சோஅளித்த பதில்:
 
"போலீஸ் பாதுகாப்பு அதிகப்படுத்தப்பட்டிருப்பது உண்மைதான். ஆனால் அதன் பின்னணி என்று ஒன்றுமில்லை. அதிமுக ஆட்சிக்கு வந்தபிறகு துக்ளக் அலுவலகத்துக்கு போலீஸ் பாதுகாப்பு கொடுத்தார்கள். இப்போது ஓரிரு அதிகாரிகள் கூடுதலாக வருகிறார்கள் என்று நினைக்கிறேன். இதில் விசேஷமாக ஒன்றுமில்லையே!" என்றார்.



0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger